என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள்
    X
    நெடுவாசலில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம்: நெடுவாசலில் கிராம மக்கள் ஆலோசனை

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து நெடுவாசலில் இன்று போராட்டக்காரர்கள், முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் ஆலோசனை நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் வடகாடு, கோட்டைக்காடு மற்றும் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் நடைபெற்றது.



    இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் போராட்ட குழுவுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 9ம் தேதி நெடுவாசலில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவியது.

    இந்நிலையில் கடந்த மாதம் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார்.

    இதனால் நெடுவாசல் பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த பசுமை வீடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்ய நடத்தப்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நெடுவாசல், வடகாடு, கொத்தமங்கலம், அனவயல், கோட்டைக்காடு உட்பட பல்வேறு ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்நிலையில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கடந்த 6ம் தேதி வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினத்தன்று கரூர் மாவட்டம், வானகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து இன்று நெடுவாசலில் போராட்டக் குழுவினர் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 75 கிராமங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அவர்கள் போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.


    Next Story
    ×