என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் தங்களது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ந்தேதி இந்த தர்ணா போராட்டம் தொடங்கியது. இதில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்றும் 13-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.  
    ஹைட்ரோ கார்பன் திட் டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் மண்டியிட்டு போராட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா நெடுவாசலில் மத்திய அரசு சார்பில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் நடந்த தொடர் போராட்டம் கடந்த மாதம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

    ஆனாலும் நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய கிராமங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அளித்த உறுதிமொழியை ஏற்று அங்கு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது.

    மத்திய அரசு பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை ஏமாற்றி விட்டதாக கூறி நெடுவாசலில் கடந்த 12-ந்தேதி முதல் மீண்டும் போராட்டம் தொடங்கியது. நாளுக்கு நாள் போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகிறது.

    நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே தினமும் திரளும் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி நேற்று 12-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சிறுவர்கள், பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மண் தரையில் மண்டியிட்டவாறு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயத்தை அழிக்காதே என்றும் அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாலைமறியல் போராட்டத்தில் நான்கு பெண்கள் உட்பட 52 பேர் கைது செய்யப்ட்டனர்.
    புதுக்கோட்டை:

    ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர். அதனொரு பகுதியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டது. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.

    இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் கூடிய வாலிபர் சங்கத்தினரை கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டினர். தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற வாலிபர் சங்கத்தினரை வடகாடும் முக்கம் என்ற இடத்தில் போலீசார் மறித்து கைதாகுமாறு வலியுறுத்தினர். ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனக்கூறி போலீசாருடன் சங்கத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமை வகித்தார். நான்கு பெண்கள் உட்பட 52 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்

    கந்தர்வக்கோட்டை அருகே பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்தர்வக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த பி.அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது50). அதே பகுதியை சேர்ந்த ராமநாதன், தியாகராஜன் ஆகிய மூன்று பேரும் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு விரதம் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மூன்று பேரும் வைத்தீஸ்வரர் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். பழைய கந்தர்வக்கோட்டை பகுதியில் நடந்து சென்ற போது கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கேயன் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள தினகரனும் சிறைக்கு செல்வார் என்று எச். ராஜா கூறினார்.

    புதுக்கோட்டை:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது :-

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளார். அவருக்கு துணையாக அந்நிய செலாவணிமோசடி வழக்கில் சிக்கியுள்ள டி.டி.வி. தினகரனும் சிறைக்கு செல்வார்.


    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்த்தால் அத்திட்டம் செயல்படுத்தப்படாது. நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சி.பி.எம். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கர், தலைவர் துரைச்சந்திரன், மற்றும் நிர்வாகிகள் வீராச்சாமி, ரத்தினவேல், தங்கவேல், அன்பழகன், பால சுந்தரமூர்த்தி, முகமதுகனி, அய்யாவு, ரஜினி, தர்மராஜ், கோபால்சாமி, மணிவேல், பழனியப்பன் உள்ளிட்டோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்,

    மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு, உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு, விவசாயத் தொழிலாளர்களின் வேலை இழப்பிற்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரிகுளங்களைத் தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
    ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு வந்த எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, வாணக்கன்காடு, கோட்டைக்காடு, நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகளில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க ஆய்வு மேற்கொண்டது.

    இதையடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இத்திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு பகுதியில் போராட்டம் வெடித்தது. பேச்சு வார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டு தற்போது மீண்டும் நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கோட்டைக்காடு பகுதியில் உள்ள ஓ.என். ஜி.சி. நிறுவனம் அமைத்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்ட ஆழ்துளை கிணற்றில் ஆய்வு மேற்கொள்ள கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் அதிகாரிகள் நேற்று வந்தனர். ஓ.என்.ஜி.சி. அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்யும் ஒப்பந்தத்தை கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவனம் எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் கெய்ராஸ் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் வந்தனர்.

    இந்த தகவல் பரவியதும் கொந்தளித்த அப்பகுதி மக்கள் ஆய்வுக்கு வந்த தனியார் நிறுவன அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலீப் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அதிகாரிகளை மீட்டு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் சப்-கலெக்டர் அம்ரீத் மற்றும் போலீசார் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் என்ற தனியார் நிறுவனத்தின் அதிகாரிகள் என தெரிய வந்தது.

    இதனையடுத்து சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கோட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் ஆகியோரை அழைத்து சப்-கலெக்டர் அம்ரீத் விசாரணையில் கிடைத்த தகவல்களை தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் இங்கு வரும்போது மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சப்-கலெக்டர் அம்ரீத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கெய்ராஸ் பெட்ரோலியம் என்ற தனியார் நிறுவனம் இந்தியா முழுவதும் மத்திய எண்ணெய் நிறுவனம் போட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பராமரிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளது. இந்த ஆழ்துளை கிணறுகளை இந்த தனியார் நிறுவன அதிகாரிகள் சில மாதங்களுக்கு ஒரு தடவை ஆய்வு நடத்தி சோதனை செய்வார்கள். அதன் அடிப்படையில் நேற்று ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் காலை 11 மணி அளவில் கோட்டைக்காடு சென்றுள்ளனர்.

    அப்போது அங்கிருந்து மக்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாங்கள் விசாரணை செய்தோம். இனிமேல் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் நீங்கள் இதுபோன்ற சோதனைக்கு இங்கு வரக்கூடாது என்று எச்சரித்துள்ளோம். மேலும் இது குறித்து மத்திய எண்ணெய் நிறுவனத்திடமும் நாங்கள் தெரிவிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் பேசியதாவது:-

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகம் வறட்சியில் தாண்டவ மாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதன் உக்கிரம் மேலும் அதிகரித்துள்ளது. நீர் ஆதாரத்திற்கு ஆறுகள் போன்ற வசதிகள் இல்லாத புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க முழுக்க மழைநீரை மட்டுமே நம்பி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ் குழாய்க்கிணறுகள் அமைத்தால் தான் விவசாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் தாவரங்கள் கூட கருகிக்கிடக்கின்றன.

    மனிதர்களுக்கும் கால் நடைகளுக்கும், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகி பல நாட்களாகி விட்டது. ஆனால், இதையெல்லம் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் நகர்புறங்களில்  தான் குடிநீர்ப் பிரச்சினை அதிகமாக இருக்கும். கிராமங்களில் விவசாயத்திற்கு கிடைக்கும் நீரைக் கொண்டே வீட்டுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வர்.

    ஆனால், தற்பொழுது விவசாயம் முற்றிலுமாக அழிந்து குடிப்பதற்கு, சமைப்பதற்கு, கால்நடைகளுக்கு என எதற்கும் தண்ணீர் இல்லாமல் கிராமப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் சாட்சியாக மாவட்டத்தில் தினந்தோறும் கிராமத்தினர் தன்னெழுச்சியாக குடிநீர் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் மாவட்ட அளவில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்று நடத்தும்.

    இவ்வாறு கவிர்வர்மன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை, உறுதி மொழியை ஏற்று இந்த கிராமங்களில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி கடந்த மாதம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்க திட்டமிட்டனர். அதன்படி 70 கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி கடந்த 12-ந்தேதி முதல் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கியது.

    7-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. நேற்று நடந்த போராட்டத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்று எழுதப்பட்ட உருவ பொம்மையை பாடையாக கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    பின்னர் அந்த உருவ பொம்மையை சுற்றி பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து அந்த பொம்மை தீவைத்து எரிக்கப்பட்டது. 22 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நெடுவாசலில் மீண்டும் போராட்டம் தொடங்கி தீவிரமடைந்துள்ளது.

    இதற்கிடையே வருகிற 20-ந்தேதி ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக டெல்லியில் இருந்து 120 பேர் கொண்ட குழு வருகைதர உள்ளதாக கதவல் வெளியாகி உள்ளது. அவர்களை எந்த விதத்திலும் அனுமதிக்கமாட்டோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த பிப்ரவரி 15-ந் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. மறுநாள் 16-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கியது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடந்த இந்த தன்னெழுச்சி போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் ஆதரவு அளித்தனர். தினமும் அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

    தற்போது மீண்டும் தொடங்கியுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சமையல் செய்யும் பணியும் தொடங்கியுள்ளதால் அங்கு பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவை திரட்டவும், அதிக அளவிலான கூட்டத்தை கூட்டவும் நெடுவாசல் போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    புதுக்கோட்டையில் இருந்து நெடுவாசலுக்கு இன்று சைக்கிளில் பேரணியாக செல்ல முயன்ற 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து நெடுவாசலுக்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்தவரும், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளருமான விடுதலை குமரன் தலைமையில் சுமார் 25பேர் நெடுவாசலுக்கு இன்று காலை சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர்.

    இதையறிந்த போலீசார் விரைந்து சென்று பேரணியாக செல்ல முயன்ற 25 பேரையும் மறித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து இன்று மதியம் நெடுவாசலில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் இன்று 4-வது நாளாக நீடிக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நெடுவாசல் கிராமத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் மற்றும் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

    இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த கர்நாடகாவை சேர்ந்த ஜெம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் நெடுவாசல் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் நெடுவாசல் கிராமத்து இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் தங்களை மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி விட்டதாக கூறி கடந்த 12-ந்தேதிமீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

    இதனிடையே அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து இன்று மதியம் நெடுவாசலில் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர். அதில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

    அறந்தாங்கி அருகே நள்ளிரவில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் அருகிலுள்ள பெரியகாடு பகுதியில் டீ மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் செல்போன் ரீசார்ஜ் காடுகள், சோப்பு உள்ளிட்ட ஸ்டே‌ஷனரி பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கடையை திறக்கும் முருகன் இரவு 9.30 மணிக்கு பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வார்.

    நேற்றும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற முருகன் இன்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.

    மேலும் கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள், ரீ சார்ஜ் கார்டுகள், ரீசார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 5 செல்போன்கள், சோப்பு உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்து முருகன் ஆவுடையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    ×