என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
    X

    குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு

    புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் பேசியதாவது:-

    முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகம் வறட்சியில் தாண்டவ மாடுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதன் உக்கிரம் மேலும் அதிகரித்துள்ளது. நீர் ஆதாரத்திற்கு ஆறுகள் போன்ற வசதிகள் இல்லாத புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க முழுக்க மழைநீரை மட்டுமே நம்பி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கிறது. ஆயிரம் அடிக்கு மேல் ஆழ் குழாய்க்கிணறுகள் அமைத்தால் தான் விவசாயம் என்ற நிலை உருவாகியுள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் தாவரங்கள் கூட கருகிக்கிடக்கின்றன.

    மனிதர்களுக்கும் கால் நடைகளுக்கும், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை உருவாகி பல நாட்களாகி விட்டது. ஆனால், இதையெல்லம் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. முன்பெல்லாம் நகர்புறங்களில்  தான் குடிநீர்ப் பிரச்சினை அதிகமாக இருக்கும். கிராமங்களில் விவசாயத்திற்கு கிடைக்கும் நீரைக் கொண்டே வீட்டுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வர்.

    ஆனால், தற்பொழுது விவசாயம் முற்றிலுமாக அழிந்து குடிப்பதற்கு, சமைப்பதற்கு, கால்நடைகளுக்கு என எதற்கும் தண்ணீர் இல்லாமல் கிராமப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் சாட்சியாக மாவட்டத்தில் தினந்தோறும் கிராமத்தினர் தன்னெழுச்சியாக குடிநீர் கேட்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். தாமதிக்கும் பட்சத்தில் மாவட்ட அளவில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை ஏற்று நடத்தும்.

    இவ்வாறு கவிர்வர்மன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×