என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் அருகிலுள்ள பெரியகாடு பகுதியில் டீ மற்றும் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த கடையில் செல்போன் ரீசார்ஜ் காடுகள், சோப்பு உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கடையை திறக்கும் முருகன் இரவு 9.30 மணிக்கு பூட்டி விட்டு வீட்டுக்கு செல்வார்.
நேற்றும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்ற முருகன் இன்று அதிகாலை கடையை திறக்க வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.
மேலும் கடையில் இருந்த சிகரெட் பாக்கெட்டுகள், ரீ சார்ஜ் கார்டுகள், ரீசார்ஜ் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 5 செல்போன்கள், சோப்பு உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருந்தது.இதுகுறித்து முருகன் ஆவுடையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தி கொள்ளையர்களையும் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.






