என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்: வாசன்
    X

    விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்: வாசன்

    கோட்பாடுகள், விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் உத்தரப்பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு மாநில அரசோ மத்திய அரசோ நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குறியதாக உள்ளது.

    நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை கைவிடவேண்டும். தேவைப்படில் த.மா.கா. விவசாயிகளோடு சேர்ந்து போராட்டம் நடத்தும்.


    தேர்தல் கோட்பாடுகள் விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தேர்தலிலாவது தேர்தல் ஆணையம் விழித்துக் கொள்ள வேண்டும். நடு நிலையோடு ஆணையம் செயல்பட வேண்டும் என்பது தான் மக்களின் மனநிலை.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அதை குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து வருகிறது. மூடப்பட்ட கடைகள் மூடப்பட்டவைகளாகவே இருக்க வேண்டும். மீண்டும் கடைகளை திறந்தால் மக்களோடு இணைந்து நாங்களும் போராடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×