என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகாடு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தினர்.
    X
    வடகாடு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்யும் போராட்டம் நடத்தினர்.

    வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு போட்டு தற்கொலை போராட்டம்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாடு கிராம மக்கள் இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தினர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, வடகாடு ஆகிய பகுதிகளில் கடந்த 22 நாட்களாக தொடர்ந்து பொதுமக்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

    முதலில் நெடுவாசல் கிராமத்தில் மட்டும் போராட்டம் நடத்தி வந்த வடகாடு கிராமத்தினர் தங்கள் கிராமத்திலேயே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இன்று 5-வது நாளாக அவர்கள் பந்தல் அமைத்து போராடி வருகிறார்கள்.

    இந்தநிலையில் வடகாட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் இன்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தின் போது இளைஞர்கள், பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் வடகாட்டில் உள்ள மாரியம்மன் ஆர்ச்சில் இருந்து பேரணியாக போராட்ட களத்திற்கு வந்தனர்.

    பின்பு அங்குள்ள போராட்ட பந்தலில் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தினர். தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டியுள்ளோம், திட்டம் நிறைவேறினால் தற்கொலை செய்ய தயங்க மாட்டோம் என்பதை உணர்த்தவும், உண்மையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வோம் என்று ஆவேசத்துடன் கூறினர்.

    மேலும் எங்களின் போராட்ட குரல் மத்திய அரசின் காதுகளில் விழவேண்டும் என்பதற்காகவே இந்த தூக்கு போட்டு தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்ற பட்டதாரி வாலிபர் ஒருவர் கூறியதாவது:-

    நான் பட்டப்படிப்பு படித்து விட்டு வெளியூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். ஆனால் எங்கள் வாழ்வின் அடிப்படை ஆதாரம் விவசாயம்தான். எனக்கும், எனது சந்ததிக்கும் விவசாயம் முக்கியம். எங்கள் உடலில் உயிர் உள்ளவரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடுவோம் என்றார்.


    வடகாடு கிராமத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.


    வடகாடு கிராமத்தில் இன்று நடந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

    இதேபோல் நெடுவாசல் கிராமத்திலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் நடைபெறும் நாடியம்மன் கோவில் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. இன்று 10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் பொதுத்தேர்வு நடை பெறுவதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த மைக் செட்டுகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

    மேலும் தேர்வு முடிந்ததும் போராட்ட களத்திற்கு பொது மக்கள் திரண்டு வருமாறும் கிராம மக்கள் மற்றும் போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×