என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசல் அருகே நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகள்.
    X
    நெடுவாசல் அருகே நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகள்.

    நெடுவாசல் கிராமத்தில் விவசாய பணி முடக்கம்: விரைவில் முடிவு காண வலியுறுத்தல்

    நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதால் விவசாய பணிகள் முடங்கியுள்ளன. இதற்கு விரைவில் முடிவு காண வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த 21 நாட்களாக விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    முழுக்க, முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இந்த கிராமத்தில் நெல், சோளம், கரும்பு, வாழை, கடலை போன்ற பயிர்களும், மா, பலா, பூக்கள் போன்றவைகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    பல ஆயிரம் ஏக்கரில் விளைவிக்கப்பட்டுள்ள இந்த பயிர்களை முறையாக பராமரிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். கடும் எதிர்ப்பின் காரணமாக ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று நினைத்திருந்த விவசாயிகளுக்கு இந்த தொடர் போராட்டம் பெரும் சவாலாக அமைந்துவிட்டது.

    தினமும் அதிகாலையிலேயே வயலுக்கு சென்று விடும் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட வேளாண் பணிகளை மட்டுமே கவனித்து வந்த விவசாயிகள் தற்போது காலையிலேயே போராட்ட பந்தலுக்கு வந்து அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தங்கள் கிராம பிரச்சனைக்காக வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் போது சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தை கண்டு கொள்ளாமல் போனால் சர்ச்சையாகிவிடும் என்ற எண்ணத்திலும் தங்கள் முழு கவனத்தையும் போராட்டத்தில் செலுத்தி வருகிறார்கள்.

    அத்துடன் தினமும் போராட்டம் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தவும், வலியுறுத்தும் விதமாகவும் பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகிறார்கள். குறிப்பாக விவசாய பணிகளில் அதிக அளவில் ஈடுபடும் பெண்கள் இந்த போராட்டத்தில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

    பெண்களால் மட்டுமே இந்த போராட்டம் இவ்வளவு வலுவடைந்துள்ளது என்று கூறுமளவிற்கு கடந்த 21 நாட்களும் சொந்த வேலைகளை மறந்து இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் தவிர நெடுவாசல் கிராமத்தை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். இதில் ஏராளமானோர் இந்த போராட்டம் குறித்து அறிந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

    அவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வெளிநாடு செல்வதில்லை என்ற முடிவில் உள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, விவசாய பணிகளும் முடங்கியுள்ளன. மேலும் கால்நடைகள் வளர்ப்போர் அதனை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது, முறையாக பராமரிப்பது போன்றவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக தற்போது நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடலை பயிரிடப்பட்டது. அதனை அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் அதில் ஈடுபடும் பெண்கள் பலர் போராட்ட களத்தில் அமர்ந்திருப்பதால் அறுவடை தடைபட்டுள்ளது. உரிய நேரத்தில் அறுவடை பணியை மேற்கொள்ளா விட்டால் கடலை அனைத்தும் அழுகி சேதமடைந்துவிடும் என்று கவலையுடன் கூறினர்.

    கடந்த சில நாட்களாக காலை வேளையில் போராட்டம் நடைபெறும் நாடியம்மன் கோவில் திடலில் குறைந்த அளவிலான கூட்டமே உள்ளது. பலர் விவசாயத்தை கவனிக்க சென்றுவிட்டு பிற்பகலில் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    இதேபோல் காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் இருந்து வீட்டு வேலைகள், விவசாய பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் நெடுவாசல் கிராம மக்கள் இனியும் தாமதிக்காமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயத்தையும், விளைநிலங்களையும் அழிவில் இருந்து காக்கவேண்டும் என்றும் உரக்க குரல் கொடுத்துள்ளனர்.
    Next Story
    ×