என் மலர்
புதுக்கோட்டை
சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சுயம்பு லிங்க சிவபெருமான் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த பக்தர்கள் சிவசிவஹரஹர கோஷத்துடன்,
சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருளச் செய்து மூன்று முறை பிரகார விழாநடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நந்தியம் பெருமானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது.
இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுர சுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில்,
திருமலைராய சமுத்திரம் கதிர் காமேஸ்வர கதிர் காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர்பழங்கரை புராதன ஈஸ்வரர கோவில், விஜய ரெகுநாதபுரம் மணியம்பலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.
நாய் இழுத்து வந்த சிசு உடலை பொதுமக்கள் மீட்டனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சின்னான்கோன்விடுதி பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பில் ஐஸ்வர்யா என்பவரின் வீட்டி ன் பின்புறம் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் சிசு உடலை நாய் ஒன்று இழுத்து வந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நாயை விரட்டியடித்து, கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கிராம நிர்வாக அதிகாரி ஜெயமணி, சிசுவின் உடலை பார்வையிட்டு, ரெகுநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சுகாதார நிலையங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்த 3 நாட்களே ஆன குழந்தையை நாய் இழுத்துவந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழுதடைந்த பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ராங்கியம் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50 ஆண்டுகள் பழமையான ஓட்டு கட்டிடம் ஒன்று உள்ளது. கஜா புயலின் தாக்கத்தில் இந்த ஓட்டு கட்டிடம் சேதம் அடைந்தது.
இந்த நிலையில் தற்போது அந்தக் கட்டிடத்தின் ஓடுகள் பெயர்ந்து விழுகின்றன.
இது மாணவர்களின் மீது விழுந்து விடுமோ என்ற அச்சம் குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டிடம்
ஆகவே இந்த பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் இருக்கின்றது. இதனால் திறந்த வெளியில் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இந்த பள்ளிக்கூடத்தில் போதிய வகுப்பறை வசதி இல்லாத காரணத்தினால் புத்தகப் பைகளை சமையலறை கட்டிடத்தில் வைத்து விட்டு வகுப்பறைக்கு செல்லும் நிலையும் இருப்பதாக பள்ளி குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.
இது பற்றி சிலர் கூறும்போது,பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
புதுக்கோட்டையில் உள்ள உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன 10 கிலோ இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட தொழிலாளர்களுக்கு அதன் உரிமையாளர் ஒரு ஓட்டலில் பிரியாணி வாங்கி கொடுத்தார். அதனை சாப்பிட்ட 44 பேர் வாந்தி, மயக்கம் அடைந்ததையடுத்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப்போயிருந்தது ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துரித உணவு மற்றும் சாலையோர உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் முதல் கட்டமாக நேற்று 35 அசைவ உணவங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதில் கெட்டுப்போன 10 கிலோ இறைச்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த இறைச்சி அனைத்தும் பெரும்பாலும் அழுகிய நிலையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அந்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரவீண்குமார் கூறுகையில், கேரளாவில் ஷவர்மா உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டல்களிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் சோதனை தொடர்கிறது.
கடந்த வாரம் கூட அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் 35 கடைகளில் நடத்திய சோதனையில், கிட்டத்தட்ட 10 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்து அந்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளோம்.
பெரும்பாலான கடைகளில் இறைச்சியை சேமிப்பதில் சரியான முறைகளை கையாளுவதில்லை. மீதமான இறைச்சியை பிரீசரில் வைப்பதற்கு பதிலாக சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் வைத்துவிட்டு செல்கிறார்கள்.
அந்த இறைச்சியை மறுநாள் பயன்படுத்தும்போது, அது கெட்டுப்போனதாக மாறி அதனை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றாத உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் பின்பற்றாமல் அஜாக்கிரதையாக செயல்பட்டால் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்படும் என்றார்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை:
மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியராக சேவையாற்றி மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின்
பிறந்த நாளான மே 12-ந் தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி ஆலங்கடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார்.
ஊரக நலப்பணிகள் இனை இயக்குநர் டாக்டர் ராமு தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார், செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி வரவேற்றார். மாதினி முன்னிலை வகித்தார்,இதில் மருத்துவர்கள் லதா,மணிவண்ணன், கீதா மருத்துவமனை அனைத்து செவிலியர்கள், ஊழியர்கள்,
தேசிய மருத்துவ செயல்பாட்டு மருத்துவர் சுபாகன்,இணை இயக்குநர் அலுவலகக. ண்காணிப்பாளர் உலகநாதன், ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்திக்கு நைட்டிங்கேல் விருது மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள் மற்று ம் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை இணை இயக்குனர் டாக்டர் ராமு வழங்கி பாராட்டினார்.
அறந்தாங்கியில் குளத்தில் தண்ணீர் பருகிய பசுமாடு உயிரிழந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் எல்சாம் (வயது41) இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பசுமாடு வழக்கம்போல் மேய்ந்துவிட்டு அருகே உள்ள பெரிய கண்மாயில் தண்ணீர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளது.வீட்டிற்கு வந்ததிலிருந்தே மாடு சோம்பலாக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாடு நேற்று திடீரென மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. அதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாட்டை பரிசோதனை செய்த மருத்துவர், மாடு ஏதோ விஷத்தை உட்கொண்டுள்ளது என கூறிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து மாடு சிறிது நேரத்தில் இறந்துள்ளது.
இதற்கிடையில் குளத்தில் நீந்திய வாத்து,மீன்கள் ஆகியன இறந்த நிலையில் காணப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய கண்மாய் ஏலம் விடப்பட்டது.
ஏலம் விடப்பட்ட மறுநாளிலிருந்தே குளத்தில் மீன்கள் ஆங்காங்கே இறந்து மிதக்க தொடங்கின. இதை ஆரம்பத்தில் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தற்போது தண்ணீர் குடித்த மாடு இறந்து விட்டது.
மேலும் வாத்து, மீன்கள் போன்றவை தொடர்ந்து இறக்கத் தொடங்கியுள்ளன. எனவே உரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் கலந்துள்ள விஷத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தக் கேட்டுக் கொண்டனர்.
மேலும் தற்போது பள்ளிகள் விடுமுறை காலங்கள் ஆகையால், சிறுவர்கள் குளத்தில் குளிக்கச் சென்று அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு நடவடிக்கை மேற்க்கொள்ள கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக குளத்தில் விஷம் கலந்துள்ளது யாரும் குளிக்கச் செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு, கிராமம் சார்பில் ஒலிப்பெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கறம்பக்குடியில் முத்துகருப்பையாசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள அருள்மிகு முத்துகருப்பையா சாமி கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதே மாதிரி இந்த ஆண்டும் நடைபெற்றது. திருவிழாவை பாடை காவடி, பறவை காவடி, செடில் காவடி, கரும்பால் தொட்டில்கட்டி காவடி எடுத்து பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துக்கருப்பையா சாமிக்கு பால், இளநீர் உள்பட எல்லாவிதமான அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விழா முன்னிட்டு கரகாட்டம், வானவேடிக்கை, வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது. இதற்கானஏற்பாடுகளை பரம்பரை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.
கந்தர்வகோட்டையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இயங்கி வரும் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் பணிபுரியும் 4 நபர்களுக்கும்,
அருகில் உள்ள தீயணைப்பு துறை நிலைய காவலர் ஒருவருக்கும்டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாண்மை விரிவாக்க அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள யாதவர் தெருவில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்மணிமாறன் தலைமையில்மே
ற்பார்வையாளர்கள் முத்துக்குமார், நல்லகண்ணு, திருநாவுக்கரசு, பழனிசாமி மற்றும்உதவியாளர்கள் அரசு அலுவலகங்களிலும் மற்றும்
அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வுகள் செய்து கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து அடித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தச்சங்குறிச்சி தூய விண்ணேற்பு அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் நாடகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சங்குறிச்சி தூய விண்ணேற்பு அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் நாடகம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தச்சங்குறிச்சி பங்குத்தந்தை ஏ.பால்ராஜ் தலைமை தாங்கினார்.
இந்த திருப்பாடுகளின் பாஸ்கா நாடகத்தை ஏராளமான கிறித்தவ பெருமக்களும் கிராம பொதுமக்களும் கண்டு களித்தனர்.
தஞ்சை மறை மாவட்ட பேராலய பாஸ்கு கலை மன்றத்தினர் பங்குகொண்ட இந்த நாடகம் தத்ரூபமாக இருந்தது.
குடும்ப தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மூக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் குமரேசன் (வயது 47). விவசாயி. இவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை நீண்ட நாட்களாகவே இருப்பதாக தெரிகிறது. இதனால் குமரேசன் தினந்தோறும் மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வாராம்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் நடந்த தகராறில் குமரேசனை அவரது குடும்பத்தார் அடித்து கீழே தள்ளியதாக கூறுகின்றனர். இதில் மயங்கி கிடந்த குமரேசனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு புதுகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குமரேசன் இறந்துவிட்டதாக கூறினர்.
இது குறித்து வந்த புகாரின் பேரில் டிஎஸ்பி வடிவேல், ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து சம்பட்டி விடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூராக உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றிற்கு சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லுகின்றனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அறந்தாங்கி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எந்நேரமும் பரபரப்பாக உள்ள அறந்தாங்கி நகர் பகுதியில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகக் கானப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் சம்மந்தப்பட்ட கடைகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்போடு அகற்றும் பணிகள் நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியர் காமராஜ் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினர், காவல்த்துறையினர் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.






