என் மலர்
உள்ளூர் செய்திகள்

டவுன் காட்சி மண்டபம் பகுதியில் சேதம் அடைந்து கிடக்கும் சாலை.
நெல்லை டவுன் காட்சி மண்டபம்-பேட்டை சாலை சீரமைக்கப்படுமா?-வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
- நெல்லை மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
- மழை பெய்தாலே அங்குள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகரப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் நெல்லை, தச்சநல்லூர் பகுதிகளில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்த நிலையில் மாநகரப் பகுதியில் சேதமடைந்து காணப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டவுன் ஆர்ச் முதல் மவுண்ட் ரோடு வழியாக காட்சி மண்டபம் வரையிலும் மிகவும் மோசமாக இருந்த சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் காட்சி மண்டபத்தில் தொடங்கி பேட்டை குளத்தாங்கரை பள்ளிவாசல் வரையிலும் உள்ள சாலை மேடு, பள்ளங்களாக காட்சியளிப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த சாலை எப்போது சீரமைக்கப்படும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நடந்து செல்வதற்கு கூட முடியாத அளவுக்கு இந்த சாலை இருப்பதாகவும், சிறிய அளவு மழை பெய்தாலே அங்குள்ள பெரிய அளவு பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருப்பதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் முகமது அய்யூப் நெல்லை மற்றும் பேட்டை நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.