என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு திருவிழா நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளி மேட்டிற்கு பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் வந்தார். அவர் தனித் தனியாக இரு தரப்பினரையும் அழைத்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
கள்ளிமேடு பத்திர காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரையும் தமிழக அரசு அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு தீர்வு என்பது திருவிழாவுக்கு தடை விதிப்பது அல்ல.
தமிழகத்தில் தலித் மக்களுக்கு எந்த ஒரு இடத்திலும் இடையூறு ஏற்படக்கூடாது. எனவே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து திருவிழா நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த பிரச்சினையை காரணமாக வைத்து மதம் மாறுவோம் என்று கூறுவதை நிறுத்த வேண்டும். திருச்சி சிவா எம்.பி.யை பொது இடத்தில் அ.தி.மு.க. எம்.பி சசிகலா புஷ்பா தாக்கியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் இளஞ்சிறகுகள் அமைப்பின் விழா நடைபெற்றது. இதில் நடிகர் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசியதாவது:–
என்னை நாடு போற்றும் அளவிற்கு வளர்த்து அனைத்து தகுதிகளையும் அளித்த பிறந்த மண்ணை பாராட்ட வந்துள்ளேன். நான் எந்த மதத்திற்கும் சொந்தக்காரன் இல்லை.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலர் மந்திரத்தை கற்றவன். நான் யாருக்கும் பயந்தவன் இல்லை. தனி மனித ஒழுக்கமானவன்.
இதற்கு காரணம் நான் படித்த தேசிய மேல்நிலைப்பள்ளி. ஒரு மாணவன் புகைப்பிடித்தான் என்பதற்காக கையில் அடித்து தீர்த்த தலைமை ஆசிரியரைப் பார்த்து வளர்ந்தவன். இதுவரை புகைப்பிடிப்பதை போன்று நடிக்காமலும், புகைப்பிடிக்காமலும் வாழ்ந்து வருவதற்கு என் பள்ளிதான் காரணம்.
மது போதையில் மயங்குகிறான் ஆங்கிலேயன். ஆனால் நாம் மதுவில் மூழ்கி விடுகிறோம். தொழில் பேசும் போது மதுவை சுவைக்கிறான் ஆங்கிலேயன். ஆனால் நம் தொழிலே தண்ணி அடிப்பதுதான்.
கையில் ஒரு காசு இல்லாமல் சென்னைக்கு சென்றேன். மயிலாடுதுறை அளித்த திறமையோடு சென்றேன். இன்றைக்கு நான் நல்ல நிலையில் இருக்கிறேன். அதற்கு காரணம் மயிலாடுதுறை மண்ணும் நான் வணங்கும் தெய்வமும் தான். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களை மறக்காதீர்கள். அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம்.
வாழ்க்கையில் முயற்சிக்கும் போது உன்னை ஏசும். ஏளனம் செய்யும் உலகம். நீ முன்னேறினால் உன்னை பாராட்டும் உலகம் இது. மயிலாடுதுறை மாவட்டமாக வேண்டும். விஸ்திரமான பஸ் நிலையம் வேண்டும்.
மயிலாடுதுறை மண் மீத்தேனால் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் குரல் எழுப்புகின்றனர். இந்த மண்ணுக்காக என் ஆதரவு எப்போதும் உண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42) சாலை பணியாளர். இவரது மனைவி மகேஸ்வரி (39). இவர் கொள்ளிடம் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது அம்மன் மாரிமுத்து வசிக்கும் தெருவிற்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாரிமுத்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த தேவரோடை பகுதியை சேர்ந்த 6 பேருக்கும் மேற்பட்ட கும்பல் மாரிமுத்து, அவரது மனைவி மகேஸ்வரி, தாய் காசியம்மாள், சகோதரி ஜோதி ஆகிய 4 பேரையும் தாக்கி உள்ளது. இதில் காயமடைந்த மாரிமுத்து சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும், இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் சீர்காழி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு தீ குளிப்பேன் என்று கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி 2–வது வார்டுக்கு உட்பட்ட தியாகராஜன் நகரில் நகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியினை அருகில் உள்ள கதிர்வேல் நகர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர். அப்பொழுது முற்றுகையிட்ட பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வடிகால் என்ற பெயரில் வடிகால் வசதி அமைக்கப்பட்டு அருகில் உள்ள பெரப்படி வாய்க்காலில் சென்று கலப்பதால் எதிர்காலத்தில் இந்த வாய்க்காலில் கழிவுநீர் விடப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு, கழிவுநீர் மூலம் கொசுக்கள் அதிகமாக உருவாகி தொற்றுநோய் உருவாகும் அபாயம் ஏற்படும்.
எனவே அரசு மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை பகுதியில் கப்பற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமின் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடற்படை தென்பிராந்திய அதிகாரி ரியர் அட்மிரல் அலோக்பட்நாகர் 2 இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
அவரை ஆறுகாட்டுத்துறை முகாம் அதிகாரி கமாண்டர் இன்சார்ஜ் பரேஷ்கவுலி வரவேற்று முகாம்களை சுற்றி காண்பித்தார். பின்பு அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். அங்குள்ள அதிகாரிகளிடம் முகாமின் பணிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தார். அவரிடம் மாயமான விமானம் குறித்து கேட்ட போது, விசாகப்பட்டினத்தில் உள்ள அதிகாரிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை சின்னக்கடை தெருவில் சாலை ஓரம் தூங்கியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறியதில் படுகாயமடைந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரை மீட்டு படுகாயமுற்றவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இறந்தவர்சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் அவர் யார்? யார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிச்சாமி தலைமை வகித்ததார். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
தலைஞாயிறு கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்தாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.25கோடி நிலுவை உள்ளது. நடப்பாண்டு ரூ.22 கோடி நிலுவை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம வழங்கமுடியாமல் கரும்பு விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
ஆண்டுதோறும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை பாக்கி வைப்பதால் 2012-ம் ஆண்டு 2 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட கரும்பு தற்போது 78 ஆயிரத்து 836 டன்னாக குறைந்துவிட்டது.
எனவே நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கரும்பு விவசாயிகள் தங்களது கையில் பூச்சி மருந்து பாட்டிலுடன் கலெக்டர் பழனிச்சாமியை முற்றுகையிட்டனர்.
அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டருக்கு ஆதரவாக நெல் விவசாயிகள் சிலர் பேசினர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கும், நெல் விவசாயிகளுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது போலீசார் தலையிட்டு விவசாயிகளை அமைதிப்படுத்தினர்.
பின்னர் கூட்டத்தின் நுழைவு வாயிலில் கரும்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில விவசாயிகள் கையில் கரும்பையும், சில விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலையும் வைத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கள்ளிமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆடித் திருவிழாவில் தங்களுக்கு ஒருநாள் மண்டகப்படி உரிமை வழங்கப்படாவிட்டால் வேறு மதத்திற்கு மாறப்போவதாக இப்பகுதி தலித் மக்கள் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இக்கிராமத்தில் முகாமிட்டு தலித் மக்கள் மற்றும் கோவில் விழாக்குழுவினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் கள்ளிமேட்டுக்குச் சென்று இருதரப்பு மக்களையும் சந்தித்து பேசினார்.
தலித் மக்களுக்கு வழிபாட்டு உரிமை அளிப்பது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று விழாக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
தங்களுக்கு வழிபாட்டு உரிமை வேண்டும் என்பதுதான் தங்கள் முக்கிய நோக்கமே தவிர மதம் மாறுவதல்ல என்று ரவிக்குமாரிடம் கூறிய, தலித் மக்கள் இவ்விவாகரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கவே அப்படி கூறினோம். நிச்சயம் இந்து மதத்தை விட்டு மாறமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நாகை கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.)ஜெயராஜ் கள்ளிமேட்டில் இருதரப்பினரையும் சந்தித்து பேசினார். அறநிலையத்துறையினருடன் கலந்துபேசி சில நாட்களுக்குள் சுமூக முடிவு எட்டப்படும். அதுவரை இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 77 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை கடந்து வந்து மீன் பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான மீனவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 77 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
அவர்களை அமயா மற்றும் ராணி அபக்கா என்ற 2 ரோந்து கப்பல்களில் அழைத்துக் கொண்டு காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தனர். அங்கு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் 77 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.
மீன்வளத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், நாகை மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி ஆகியோர் மீனவர்களை வரவேற்று உணவுப் பொட்டலம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.
அதன் பின்னர் மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-
எங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதுவரை இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 102 படகுகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி எங்களை கைது செய்தனர். எங்களுக்கு சிறையில் சரியாக உணவு தரவில்லை. கொத்தடிமைகளைபோல நடத்தினர். இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதன் பின்னர் 77 மீனவர்களும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் காந்திஜி தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது50). கட்டிட பொறியாளர். இவரது மனைவி ரேவதி (45). பூம்புகாரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை.
நேற்று இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் சுந்தரமூர்த்தி மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் 3 பீரோக்களை உடைத்து 77 பவுன் நகைகள், 1 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பாத்திரங்கள் ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தழது.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகையிலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அடிக்கடி வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாகவும், பொதுமக்கள், வியாபாரிகள் அச்சத்துடன் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்திற்கு நேற்று ஒருவர் குடி போதையில் வந்தார். அவர் எனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டும் என கேட்டார்.
அவரது மகன் பெயரை கேட்டதற்கு பதில் கூறாமல் வருவாய் அலுவலர் அறைக்கு சென்றார். நான் சிங்கப்பூரில் இருந்து வருகிறேன். எனது மகனுக்கு சான்றிதழ் வேண்டும் என மீண்டும் கூறினார்.
இதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. இதனை தொடர்ந்து கம்ப்யூட்டர் மையத்திற்கு சென்றார். அங்கும் சரியாக பதில் அளிக்கவில்லை. ஒரு சிலர் அவரை வெளியே செல்லுமாறு கூறினர்.
அதற்கு அவர் நான் ஜாதி சான்றிதழ் வாங்காமல் செல்ல மாட்டேன். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்றார். சுமார் 30 நிமிடம் தாலுகா அலுவலகத்தை சுற்றி வந்தார்.
பின்னர் தான் வைத்திருந்த மஞ்சள் பையை காணவில்லை என கூறியவாறே நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். நகராட்சி கட்டிடம் முன்பாக காந்தி சிலை வைக்கப்பட்டுள்ள கதவை பிடித்து கொண்டு மகனுக்கு ஜாதி சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் என அழுது புலம்பினார். நீண்ட நேரமாக அங்கு நின்றவர் மயங்கி விழுந்தார்.
இதனால் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மாணவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் செல்வ அரசன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
மீத்தேன் திட்டம் தற்போது காவிரிப்படுகையை மிக நெருங்கி வந்துள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகும் நிலக்கரி பாறையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று வரை கைவிடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து, நிலத்தடி நீர் மட்டத்தை நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்வது.
கடந்த 23-ந் தேதி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொன்விழாவில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், நிலக்கரிப்படுகை மீத்தேனை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ளூர் காரர்களின் ஒப்புதலுடன் எடுப்போம். இதற்கு பலத்தை பயன்படுத்தமாட்டோம்.
இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமுதாயத்தின் ஒப்புதல் என்பது ஜனநாயகத்தில் அவசியம் என்று அறிவித்திருக்கும் தர்மேந்திர பிரதானின் பேச்சை வன்மையாக கண்டிப்பது.
மத்திய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்திற்கு தமிழக அரசு இணங்கி விடக்கூடாது. தமிழக முதல்-அமைச்சர் காவிரிப்படுகையின் கலசமாக இருந்து மண்ணையும், மக்களையும் பாதுகாக்க கேட்டுக் கொள்வது. தமிழக மக்களையும், தமிழக உணவு உறுதிப்பட்டையும் தமிழக அரசு உறுதியோடு நின்று பாதுகாக்க வேண்டுவது.
நிலக்கரி, மீத்தேன் எடுக்க தடைவிதித்த தமிழக அரசின் அரசாணை ஷேல் மீத்தேன் எடுக்கவும் பொருந்தும் என்று அரசு அறிவிக்க கேட்டுக்கொள்வது.
காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுவது. மீத்தேன் திட்டம், ஷேல் மீத்தேன் திட்டம், நிலக்கரி எடுக்கும் திட்டம் போன்ற எந்த திட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு முயன்றாலும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மக்களை திரட்டி போராடும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நாகை, திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களில் வருகிற 29-ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு காவிரிப்படுகை பாதுகாப்பு பயணத்தை திருவாரூரில் தொடங்குவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர் செல்வம், விஜயராகவன், அசோகன், சித்ரா ஜெயராமன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.






