என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீத்தேன், ஷேல், நிலக்கரி திட்டங்கள்: மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் - திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு
    X

    மீத்தேன், ஷேல், நிலக்கரி திட்டங்கள்: மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் - திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு அறிவிப்பு

    காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கினார். திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மாணவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் செல்வ அரசன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

    மீத்தேன் திட்டம் தற்போது காவிரிப்படுகையை மிக நெருங்கி வந்துள்ளது. பல போராட்டங்களுக்கு பிறகும் நிலக்கரி பாறையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று வரை கைவிடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து, நிலத்தடி நீர் மட்டத்தை நஞ்சாக மாற்றும் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்வது.

    கடந்த 23-ந் தேதி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்தின் பொன்விழாவில் பங்கேற்ற மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசுகையில், நிலக்கரிப்படுகை மீத்தேனை தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ளூர் காரர்களின் ஒப்புதலுடன் எடுப்போம். இதற்கு பலத்தை பயன்படுத்தமாட்டோம்.

    இதுகுறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமுதாயத்தின் ஒப்புதல் என்பது ஜனநாயகத்தில் அவசியம் என்று அறிவித்திருக்கும் தர்மேந்திர பிரதானின் பேச்சை வன்மையாக கண்டிப்பது.

    மத்திய அரசின் இந்த மக்கள் விரோத திட்டத்திற்கு தமிழக அரசு இணங்கி விடக்கூடாது. தமிழக முதல்-அமைச்சர் காவிரிப்படுகையின் கலசமாக இருந்து மண்ணையும், மக்களையும் பாதுகாக்க கேட்டுக் கொள்வது. தமிழக மக்களையும், தமிழக உணவு உறுதிப்பட்டையும் தமிழக அரசு உறுதியோடு நின்று பாதுகாக்க வேண்டுவது.

    நிலக்கரி, மீத்தேன் எடுக்க தடைவிதித்த தமிழக அரசின் அரசாணை ஷேல் மீத்தேன் எடுக்கவும் பொருந்தும் என்று அரசு அறிவிக்க கேட்டுக்கொள்வது.

    காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டுவது. மீத்தேன் திட்டம், ஷேல் மீத்தேன் திட்டம், நிலக்கரி எடுக்கும் திட்டம் போன்ற எந்த திட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு முயன்றாலும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மக்களை திரட்டி போராடும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நாகை, திருவாரூர், தஞ்சை, மாவட்டங்களில் வருகிற 29-ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு காவிரிப்படுகை பாதுகாப்பு பயணத்தை திருவாரூரில் தொடங்குவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர் செல்வம், விஜயராகவன், அசோகன், சித்ரா ஜெயராமன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
    Next Story
    ×