என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூர் வடக்கு வீதி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மனைவி உமாமகேஸ்வரி (வயது31). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு பின்புறத்தில் இருந்து வந்த ஒரு மர்ம நபர் உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து கொண்டு அருகில் தயாராக நின்று கொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.
இதுகுறித்து உமா மகேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகை வேதநாயகம் செட்டித் தெரு பகுதியை சேர்ந்த காளிதாசன் மனைவி அருணாராணி (42) என்பவர் வீட்டில் உள்ள குப்பையை எடுத்துக்கொண்டு தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் கண் இமைக்கும் நேரத்தில் அருணாராணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதனால் அருணாராணி சத்தம்போட்டு மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது, நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்கில் வைத்திருந்த ஹெல்மெட் கீழே விழுந்தது. அந்த ஹெல்மெட்டை அவர்கள் எடுக்காமல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மர்ம நபர்கள் விட்டு சென்ற ஹெல்மெட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சீர்காழி:
பாரதிய ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்செல்வம்,கோட்ட பொறுப்பாளர் தங்க வரதராஜன், ஆகியோர் ஒப்புதலுடன் மாநில இளைஞரணி செயலாளர் கே.சரண்ராஜ், திருவாரூர், நாகை மாவட்ட இளைஞரணி புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.
நாகை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவராக வினோத், மாவட்ட பொதுச் செயலாளர்களாக பாரதிக்கண்ணன், எழிலரசன், மாவட்டத் துணை தலைவர்களாக காசிராமன், ஹீரோ வினோத், சதீஷ், மணிகண்டன், மாவட்ட பொருளாளராக ராம்பிரசாத், மாவட்ட செயலாளர்களாக கணேஷ், ஸ்ரீராம், பார்த்திபன் ஆகியோரும், நாகை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக விஜயகுமார், மாவட்ட பொதுசெயலாளர்களாக பாரத், ரெங்கதுரை, மாவட்டத்துணைத் தலைவர்களாக பிரகாஷ், வெங்கடேசன், ரித்தீஸ், மாவட்ட செயலாளர்களாக முத்து, ஏகாம்பரி, சக்திஒலி, மாவட்ட பொருளாகளராக பார்த்திபன், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவராக செல்வம்(எ)தமிழ்செல்வம், மாவட்ட பொது செயலாளர்களாக தம்பா(எ)சதீஷ், மது(எ)மதுசுதன், மாவட்ட பொருளாளராக பூபதி, மாவட்டத் துணை தலைவர்களாக முருகானந்தம், கந்தசாமி, செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்களாக பிரபு, செந்தில், சரவணகுமார், சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா, வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து கிராமத்தில் மாதா கோவில் உள்ளது. இங்கு நள்ளிரவில் உண்டியலை கடப்பாரை கொண்டு 2 பேர் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து உள்ளனர்.
இதை பார்த்த பொதுமக்கள் சத்தம் போடவே அவர்கள் தப்பியோடினர். இதில் புஷ்பவனத்தை சேர்ந்த மணிமாறன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நாகை மாவட்ட தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மயிலாடுதுறை கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கு 40 சதவீகிதம் ஊனம் இருந்தால் உதவி தொகை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை அரசு உதவி தொகை வழங்காமல் உள்ளதை கண்டித்து மாவட்ட செயலாளர் டி.கணேசன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சபா.அருள்மணி கோரிக்கை உரை நிகழ்த்தினார். விவசாய தொழிலாளர் மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாநில துணைத்தலைவர் வி.சிங்காரவேலன், தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் வி.பழனிவேல், மாநில துணைத்தலைவர் டி.ஜி.கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி டி.சாம்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உடனடியாக 40 சதவீகிதம் ஊனமுடையோருக்கு கடந்த 6 மாதமாக வழங்காமல் நிலுவையில் உள்ள அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
புதுச்சேரி மாநிலத்திலிருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் திட்டச்சேரி பகுதி ப.கொந்தகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த 2 கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ், சப்-இன்ஸ்பெக்டர் இனியவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 2 கார்களை விரட்டி சென்று பிடித்தனர். அதில் ஒரு காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் மற்றொரு காரில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகை மாவட்டம் மங்கநல்லூர் தத்தன்குடி பொறையார் ரோட்டை சேர்ந்த பாபு (வயது 27) என்பதும், மற்றொரு காரில் வந்தது சிவகாசியை சேர்ந்த வெங்கடேசன், குத்தாலத்தை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் புதுச்சேரியில் இருந்து கும்பகோணத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். பின்னர் 2 கார்களில் இருந்த 2,580 மதுபாட்டில்களையும், 2 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வெங்கடேசன், கார்த்திக் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அக்கரைக்குளம் மேல்கரை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி அமுதா (68). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடிப்பழக்கம் உள்ள கருணாகரன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது . இதனால் மனம் உடைந்த அமுதா தனது வீட்டின் மேல் கூரையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாகை சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை நடத்தி வருகிறார்.
வேதாரண்யம்:
இலங்கையிலிருந்து வழிதவறி கோடியக்கரை வந்த தம்பதிக்கு வேதாரண்யம் கோர்ட்டில் 5-வது முறையாக காவல் நீடிக்கப்பட்டது.
இலங்கை வவுனியா அடுத்து மகரம்மை குளத்தை சேர்ந்தவர் துஷ்யந்த்(23) விவசாயி. இவரது மனைவி துவாரகா(22) 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது மகள் சகிதா(1) ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் 7-ம் தேதி கச்சத்தீவிலுள்ள மாதா கோவில் திருவிழாவிற்கு பொதுமக்களுடன் ஒரு படகில் வந்தனர். அங்கு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு கச்சத்தீவை சுற்றி பார்த்தனர். பிறகு படகுத்துறைக்கு வந்த போது அவர்கள் வந்த படகை காணவில்லை.
இதைத் தொடர்ந்து படகுத்துறையில் நின்று கொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். அப்போது கயிறு அறுந்து படகு கடலுக்குள் சென்றது. அவர்கள் தூங்கி எழுந்து பார்த்தபோது நடுக்கடலில் படகு நின்று கொண்டிருந்தது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 3 பேரையும் மீட்டு நாகைக்கு கொண்டு வந்தனர்.
பின்பு மூவரையும் வேதாரண்யம் கடலோர காவல் நிலைத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று 5-வது முறையாக மீண்டும் வேதாரண்யம் நீதிமன்றத்தில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 17-ந்தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தவிட்டார். இதனையடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகை அருகே உள்ள தெற்கு பொய்கைநல்லூர் பூக்காரத் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (90). இவரது மனைவி ருக்மணி அம்மாள் (85). இவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இணை பிரியா தம்பதியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் முதுமை காரணமாக ருக்மணி அம்மாள் இறந்தார். அவரது இறுதி சடங்கிற்கான பணிகள் நடைபெற்றது.
அப்போது ஆழ்ந்த துக்கத்துடன் காணப்பட்ட வீரப்பனும் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிர் இழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் கணவன்-மனைவி இருவரின் இறுதி சடங்குகளும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் காடம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணையன் மகன் ஜெய்குமார்(வயது 36). இவரது மனைவி சாந்தி(32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் ஜெய்குமார் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த குமணன் மகள் கலாராணி (22) என்பவரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
மேலும் இருவரும் கடந்த மாதம் 27-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி காடம்பாடி அருகே உள்ள சித்தர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாங்கன்ணி கோவிலில் தங்கி இருந்து விட்டு கடந்த 1-ந் தேதி வீடு திரும்பினர்.
வீட்டிற்கு வந்த ஜெய்குமார் தனது முதல் மனைவி சாந்தியிடம் இதுகுறித்து நீ காவல் நிலையத்திலும், உறவினரிடமும் கூறக்கூடாது. மீறி கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் அவரது 2-வது மனைவி கலாராணியும் சாந்தியிடம் நான் யார்? எனது குடும்பத்தினர் யார்? என்று உனக்கு தெரியாது என்றும் இதுகுறித்து எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார்.
இது குறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் நாகை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபா வழக்கு பதிவு செய்து ஜெய்குமார், கலாராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், புங்கனூர், மேலச்சாலை,
கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்பங்கூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுக்கு வருகிற 11-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 35), கருப்பம்புலத்தைச் சேர்ந்தவர் சின்னு (60). இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவு கருப்பம்புலம் கடைவீதியில் நடந்து சென்றனர்.
அப்போது தஞ்சையிலிருந்து வந்த கார் இவர்கள் மீது மோதியதில் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த தஞ்சாவூர் கவிதா என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகை அடுத்த கீவலூர் போலீஸ் சரகம் சேமங்கலம் 3-ம் வாய்க்கால் கரையை சேர்ந்தவர் சுகுமார் (வயது 40) டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன் சுகுமாருக்கு காலில் அடிபட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுகுமார் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாகை இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






