என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை காடம்பாடி புதிய கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்பில் கடந்த 9-ந்தேதி பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணத்தின் அருகே மதுபாட்டிலும், பிளாஸ்டிக் கப், தண்ணீர் பாக்கெட், செருப்புகள் உள்ளிட்டவைகளும், பிணத்துக்கு அடியில் ஒரு செல்போனும் கிடந்தது.

    அந்த செல்போனை எடுத்த போலீசார் அதில் உள்ள நம்பரை கொண்டு தொடர்பு கொண்டபோது, இறந்து கிடந்த பெண் நாகை மாவட்டம் சீர்காழி புதுப்பட்டினம் போலீஸ் சரகம் தாண்டவன்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி தனலட்சுமி (வயது46) என்பதும், சீர்காழி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சுண்டல் விற்று வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சீர்காழி அருகே உள்ள பழையார் பகுதியில் உள்ள மீன் இறங்கும் இடத்தில் வேலை பார்த்து வரும் சிவலிங்கம் (46) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    நாகை நம்பியார்நகர் கன்னிகோவில் பகுதியை சேர்ந்த இவர், தற்போது பழையாறில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சிவலிங்கம் பழையார் பகுதியில் வேலை பார்க்கும்போது அவருக்கும், தனலட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 8-ந்தேதி நாகை புதிய கடற்கரை அருகே உள்ள சவுக்கு தோப்புக்கு தனலட்சுமியை அழைத்து வந்துள்ளார். அங்கு இரவு தனிமையில் இருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சிவலிங்கம், தனலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

    இதையடுத்து சிவலிங்கத்தை போலீசார் கைது செய்து நாகை முதலாவது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வேதாரண்யம் அருகே தீ விபத்தில் கூரை வீடும் 3 கடைகளும் எரிந்து சேதம் அடைந்தன. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு போலீஸ்  சரகம், அவரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுலோச்சனா அன்பழகன். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டை ஒட்டி மகேந்திரன் இறால் தீவன கடையும், சுதர்சன் முடிதிருத்தும் கடையும், ராஜேந்திரன் டீ கடையும் வைத்து நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் மின் கம்பிகள் உரசி தீப்பொறி சுலோச்சனா அன்பழகன் வீட்டின் மீது விழுந்ததால் கூரை வீடும், 3 கடைகளும் எரிந்து சேதமானது. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தகவலறிந்து வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். சம்பவ இடத்திற்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழ்வாணன், அவரிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கன்சுராஜா, தாசில்தார் இளங்கோவன், வேதாரண்யம் சரக துணை கண்காணிப்பாளர் பொன் கார்த்திக்குமார் ஆகியோர் சென்று ஆறுதல் கூறினர்.

    வீடு இழந்த சுலோச்சனா அன்பழகனுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தாசில்தார் இளங்கோவன் வழங்கினார்.
    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    நாகை, திருவாரூர் மாவட்டத்ததை சேர்ந்த அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் மாவட்ட தலைவர் திருவாரூர் முருகானந்தம் வரவேற்றார்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் கு.பாலசுப்பிர மணியன் பேசுகையில் கூறியதாவது;

    மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுபடி வருகிற 2-ந்தேதி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகள் அறிவித்துள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் கலந்து கொள்வது. அதில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், தனியார் மயம், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத் திருத்தம், ஆகியவற்றை எதிர்த்து, குறைந்தபட்ச ஊதியம், குறைந்த பென்‌ஷன், பொதுத்துறை பாதுகாப்பு மற்றும் 7-வது ஊதிய மாற்றம், புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட மத்திய-மாநில அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாத மத்திய-மாநில அரசுகளின் போக்கை கண்டிப்பது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    மயிலாடுதுறையில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை கேணிகரை பகுதியில் உள்ள அலங்கார தெருவை சேர்ந்தவர் பாவாடைசாமி. இவரது மனைவி தையல்நாயகி.

    இவர்களது வீட்டில் தையல்நாயகியின் அக்காள் அம்சம் (55) வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    நேற்று இரவு பாவாடை சாமி வீட்டில் அவரது மனைவி தையல்நாயகி, மகன் அய்யப்பன், மகள் ரம்யா மற்றும் அம்சம் ஆகியோர் படுத்து தூங்கினர். இந்தநிலையில் இன்று அதிகாலை அவர்கள் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதனை கண்ட அனைவரும் வெளியே வந்துவிட்டனர். மாற்றுத்திறனாளியான அம்சம் மட்டும் தீயில் சிக்கி கொண்டார். கூரை வீட்டில் தீ மளமளவென பரவியதால் உள்ளே சென்று அவரை மீட்க முடியவில்லை. இதில் அம்சம் உயிரோடு எரிந்து பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அதிகாரி முனியாண்டி தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.

    தீ விபத்தில் பெண் எரிந்து பலியான சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அம்சம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் தீ விபத்தில் சேதமான வீட்டையும், பலியான அம்சம் உடலையும் பார்த்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    காவிரி பாதுகாப்பு நடைபயண குழுவினர் மயிலாடுதுறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    மயிலாடுதுறை:

    சுவாமி ராமானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு நடைபயணக்குழுவினருக்கு, மயிலாடுதுறையில் வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடைபயணம் மேற்கொண்ட காவிரி பாதுகாப்பு பயணக்குழுவினர், துலாக்கட்ட காவிரியில் ஆரத்தி வழிபாடு செய்தனர்.

    காவிரியின் தூய்மையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக, அகில பாரத துறவியர் சங்கத் தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையிலான காவிரி பாதுகாப்பு பயணக் குழுவினர் காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரியிலிருந்து காவிரி கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஜூன் 15 பயணம் தொடங்கிய காவிரி பாதுகாப்பு பயணக்குழுவினர், மயிலாடுதுறைக்கு வந்தடைந்தனர். அக்குழுவினருக்கு, காவிரி பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பில், மயிலாடுதுறை காவேரி நகரில் வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபயணம் மேற்கொண்ட அக்குழுவினர், துலாக்கட்ட காவிரியில் ஒன்றிணைந்து கூட்டு பிரார்த்தனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் செய்து ஆரத்தி எடுத்து காவிரியை வழிபட்டனர்.

    பூம்புகார் பத்தினிக்கோட்டத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    பூம்புகார் பத்தினிக்கோட்டத்தில் கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ‘கற்புக்கரசி‘ என தமிழர்களால் போற்றப்படுபவர் கண்ணகி ஆவார். இவர் கற்புக்கரசி, பெண்மையின் தெய்வம் எனவும் தமிழர்களால் போற்றப்படுகிறார். பல்வேறு சிறப்புகளை கொண்டு விளங்கும் கண்ணகி, நாகை மாவட்டம் பூம்புகார் பகுதியில் வாழ்ந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

    பூம்புகார் மேலையூரில் அவர் வாழ்ந்த பகுதியில் பத்தினிக்கோட்டம் என்ற பெயரில் கண்ணகிக்கு தனி கோவில் உள்ளது. இங்கு கண்ணகி, ஆடி மாதம் அனு‌ஷம் நட்சத்திரத்தன்று பூப்பல்லக்கில் ஏறி வைகுந்தம் சென்ற நாளை கண்ணகி வீடுபேறு அடைந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டி வருகின்றனர்.

    அதன்படி நேற்று கண்ணகி வீடுபேறு அடைந்த நாளையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கண்ணகி சிலைக்கு பால், பஞ்சாமிர்தம், இளநீர், திரவியப்பொடி, சந்தனம், பூக்கள் உள்ளிட்ட 51 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து அர்ச் சனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கண்ணகிக்கு மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். இதில் பத்தினிக்கோட்ட காப்பாளர் ராஜசேகரன், மாதவி மன்றத்தலைவர் புலவர் தியாகராஜன், பூம்புகார் கல்லூரி தமிழ் பேராசிரியர்கள் அனிதா, சந்தானலட்சுமி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    வேதாரண்யம் அருகே ஆசிரியரை இடமாற்றம் செய்ததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் பழங்கள்ளிமேட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்து விட்டனர்.

    இதுபற்றி அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஒன்றுதிரண்டு பழங்கள்ளிமேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகே நாகை-வேதாரண்யம் சாலையில் இன்று காலை சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், தாசில்தார் இளங்கோவன் மற்றம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடம் சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்

    பொறையார் அருகே அ.தி.மு.க.வினர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தகராறு செய்து மோதிக் கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    பொறையார் அருகே உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கீழத் தெருவை சேர்ந்த பாப்பையன் மகன் பன்னீர்செல்வம், மாணிக்கம் மகன் இளவரசன், செல்வம் மகன்கள் ஸடீபன்ராஜ், முருகானந்தம் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

    இதுதொடர்பாக அவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் அருள் மற்றும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அருள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியாக உள்ளார்.

    இந்த பகுதியில் அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம், இளவரசன், ஸ்டீபன்ராஜ், முருகானந்தம், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதுதொடர்பாக அருள் மற்றும் சிலர் தகராறு செய்து நேற்று மோதிக் கொண்டனர். இதில் காயமடைந்த அதிமுகவை சேர்ந்த 4 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அருள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுபற்றிய புகாரின்பேரில் பொறையார் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குத்தாலத்தில் தி.மு.க. கூட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் அங்குமிங்கும் நாற்காலிகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தில் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் அன்பழகன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் முருகப்பா வரவேற்றார். இதில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    முன்னதாக ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது குத்தாலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர். அதற்கு நகர மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்து கட்சி அலுவலக கதவை இழுத்து மூடினர். மனோகரனின் ஆதரவாளர்கள் கதவை தள்ளி திறக்க முயன்றபோது இரு கோஷ்டியினருக்கும் இடையே தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கட்சி அலுவலகத்திற்குள் அங்குமிங்கும் நாற்காலிகள் வீசப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் கூச்சல் தொடர்ந்ததால் கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. பின்னர் குத்தாலத்தில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதாமுருகன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலாவது கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று மூத்த தி.மு.க. நிர்வாகிகள் மேடையிலேயே அறிவுரை வழங்கினர். இச்சம்பவத்தால் நேற்று குத்தாலம் கடைவீதியே பரபரப்பு அடைந்து காணப்பட்டது.
    வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி கடைசியில் 5 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கும்.

    இந்த திருவிழாவில் பழங்கள்ளிமேட்டைச் சேர்ந்த தலித் மக்கள் தங்களுக்கு ஒரு நாள் மண்டகபடி வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான பிரச்சினை நீடிப்பதால் கோவில் தீருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டு வழி பாட்டுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளா செல்வன் தலைமையில் அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் வேதை தொகுதி செயலாளர் செல்வராசு, துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் பாவரசு, மாவட்ட செயலாளர் குணவேந்தன், மாவட்ட துணைச் செயலாளர் பேரறிவாளன் மற்றும் 30 பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட பொருளாளர் செங்குட்டுவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தாலுக்கா அலுவலக வாயிலில் காவலுக்கு இருந்த காவலர்களை மீறி உள்ளே சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத் தலைவர் ஆனந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகையன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி, விவசாய சங்க மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் சிம்சன், துணைச் செயலாளர் அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகூர் அருகே அரசு பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே உள்ள திருப்புகழூர் புதுக்கடை கீரைத் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (50).இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மைதிலி கணவரை பிரிந்து சென்றார். அவர் செல்லூரில் பெட்டிக் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் பனங்குடியை சேர்ந்த ராணி என்பவரை காளிமுத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மேலவாஞ்சூர் நேருநகரில் வசித்து வந்தனர்.

    வாத நோயால் அவதிப்பட்டு வந்த காளிமுத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யத்தில் தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி மெயின் ரோட்டில் சர்வகட்டளை பகுதியில் மாடி வீட்டில் வசித்து வருபவர் தட்சிணா மூர்த்தி.

    இவர் தோப்புத் துறையில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் குடும்பத்துடன் சென்னை சென்றார்.

    வீட்டிற்கு காவலுக்கு ஒருவரை நியமித்து சென்றார். தலைமை ஆசிரியர் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் பின் பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.

    பின்னர் வீட்டின் 4 கதவுகளின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்றது. அதன் பிறகு பீரோவை உடைத்தது. அங்கு தலையணைக்கு அடியில் 11 பவுன் நகையை தட்சிணாமூர்த்தி வைத்து இருந்தார். தலையணையை உதறி நகைகளை கொள்ளை கும்பல் எடுத்து கொண்டு தப்பி ஓடி விட்டது.

    இன்று காலை தட்சிணா மூர்த்தி வீடு திரும்பினார். அப்போது கொள்ளை நடைபெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

    தலைமை ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்ப்ட சம்பவம் வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×