என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வி‌ஷபாட்டிலுடன் வந்த விவசாயிகள்: கரும்பு நிலுவை தொகை வழங்க வலியுறுத்தல்
    X

    நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வி‌ஷபாட்டிலுடன் வந்த விவசாயிகள்: கரும்பு நிலுவை தொகை வழங்க வலியுறுத்தல்

    நாகையில் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வி‌ஷபாட்டிலுடன் வந்த விவசாயிகளால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிச்சாமி தலைமை வகித்ததார். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

    தலைஞாயிறு கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்தாண்டு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.25கோடி நிலுவை உள்ளது. நடப்பாண்டு ரூ.22 கோடி நிலுவை உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம வழங்கமுடியாமல் கரும்பு விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    ஆண்டுதோறும் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை பாக்கி வைப்பதால் 2012-ம் ஆண்டு 2 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்ட கரும்பு தற்போது 78 ஆயிரத்து 836 டன்னாக குறைந்துவிட்டது.

    எனவே நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கரும்பு விவசாயிகள் தங்களது கையில் பூச்சி மருந்து பாட்டிலுடன் கலெக்டர் பழனிச்சாமியை முற்றுகையிட்டனர்.

    அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டருக்கு ஆதரவாக நெல் விவசாயிகள் சிலர் பேசினர். இதனால் கரும்பு விவசாயிகளுக்கும், நெல் விவசாயிகளுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது போலீசார் தலையிட்டு விவசாயிகளை அமைதிப்படுத்தினர்.

    பின்னர் கூட்டத்தின் நுழைவு வாயிலில் கரும்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில விவசாயிகள் கையில் கரும்பையும், சில விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டிலையும் வைத்திருந்தனர். இதனால் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×