என் மலர்
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் புருஷோத்தமன். இவர் தேத்தாகுடி கிராமத்தில் உள்ள குளுந்தாளம்மன் கோவிலுக்கு ஒரு ஆட்டு கிடாவை வேண்டி வளர்த்து வந்தார்.
அந்த ஆட்டு கிடா சமீபத்தில் இறந்து விட்டது. இது குறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதில் புருஷோத்தமன் அருகில் உள்ளவர்கள்தான் ஆட்டு கிடாவை கொன்று விட்டார்கள் என்று கூறி உள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் காமராஜ் என்பவர் ஏன் அனாவசியமாக திட்டுகிறாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கட்டையால் தாக்கி கொண்டனர்.
இதில் காயமடைந்த காமராஜ் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் காயமடைந்த புருஷோத்தமன், சுப்பிரமணியன் ஆகிய இருவரும் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் புருஷோத்தமன், சுப்பிரமணியன், அமிர்த லிங்கம் ஆகியோர் மீதும், சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் காமராஜ் மற்றும் அவரது மனைவி சுந்தரம்பாள் ஆகியோர் மீதும் தனித்தனியே வேட்டைக் காரனிருப்பு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று பெரிய தேர் பவனியும், நாளை (வியாழக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழாவும் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாளை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாகை மாவட்ட கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தென்ன மரக்குடி தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 47).
இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ரூ.83 ஆயிரம் எடுத்து வந்துள்ளார். கூறைநாடு பகுதி காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக். பள்ளி அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.83 ஆயிரம் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிறிஸ்தவ ஆலயங் களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, ஆரோக்கியமாதாவை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பெரிய தேர்பவனி வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு செல்வதும் வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (புதன்கிழமை) இரவு 7.30மணிக்குநடைபெறுகிறது. இதில் ஆரோக்கிய மாதா அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி லட்சக் கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வரும் நிகழ்ச்சி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.
பெரிய தேர்பவனி நடை பெறுவதை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணியில் பக்தர் கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்கள் புதிய பேராலயத்தில் இருந்து மாதா குளம் பேராலயத்துக்கு செல்லும் சிலுவைப்பாதையில் மண்டியிட்டு சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போலீஸ் தரப்பில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம், குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (70). விவசாயி. இவர் தனது உறவினருக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார். குறுவை நடவுசெய்து பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் கதிர்முற்றிய பயிர்கள் வயலில் சாய்ந்து மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நெல் முளைத்து சேதமடைந்தது.
இதன் காரணமாக சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த செல்வராஜ், கடந்த 3-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் இறந்தார்.
குறுவை பயிர் சேதமடைந்ததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாது என்ற மனஉளைச்சலில் செல்வராஜ் விஷம் குடித்து இறந்ததாக அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நடராஜ் (27).
இவருக்கும் காரைமேடு மணல்மேடு பகுதியை சேர்ந்த சேகர் மகள் விஜயசாந்திக்கும் (20) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் இன்று காலை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற இருந்தது.
இதற்காக நேற்று இரவே மணமகள் மணமகன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.இன்று காலை மணமக்கள் உள்பட 20 பேர் ஒரு வேனில் திருமணத்திற்கு தேவையான பொருட்களுடன் திருக்கடையூர் புறப்பட்டனர்.
வேனை கீழமாத்தூரை சேர்ந்த டிரைவர் ராஜீவ்காந்தி ஓட்டி சென்றார். சீர்காழி அருகே உள்ள சூரக்காடு பகுதியில் வேன் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் ரோடு ஓரம் தாறுமாறாக ஒடத் தொடங்கியது. அந்த சமயத்தில் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்த இளஞ்சியம் (45)என்ற பெண் பக்தர் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் மீது வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார். அதன் பின்னரும் கட்டுக்கடங்காத வேன் ரோடு ஓரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் மணமக்கள் நடராஜ், விஜயசாந்தி, மணமகள் தாய் கவிதா, உறவினர்கள் சுமதி, கட்டா நகரம் அமிர்தம், காரைமேடு சங்கர் கணேஷ், ஆச்சாள் புரம் சிவா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த கலைச் செல்வி, பானுமதி, டிரைவர் ராஜீவ்காந்தி உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் காயம் அடைந்து வேனில் சிக்கி இருந்த மணமக்கள் உள்பட 14 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 43). இவர் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட் வடகட்டளை நல்லத்தன் காடு பகுதியில் உதவி தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று அவரது சித்தப்பா மகன் திருமணம் நடைபெற்றது. அதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.அப்போது தேத்தாக்குடி பகுதி வைத்தியர்காடு என்ற இடத்தில் சென்ற போது கீழே விழுந்து படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் செம்பியன் மகாதேவி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (40). விவசாயி.
இவரது நண்பர் பாலக்குறிச்சியை சேர்ந்த நாகேந்திரன் (62). டிரைவர். இவர்கள் இருவரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றனர். பின்னர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேவூர் மெயின்ரோட்டில் வரும் போது எதிரே வந்த ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த கருணாநிதி சம்பவ இடத்தில் இறந்தார். நாகேந்திரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் சிக்கிய அம்னி வேன் நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் வேன் டிரைவர் தாமோதரன் அதில் பயணம் செய்த 5 பேர் காயம் அடைந்தனர். இதில் தாமோதரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்ற 5 பேர் கீழ்வேளூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மயிலாடுதுறை:
திருவாரூர் மாவட்டம் பேரளம் காரைக்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜெயமாலா (22). இவர் மயிலாடுதுறை அரசு பெண்கள் கல்லூரியில் வரலாற்றுத் துறை 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர், மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளக்கரையில் ஜெயமாலா இறந்து கிடந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவியின் உறவினர்கள் திரண்டனர். அவர்கள் ஜெயமாலா சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வ ருகிறார்கள்.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி அருகே உள்ள வானகிரி மீனவ கிராமம், சுனாமி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அன்பு (29). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
நேற்று மாலை இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வானகிரியில் இருந்து சந்திரபாடி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது தரங்கம்பாடி உப்பனாற்று அருகே ஒரு நாய் குறுக்கே வந்ததால் இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அன்பு காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமாருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி மெயின்ரோட்டில் ஈசனூரில் ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.
இக்கல்லூரி சார்பில் இயக்கப்படும் பஸ் கிராம பகுதிகளுக்கும் சென்று மாணவர்களை காலையில் கல்லூரிக்கு அழைத்து வரும். பின்னர் மாலையில் அக்கல்லூரி பஸ் மூலமே அவர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்வர்.வழக்கம்போல் இன்று காலை அந்த தனியார் கல்லூரி பஸ் சுற்றுப்பகுதிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேட்டைக்காரனிருப்பிலிருந்து தலை ஞாயிறு நோக்கி வந்து கொண்டிருந்தது.
காலை 9.30 மணியளவில் முதலியப்பன்கண்டி என்ற இடத்தில் பஸ் வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக டிரைவர் பஸ்சை திருப்பியுள்ளார்.
இதில் நிலைதடுமாறி பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கியது. இதனால் அதில் இருந்த மாணவ-மாணவிகள் அலறினர். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டனர். பின்னர் காயமடைந்த டிரைவர் உள்பட மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை மற்றும் தலைஞாயிறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டியிலிருந்து தீயணைப்பு நிலைய வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தாசில்தார் இளங்கோவன், தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சட்டப்பஞ்சாயத்து பொறுப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோரும் அங்கு குவிந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம்:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர், அலுவலகம், வருவாய்கோட்ட அலுவலர் அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளிலும் வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்த 1502 வாக்கு சாவடிகள் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளில் முறையே சீர்காழி (தனி) சட்டமன்றத்தொகுதியில் 2,31,141 வாக்காளர்கள், பூம்புகார் தொகுதியில் 2,54,331 வாக்காளர்கள், நாகப்பட்டினம் தொகுதியில் 1,83,145 வாக்காளர்கள், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 1,63,269 வாக்காளர்கள், வேதாரண்யம் தொகுதியில் 1,80,331 வாக்காளர்கள் என மொத்தம் 12,45,970 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 6,17,248 ஆண் வாக்காளர்களும், 6,28,705 பெண் வாக்காளர்களும், 17 வாக்காளர்க் இதர இனத்தை சார்ந்தவர்கள் ஆவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 11457 பேர் அதிகமாக உள்ளனர்.
சிறப்பு சுருக்க திருத்தம், 2017 தொடர்பாக 1.1.2017 -ஐ தகுதி நாளாக கொண்டு பெயர் சேரத்தல் (படிவம் 6), நீக்கல் (படிவம் 7) மற்றும் திருத்தங்கள (படிவம் 8) தொடர்பான மனுக்கள் வாங்கும் பணி நேற்று முதல் 30-ந் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி அமைவிடங்களிலும் நடைபெறுகிறது.
11 மற்றும் 25-ந் தேதி வாக்குச்சாவடி மையங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மனுக்கள் வாங்குதல் பணி நடைபெற உள்ளது. எனவே 1.1.17 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (31.12.1999 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்), இடமாற்றம் செய்தவர்கள், தங்களின் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை தொடர்புடைய அலுவலகங்களில் உரிய படிவங்களை சமர்பித்தோ அல்லது இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணபித்தோ பயன்பெறுமாறு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.






