என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே வேன் மோதி வேளாங்கண்ணி வந்த பெண் பக்தர் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் நடராஜ் (27).
இவருக்கும் காரைமேடு மணல்மேடு பகுதியை சேர்ந்த சேகர் மகள் விஜயசாந்திக்கும் (20) திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இவர்களது திருமணம் இன்று காலை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடைபெற இருந்தது.
இதற்காக நேற்று இரவே மணமகள் மணமகன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.இன்று காலை மணமக்கள் உள்பட 20 பேர் ஒரு வேனில் திருமணத்திற்கு தேவையான பொருட்களுடன் திருக்கடையூர் புறப்பட்டனர்.
வேனை கீழமாத்தூரை சேர்ந்த டிரைவர் ராஜீவ்காந்தி ஓட்டி சென்றார். சீர்காழி அருகே உள்ள சூரக்காடு பகுதியில் வேன் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் ரோடு ஓரம் தாறுமாறாக ஒடத் தொடங்கியது. அந்த சமயத்தில் சிதம்பரம் அருகே உள்ள வல்லம் படுகையை சேர்ந்த இளஞ்சியம் (45)என்ற பெண் பக்தர் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அவர் மீது வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலே அவர் பலியானார். அதன் பின்னரும் கட்டுக்கடங்காத வேன் ரோடு ஓரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் மணமக்கள் நடராஜ், விஜயசாந்தி, மணமகள் தாய் கவிதா, உறவினர்கள் சுமதி, கட்டா நகரம் அமிர்தம், காரைமேடு சங்கர் கணேஷ், ஆச்சாள் புரம் சிவா, சென்னை அண்ணா நகரை சேர்ந்த கலைச் செல்வி, பானுமதி, டிரைவர் ராஜீவ்காந்தி உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் காயம் அடைந்து வேனில் சிக்கி இருந்த மணமக்கள் உள்பட 14 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






