என் மலர்
செய்திகள்

நாகையில் 6 தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நாகப்பட்டினம்:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர், அலுவலகம், வருவாய்கோட்ட அலுவலர் அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட வாக்குசாவடிகளிலும் வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்த 1502 வாக்கு சாவடிகள் உள்ளன. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத்தொகுதிகளில் முறையே சீர்காழி (தனி) சட்டமன்றத்தொகுதியில் 2,31,141 வாக்காளர்கள், பூம்புகார் தொகுதியில் 2,54,331 வாக்காளர்கள், நாகப்பட்டினம் தொகுதியில் 1,83,145 வாக்காளர்கள், கீழ்வேளூர் (தனி) தொகுதியில் 1,63,269 வாக்காளர்கள், வேதாரண்யம் தொகுதியில் 1,80,331 வாக்காளர்கள் என மொத்தம் 12,45,970 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 6,17,248 ஆண் வாக்காளர்களும், 6,28,705 பெண் வாக்காளர்களும், 17 வாக்காளர்க் இதர இனத்தை சார்ந்தவர்கள் ஆவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 11457 பேர் அதிகமாக உள்ளனர்.
சிறப்பு சுருக்க திருத்தம், 2017 தொடர்பாக 1.1.2017 -ஐ தகுதி நாளாக கொண்டு பெயர் சேரத்தல் (படிவம் 6), நீக்கல் (படிவம் 7) மற்றும் திருத்தங்கள (படிவம் 8) தொடர்பான மனுக்கள் வாங்கும் பணி நேற்று முதல் 30-ந் தேதி வரை வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்குசாவடி அமைவிடங்களிலும் நடைபெறுகிறது.
11 மற்றும் 25-ந் தேதி வாக்குச்சாவடி மையங்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மனுக்கள் வாங்குதல் பணி நடைபெற உள்ளது. எனவே 1.1.17 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (31.12.1999 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்), இடமாற்றம் செய்தவர்கள், தங்களின் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை தொடர்புடைய அலுவலகங்களில் உரிய படிவங்களை சமர்பித்தோ அல்லது இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணபித்தோ பயன்பெறுமாறு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.






