என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.
    X
    வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி இன்று நடக்கிறது

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி இன்று (புதன் கிழமை) நடைபெறுகிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் உள்ளது. ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் “லூர்து நகர்” என்ற பெருமையுடன் அழைக்கப் படுகிறது.

    கிறிஸ்தவ ஆலயங் களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய “பசிலிக்கா” என்ற அந்தஸ்து பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் கட்டிட அழகு காண்போரை பிரமிக்க செய்வதாகும். வங்க கடலோரம் அமைந்துள்ள இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து, ஆரோக்கியமாதாவை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பெரிய தேர்பவனி வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு செல்வதும் வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று (புதன்கிழமை) இரவு 7.30மணிக்குநடைபெறுகிறது. இதில் ஆரோக்கிய மாதா அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளி லட்சக் கணக்கான பக்தர்கள் மத்தியில் வலம் வரும் நிகழ்ச்சி காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும்.

    பெரிய தேர்பவனி நடை பெறுவதை முன்னிட்டு நேற்று வேளாங்கண்ணியில் பக்தர் கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வருகை தரும் பக்தர்கள் புதிய பேராலயத்தில் இருந்து மாதா குளம் பேராலயத்துக்கு செல்லும் சிலுவைப்பாதையில் மண்டியிட்டு சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போலீஸ் தரப்பில் கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×