என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குத்தாலம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன் வாய்க்காலில் கவிழ்ந்ததால் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே மங்கைநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து மயிலாடுதுறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு தனியார் வேன் ஒன்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை வந்து கொண்டிருந்தது. வேனில் 8 மற்றும் 10-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 15 பேர் இருந்தனர்.

    காலை 9 மணிளவில் மங்கைநல்லூர் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.

    உடன் அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று வேனில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேனை ஓட்டி வந்த கிளியனூரை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேன் வாய்காலில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவிலில் கர்நாடகா லாரி மற்றும் ஜீப் கண்ணாடி கண்ணாடிகளை உடைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரை கன்னடர்கள் தாக்கி உள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு ஒரு லாரி வந்தது. இந்த லாரி நேற்று இரவு 10.30 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி செங்கமேடு பகுதி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் வந்தவர்கள் கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி நிற்பதை கண்டதும் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவரை தாக்கினர்.

    மேலும் லாரியின் கண்ணாடிகளை உடைத்தனர். லாரி டிரைவர் நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று கூறியதால் லாரியை எரிக்காமல் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்தி (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நாகை மாவட்ட எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர். பின்னர் அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு ஜீப் நிறுத்தபட்டிருந்தது. அதில் சுற்றுலா வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 13 பேர் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சிலர் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஜீப் நிற்பதை கண்டதும் அதன் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வைத்தீஸ் வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் தமிழக கோவில்களை தரிசிக்க வந்தோம். இனி ராமேஸ்வரம் கோவில் செல்ல வேண்டும் என்று கூறினர். இதை தொடர்ந்து கர்நாடகா பதிவு எண் பலகையை எடுத்துவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரும் புகார் செய்யததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

    இதையொட்டி நேற்று இரவு சீர்காழி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவச்சிலையை தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் திறந்து வைத்தார்.
    வேளாங்கண்ணி:

    வேளாங்கண்ணியில் அன்னை தெரசா முழு உருவச்சிலையை தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் திறந்து வைத்தார்.

    அன்பினாலும், கருணையினாலும், மனித நேயத்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்தவர் அன்னை தெரசா. 47 ஆண்டுகள் மக்களுக்கு தொண்டாற்றிய அன்னை தெரசா கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். கடந்த 4-ந்தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் அன்னை தெரசாவின் பெயரை புனிதர்கள் பட்டியலில் சேர்க்கிறோம் என்று அறிவித்தார். இதன்மூலம் அன்னை தெரசா கொல்கத்தாவின் புனித தெரசா ஆனார். அன்னை தெரசா புனித தெரசா என்று அழைக்கப்படுகிறார்.

    இதைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் சார்பில் அன்னை தெரசாவுக்கு வேளாங்கண்ணியில் முழுஉருவசிலை நிறுவப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய கீழ்கோவிலில் இருந்து அன்னை தெரசாவின் முழுஉருவச்சிலை வேளாங்கண்ணி உயர்நிலை பள்ளிக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டுள்ள புனித தெரசா வளாகத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பின்னர் அங்கு சிலை நிறுவப்பட்டது. தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், சிலையை புனிதம் செய்து திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. விழாவில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் பிரபாகர், பங்கு தந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் ஜோதிநல்லப்பன், ஆரோக்கியசுந்தரம், பேரூராட்சி தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜூலியட்அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    கொள்ளிடம் அருகே பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் பழையபாளையம் ஊராட்சியில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் குறித்தும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்க மளித்தனர்.

    இ-சேவை மையங்களை அமைத்து, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களும் கணினி மூலம் உடனடியாகப் பெறுவதற்கும், ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் அம்மாதிட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன. அந்தந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச்சான்று போன்றவற்றிற்காக கோரிக்கை மனுக்களை அளித்து அன்றைய தினமே பெற்றுக் கொள்ளலாம்.”

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமில் வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் மற்றும் பட்டா நகல்களையும், 34 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையும், 6 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புதிட்டத்தின் கீழ் ரூ.72,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத் துறையில் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1504 மதிப்பில் விலையில்லா தென்னங்கன்றுகள், நெல் நுண்ணூட்டங்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.19,600 மற்றும் ரூ.756 மதிப்பில் மானிய விலையில் உரம் என மொத்தம் ரூ.94 ஆயிரத்து 360 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் சுபாநந்தினி, ஒன்றியக்குழுத் தலைவர் மீனா, இணை இயக்குநர் (வேளாண்மை) சேகர், வட்டாட்சியர் மலர்விழி, ஊராட்சி மன்றத் தலைவர் மலர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    நாகை பகுதியில் படகு பழுதாகி கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் மீட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 46). மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 31-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த செல்வம் (37), சின்னதுரை (50), சதீஷ் (35), ஆதிகேசவன் (27), மோகன் (29), கந்தசாமி (35), ரத்தினசாமி (30) ஆகிய 7 பேரும் கடுவையாற்றில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி அவர்கள் மீன்பிடித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் சென்ற படகின் என்ஜின் பழுதானது. இதனால் அவர்கள் என்ன செய்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர்.

    அவர்கள் இதுகுறித்து இந்திய கடலோர காவல்படைக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களிடம் உதவி கேட்டனர்.

    பின்னர் அந்த மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சென்று தத்தளித்த 7 மீனவர்களையும், படகையும் நாகை துறைமுகத்திற்கு மீட்டு வந்தனர்.

    இதுகுறித்து மீட்கப்பட்ட மீனவர்கள் கூறியதாவது:-

    நாங்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது படகு என்ஜின் பழுதானது. அப்போது இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் நாங்கள் 2 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். பின்னர் அந்த வழியாக வந்த மீனவர்கள் எங்களையும், படகையும் மீட்டு கரை சேர்த்தனர். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பீன் மீன்களை வனத்துறையினர் கடற்கரையில் புதைத்தனர்.

    வேதாரண்யம்,செப்.10-

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் செல்லக்கண்ணி வாய்க்கால் அருகே கடலில் சுமார் 100 மீட்டர் தொலைவில் டால்பின் மீன் ஒன்றும், கடற்கரைக்கு அருகில் ஒன்றும் என இரண்டு டால்பின்கள் அழுகிய நிலையில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. மீன்கள் இரண்டும் சுமார் 5 அடி உயரம், 10 நீளமும், சுமார் 300 கிலோ எடை கொண்டதாக காணப்பட்டது.

    இது குறித்த தகவலின் பேரில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் பழனிச்சாமி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மீன்களை கடற்கரையில் புதைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே லாரி வயலில் கவிழ்ந்து டிரைவர் படுகாயமடைந்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மூவாலூர் மகராஜபுரம் பகுதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 315 நெல் மூட்டைகளை அசிக்காட்டை சேர்ந்த வியாபாரி கண்ணன் கொள்முதல் செய்து லாரியில் ஏற்றி சென்றார். லாரி அப்பகுதியில் உள்ள ரெயில்வே கிராசிங்கை கடந்தபோது அங்கு போடப்பட்ட வேகத்தடையில் ஒருபக்கமாக சரிந்து வயலில் கவிழ்ந்தது.

    இதில் லாரியை ஓட்டிவந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுர் கொத்தனூர் மகன் ரெங்கராஜ்(42) படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ரெயில்வே நிர்வாகம் போட்டுள்ள வேகத்தடை கான்கிரீட்டில் செய்த ஸ்லாப் 5 எண்ணிக்கை குறைவான அகலத்தில் போடப்பட்டது. இதனால் லாரியில் லோடு ஏற்றி வந்தபோது ஒருபக்க வீல் மட்டும் வேகத்தடையில் ஏறியதால் மறுபுறம் பள்ளத்தில் இறங்கி லாரி வயலில் கவிழ்ந்தது. இதை ரெயில்வே நிர்வாகம் உடன் சரிசெய்து அகலப்படுத்த வேண்டும் என்றனர்.

    வேதாரண்யத்தில் பஸ் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழகத்தைச் சேர்ந்த பஸ் சென்னைக்கு சென்று விட்டு, வேதாரண்யத்திற்கு பயணிகளுடன் திரும்பி கொண்டிருந்தது. பஸ்சின் டிரைவராக கத்தரிப்புலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், கண்டக்டராக தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்த தர்மமணி ஆகியோர் இருந்தனர்.

    இந்நிலையில் பஸ் தேத்தாகுடி வடக்கு புதுரோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வேதாரண்யத்திலிருந்து எதிரே வந்த ஆம்னி வேன் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் பஸ்சின் வலது புறம் மற்றும் கண்ணாடிகள் உடைந்தது. இதேபோல் வேனின் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த கரியாப்பட்டினம் வடக்கு ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே தனியார் பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வேடல் தெருவை சேர்ந்தவர் ஜீவா என்கிற ஜீவானந்தம் (25). இவரது நண்பர் தினேஷ் (21). நெய்குப்பை கீழ தெருவை சேர்ந்தவர். இருவரும் வைத்தீஸ்வரன் கோவிலில் அகல் விளக்கு செய்து விற்பனை செய்து வந்தனர்.

    இன்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சீர்காழி வந்தனர். பின்னர் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். செங்கமேடு என்ற இடத்தில் ஒரு திருப்பத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.

    அப்போது மயிலாடு துறையில் இருந்து சிதம்பரத்திற்கு தனியார் பஸ் சென்றது. இந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ஜீவானந்தம், தினேஷ் ஆகியோர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. அவர்கள் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்கள்.

    விபத்து குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த நடராஜ் (48), கண்டக்டர் காட்டுமன்னார் கோவில் முருகன் ஆகியோரை கைது செய்தனர்.

    2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புது வாழ்வு திட்டம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுவாழ்வு திட்ட செயல்பாட்டின் ஒரு பகுதியாக கீழ்வேளுர் வட்டாரத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் புதுவாழ்வு மனநல திட்டம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அறிவுரையின்படி இம்மாவட்டத்தில் மொத்தம் 386 மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் மனநலம் குன்றியவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இவர்களில் 124 பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு தனிநபர் கடனாக ரூ. 15 லட்சத்து 54 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. ஆடு மற்றும் கறவை மாடுகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட இக்கடனை பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள்.

    சென்ற 2015-ம் ஆண்டு கீழ்வேளுர் வட்டாரத்தில் உள்ள 3 களப்பகுதிகளில் 100 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி மற்றும் தீவனம், உபகரணங்கள் உட்பட தலா ரூ. 2500 வீதம் மொத்தம் ரூ. 2,50,000 நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகிறார்கள். அந்த நாட்டுக்கோழி வளர்ப்பின் மூலம் முட்டைகள் பெறப்பட்டு விற்பனை செய்து பயனடைந்து வருகிறார்கள்.

    இவ்வாண்டு கீழ்வேளுர் வட்டாரத்திற்கு உட்பட்ட 3 களப்பகுதிகளில் 262 பயனாளிகளுக்கு நாட்டுக் கோழி வளர்ப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டு நாட்டுக்கோழிகள், தீவனம் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு ரூ. 6,55,000 நிதி அனுமதிக்கப்பட்டு அதற்கான நாட்டுக்கோழி குஞ்சுகள், தீவனம் மற்றும் உபகரணங்களை வழங்கப்பட்டது.

    மேலும் தனிநபர் கடனாக 209 மனநலம் குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆடு மற்றும் மாடு வளர்ப்பிற்காக தனிநபர் கடனுதவி ரூ.34,12,500-ஐ கலெக்டர் பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, புதுவாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் மணிராஜ், மாவட்ட பால்வள ஆலோசகர் டாக்டர் இப்ராஹிம், உதவி திட்ட மேலாளர் மனுநீதிசோழன், அணி தலைவர்கள் மற்றும் திட்டப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலய பெரிய தேர்பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 8-ந் தேதியையொட்டி ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாநாட்களில் தினமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சிலுவை பாதைவழிபாடு, ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை உள்ளிட்ட பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார். இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் முகப்பிலிருந்து தேர் புறப்பட்டு சென்றது. தேர்புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டிருந்த பக்தர்கள் ‘‘ஆவேமரியா வாழ்க’’ என கோ‌ஷமிட்டு பிரார்த்தனை செய்தனர்.

    மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மன்சு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியர், அமலோற்பவமாதா, புனித உத்திரியமாதா ஆகியோரின் தேர்கள் வண்ண மின்விளக்கு அலங்காரத்துடன் அணி வகுத்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடந்தது. தேர் மீது பக்தர்கள் பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கியமாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

    இந்தநிகழ்ச்சியில் தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுதிருப்பலி நிறைவேற்றப்பட்டது. தேர்பவனியில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி, போலீஸ் சூப்பிரண்டு துரை, வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பாராஜரத்தினம், உதவி பங்குதந்தைகள் ஜோதி நல்லப்பன், ஆரோக்கியசுந்தரம் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும், வேளாங்கண்ணி முழுவதும் பல்வேறு இடங்களில் கூடியிருந்த பக்தர்களும் காணும் வகையில் தேர்பவனி நிகழ்ச்சியானது அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தேர்பவனியையொட்டி வேளாங்கண்ணி முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆரோக்கிய மாதா பிறந்தநாளான இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.

    காவிரி பிரச்சனையில் பிரதமரை சந்தித்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டத்தை அந்த மாநில அரசு தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் அனைத்து கட்சியினரும் தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது என்பதற்காக கூடுகின்றனர்.

    தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக முதல்-அமைச்சர் மறுக்கிறார். இதில் முதல்-அமைச்சருக்கு என்ன தயக்கம்?

    முதல் -அமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பிரதமரை சந்தித்து நெருக்கடியை கொடுக்க வேண்டும்.

    மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது என சதானந்த கவுடா சவால் விட்டிருக்கிறார். இது மத்திய அரசின் சதி திட்டம்.

    பிரதமருக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும். கேரள அரசின் சிறுவாணி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அக்கிரம செயல்.

    டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தொடரும். இதில் மற்ற கட்சிகள் இணைவதற்கு வாய்ப்பு இருக்காது. உள்ளாட்சி தேர்தலில் நேரடியாக தலைவர் தேர்தலை ரத்து செய்து விட்டு உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என்பது குதிரை பேரத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    ×