என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே ஒருதலைக் காதலில் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள நெய்விளக்கை சேர்ந்த காசிநாதன் மகன் ராஜா (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த பேபி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

    இந்த நிலையில் ராஜா தோப்புத்துறையில் வசிக்கும் தனது மாமன் சேகர் என்பவர் மகள் நந்தினி (17) என்பவரை திருமணம் செய்ய விரும்பி ஒருதலைக்காதலில் அவருக்கு கடிதம் எழுதியதுடன் போனில் பேசியும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணகளஞ்சியம் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.
    சீர்காழியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி கடவாசல் மேல தெருவை சேர்ந்தவர் முருகன். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தாண்டவன் குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த விஜயபாஸ்கர்(21) வந்தார்.

    சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் மோட்டார் சைக்கிளை அவர் தான் திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    விஜயபாஸ்கர் மீது வேறு ஏதாவது திருட்டு வழக்கு உள்ளதா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    வேதாரண்யத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள். தங்கை முறை கொண்ட பெண்ணுடன் வாலிபர் மாயமானது வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் புதுத்தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்தி (வயது 32). இவர் பல்லடத்தில் உள்ள தனது சித்தப்பா ராஜேந்திரன் வீட்டில் தங்கி வெல்டிங் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கார்த்தி வேதாரண்யம் வந்தார். அப்போது வீட்டில் சொத்து பிரச்சிணை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதி திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவுக்கு கார்த்தி மோட்டார் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தனது சித்தப்பா மகள் சரண்யாவையும் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாயமான 2 பேரையும் பல இடங்களில் தேடினர். அப்போது கார்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் நாகையில் உள்ள ஒரு வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. கார்த்தி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சரண்யாவை அழைத்துக்கொண்டு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

    இதைத் தொடர்ந்து 2 பேரும் மாயமானது குறித்து கார்த்தியின் அண்ணன் அசோக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகிறார்கள். தங்கை முறை கொண்ட பெண்ணுடன் வாலிபர் மாயமானது வேதாரண்யத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    படகில் வழி தவறி வந்த இலங்கை தம்பதிக்கு 8-வது முறையாக காவலை நீட்டித்து வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    இலங்கை வவுனியாவை அடுத்த மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (23). விவசாயி. இவரது மனைவி துவாரகா (22) இவர்களது மகள் சகிதா (1).

    இவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பொதுமக்களுடன் ஒரு படகில் சென்றனர்.

    விழா முடிந்ததும் 3 பேரும் படகு மாறி ஏறி தூங்கி விட்டனர். அந்த படகின் கயிறு அறுந்து நடுக்கடலுக்கு வந்து விட்டது.

    அந்த வழியாக சென்ற நாகை மீனவர்கள் படகில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு நாகை அழைத்து வந்தனர். பின்னர் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக வழக்கு பதிந்து கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    நீதிபதி தீனதயாளன் உத்தரவுப்படி 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிவடைந்ததையடுத்து 3 பேரும் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 28-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 8-வது முறையாக இவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    மயிலாடுதுறை அருகே விவசாய தொழிலாளர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேமாத்தூர் பகுதியில் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு எந்திர நடவு மூலம் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கு விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். எந்திர நடவு முறைக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள் கடந்த வாரம் உண்ணாவிரதம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் மேமாத்தூர் பகுதியில் 75 சதவீத நிலங்கள் எந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டு விட்டது. மேமாத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் நடவு செய்யப்படாமல் இருந்தது.

    அவர் எந்திரம் மூலம் நடவு செய்ய திட்டமிட்டு இருந்தார். இன்று காலை எந்திரம் மூலம் நடவு பணி தொடங்கியது. இதனை கேள்விப்பட்ட 40 பெண்கள், 30 ஆண்கள் என விவசாய தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் பதட்டம் நிலவியது. தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர். நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி.காளி தீர்த்தம், சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    விவசாய தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆண்கள் மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்திற்கும் பெண்கள் செம்பனார் கோவிலில் உள்ள திருமண மண்டபத்திற்கும் கொண்டு செல்லப் பட்டனர்.

    பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எந்திர நடவு பணி நடைபெற்றது.

    சீர்காழி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை- சீர்காழி- சிதம்பரம் மார்க்கத்தில் செல்லும் தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றிசெல்வதற்காக அரசுபஸ்கள் மற்றும் பிற பஸ்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்கின்றன. போக்குவரத்து விதி முறைகளை மீறி நகர் பகுதியிலும் அதிவேகமாக தனியார் பேருந்துகள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.

    பள்ளி நேரங்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வேகத்தினை குறைக்காமல் ஏர் ஹாரனை பயன் படுத்தி செல்லும் தனியார் பஸ்களால் சாலைகளில் இருசக்கரவாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் நிலைதடுமாறி விழுந்து அடிபடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிவேகமாக சென்ற வள்ளிகந்தன் தனியார் பஸ்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் பலியாகினர்.

    இதேபோல் நகரில் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மீது அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் சீர்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு அதிவேகமாக சென்ற டி.கே.எம் தனியார் பஸ்சை அரசூர் பகுதியில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.பின்னர் ஓட்டுனரிடம் வேகமாக செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். அதனையும் மீறி இனி வேகமாக சென்றால் பஸ்சை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைப்போம் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கோடியக்கரை அருகே கார் ஆற்றில் கவிழ்ந்து 5 பேர் காயம் அடைந்தனர்.

    வேதாரண்யம்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன், அவரது மனைவி சிவகாமி,. மற்றும் சம்பந்தம் ஆகியோர் திதி கொடுப்பதற்காக கோடியக்கரைக்கு காரில் சென்றனர். காரை கோட்டூரை சேர்ந்த தங்கவேல் மகன் குணசேகரன் (வயது 27) ஓட்டி வந்துள்ளார்.

    கார் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மருதூர் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அங்குள்ள மானங்கொண்டான் ஆற்றில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் உள்பட காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் குணசேகரன், சம்பந்தம் ஆகிய இருவருரையும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், சிவகாமி, கோவிந்தராஜன், விஸ்வநாதன் ஆகியோரை திருவாரூர் அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவயது ஆண்குழந்தை பலியானது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே மடவாமேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணா (வயது 20) . இவர் தனது ஒருவயது குழந்தை ஹர்சன் மற்றும் தனது உறவினர்களான சந்திரம்மாள் (55), சுந்தராம்பாள் (48), கண்ணகி (24), நந்தினி (30) ஆகியோருடன் பூம்புகாரில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோவை புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஓட்டி சென்றுள்ளார்.

    ஆட்டோ கூழலயார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோ டிரைவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அப்போது ஆட்டோவை நிறுத்தாமல் செல்போன் பேசிக்கொண்டே ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார்.

    பின்னால் அமர்ந்து வந்தவர்கள் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி செல்போன் பேசிவிட்டு ஆட்டோவை ஓட்டுமாறு கூறியுள்ளனர். அதனை கேட்காமல் அவர் தொடர்ந்து செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். செல்போன் பேசியவாறே ஆட்டோவை வளைவில் திருப்பியுள்ளார். அப்போது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி சென்றுவிட்டார்.

    ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் அதில் மாட்டிக்கொண்டிருப்பதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆட்டோவில் இருந்தவர்களை மீட்டனர். அவர்கள் அனைவரும் பலத்த காயமடைந்திருந்தனர்.

    உடனே அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தில் காயம் அடைந்த அருணாவின் ஒரு வயது குழந்தை ஹர்சன் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தது. குழந்தை இறந்தது குறித்து தகவல் அறிந்த அருணா மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுதது அங்கு சுற்றி இருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவளைத்தது.

    இந்த விபத்து குறித்து புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகிறார்.

    மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மணிமாறன் தலைமை தாங்கினார். குணசேகரன் வரவேற்று பேசினார். மாநில துனைத்தலைவர் டி.கணேசன், வி.நெடுமாறன், சாலைப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்டம் ஆர்க்காடு வட்டம் மாம்பாக்கம் சரகத்தில் பணிபுரிந்து வந்த கிராம உதவியாளர்கள் 2 பேர் கடந்த 9-ந்தேதி இரவு மணல் தடுப்பு நடவடிக்கைக்காக வட்டாச்சியரால் அழைத்துசெல்லப்பட்டு சாலைவிபத்தில் இறந்தனர்.

    அவர்கள் இருவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த விபத்தில் படுகாயமடைந்த ரமேஷ் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

    முடிவில் கலைச்செல்வன் நன்றி கூறினார்.
    வேதாரண்யம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் வேதாரண்யம் சரக போலீஸ் துணை கண்காணிப்பாளர் பாலு, சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நாகக்குடையான் பகுதியில் இருந்து மணல் ஏற்றிவந்த டிராக்டரை செம்போடை கடைவீதியில் போலீசார் மறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது உரிய ஆவணங்கள் இன்றி மணல் எடுத்துவரப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலிசார் வேதாரண்யம் தாசில்தார் இளங்கோ நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) ஜெயராஜிற்கு இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.

    காவிரி பிரச்சினை தொடர்பாக போராட்டம் நடைபெற்று வருவதால், நாகை மாவட்டத்திற்கு வரும் கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி நாகூர் மற்றும் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், வேதாரண்யம் ஆகிய இடங்களில் உள்ள மும்மத வழிபாட்டு ஸ்தலங்களுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிரச்சினை காரணமாக பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் நாகை மாவட்டம் சீர்காழியில் கர்நாடகா லாரியின் கண்ணாடியை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இதே போல் வைத்தீஸ்வரன் கோவிலில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஜீப் கண்ணாடியை சிலர் உடைத்துவிட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.

    இதை தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு வரும் கர்நாடகா வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். நேற்று நாகை வந்த கர்நாடகா வாகனங்களில் போலீசார் ஸ்டிக்கர் ஒட்டி கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனம் என்பதை மறைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கர்நாடக வாகனங்களில் வந்த சிலர் அதில் செல்ல அச்சம் அடைந்ததால் அவர்கள் வந்த வாகனங்கள் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில் வந்தவர்கள் பஸ் மற்றும் வாகனங்கள் மூலம் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு போய் உள்ளனர். அவர்கள் பதட்ட நிலை குறைந்ததும் தங்களது வாகனங்களை எடுத்துசெல்வதாக கூறி சென்றுள்ளனர்.

    கர்நாடகாவில் நேற்று நடந்த வன்முறையால் தமிழக லாரிகள் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதே போல் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வரும் கர்நாடகா வாகனங்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    கர்நாடக அரசை கண்டித்து நாளை மறுநாள் தமிழகத்தில் பந்த் நடத்த போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்து உள்ளது.
    நாகப்பட்டினம்:

    காவிரியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம நடைபெற்றது. இந்த நிலையில் 15 ஆயிரம் கன அடியை 12 ஆயிரம் கன அடியாக குறைத்து மேலும் 3 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று புதிய உத்தரவிட்டது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 40 பஸ்கள், 50 லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    தமிழர்களின் கடைகள், ஓட்டல்கள் சூறையாடப்பட்டது.

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் (15-ந் தேதி) தமிழகத்தில் பந்த் நடத்தப் போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர் தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு அங்கு வாழும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல், தமிழக லாரிகள் மற்றும் தனியார் பஸ்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களுக்கு துணை போகிறது.

    பெங்களூரில் பெயரளவிற்கு 144 தடை போட்டு விட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று தமிழகத்தை சேர்ந்த 100 லாரிகள், 50 தனியார் சொகுசு பஸ்களை தீ வைத்து கொளுத்தியும், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி மத்திய அரசை அச்சுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு கவனத்தை திசை திருப்பிட கன்னட அமைப்புகள் முயல்கின்றன.

    எனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வழங்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் செய்யும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் சொத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுநாள் (15-ந் தேதி) தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களில் இணைந்துள்ள 94 விவசாய சங்கங்களும் சாலை மறியல், ரெயில் மறியல், கடையடைப்பு உள்ளிட்ட முழு போராட்டத்தில் ஈடுபடுகிறது.

    இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், இதர சங்கங்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×