என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சிறைபிடிப்பு
சீர்காழி:
மயிலாடுதுறை- சீர்காழி- சிதம்பரம் மார்க்கத்தில் செல்லும் தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றிசெல்வதற்காக அரசுபஸ்கள் மற்றும் பிற பஸ்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்கின்றன. போக்குவரத்து விதி முறைகளை மீறி நகர் பகுதியிலும் அதிவேகமாக தனியார் பேருந்துகள் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.
பள்ளி நேரங்களிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளிலும் வேகத்தினை குறைக்காமல் ஏர் ஹாரனை பயன் படுத்தி செல்லும் தனியார் பஸ்களால் சாலைகளில் இருசக்கரவாகனங்கள் மற்றும் நடந்து செல்வோர் நிலைதடுமாறி விழுந்து அடிபடுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிவேகமாக சென்ற வள்ளிகந்தன் தனியார் பஸ்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் பலியாகினர்.
இதேபோல் நகரில் தனியார் பஸ்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவருவதால் பொதுமக்கள் தனியார் பேருந்துகள் மீது அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் சீர்காழியிலிருந்து சிதம்பரத்திற்கு அதிவேகமாக சென்ற டி.கே.எம் தனியார் பஸ்சை அரசூர் பகுதியில் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.பின்னர் ஓட்டுனரிடம் வேகமாக செல்லக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். அதனையும் மீறி இனி வேகமாக சென்றால் பஸ்சை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைப்போம் என்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






