என் மலர்
செய்திகள்

எந்திரம் மூலம் நடவு பணி: விவசாய தொழிலாளர்கள் 70 பேர் கைது
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மேமாத்தூர் பகுதியில் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு எந்திர நடவு மூலம் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு விவசாய தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். எந்திர நடவு முறைக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன் டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்கள் கடந்த வாரம் உண்ணாவிரதம் நடத்தினார்கள்.
இந்த நிலையில் மேமாத்தூர் பகுதியில் 75 சதவீத நிலங்கள் எந்திரம் மூலம் நடவு செய்யப்பட்டு விட்டது. மேமாத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் நடவு செய்யப்படாமல் இருந்தது.
அவர் எந்திரம் மூலம் நடவு செய்ய திட்டமிட்டு இருந்தார். இன்று காலை எந்திரம் மூலம் நடவு பணி தொடங்கியது. இதனை கேள்விப்பட்ட 40 பெண்கள், 30 ஆண்கள் என விவசாய தொழிலாளர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
இதனால் பதட்டம் நிலவியது. தரங்கம்பாடி தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம் ஆகியோர் அங்கு வந்தனர். நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் மயிலாடுதுறை டி.எஸ்.பி.காளி தீர்த்தம், சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
விவசாய தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆண்கள் மயிலாடுதுறையில் உள்ள திருமண மண்டபத்திற்கும் பெண்கள் செம்பனார் கோவிலில் உள்ள திருமண மண்டபத்திற்கும் கொண்டு செல்லப் பட்டனர்.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எந்திர நடவு பணி நடைபெற்றது.






