என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் 15-ந் தேதி பந்த்: விவசாய சங்க கூட்டியக்கம் அறிவிப்பு
    X

    கர்நாடகத்தை கண்டித்து தமிழகத்தில் 15-ந் தேதி பந்த்: விவசாய சங்க கூட்டியக்கம் அறிவிப்பு

    கர்நாடக அரசை கண்டித்து நாளை மறுநாள் தமிழகத்தில் பந்த் நடத்த போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்து உள்ளது.
    நாகப்பட்டினம்:

    காவிரியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனை கண்டித்து கர்நாடகாவில் போராட்டம நடைபெற்றது. இந்த நிலையில் 15 ஆயிரம் கன அடியை 12 ஆயிரம் கன அடியாக குறைத்து மேலும் 3 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று புதிய உத்தரவிட்டது.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 40 பஸ்கள், 50 லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    தமிழர்களின் கடைகள், ஓட்டல்கள் சூறையாடப்பட்டது.

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நாளை மறுநாள் (15-ந் தேதி) தமிழகத்தில் பந்த் நடத்தப் போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து அச்சங்கத்தின் துணைத் தலைவர் தனபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு அங்கு வாழும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல், சொத்துக்களை சேதப்படுத்துதல், தமிழக லாரிகள் மற்றும் தனியார் பஸ்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களுக்கு துணை போகிறது.

    பெங்களூரில் பெயரளவிற்கு 144 தடை போட்டு விட்டு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று தமிழகத்தை சேர்ந்த 100 லாரிகள், 50 தனியார் சொகுசு பஸ்களை தீ வைத்து கொளுத்தியும், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி மத்திய அரசை அச்சுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டு கவனத்தை திசை திருப்பிட கன்னட அமைப்புகள் முயல்கின்றன.

    எனவே காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வழங்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் செய்யும் கர்நாடக அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் சொத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுநாள் (15-ந் தேதி) தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களில் இணைந்துள்ள 94 விவசாய சங்கங்களும் சாலை மறியல், ரெயில் மறியல், கடையடைப்பு உள்ளிட்ட முழு போராட்டத்தில் ஈடுபடுகிறது.

    இதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், இதர சங்கங்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×