என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் ஒரு வழிப்பாதை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு கலெக்டர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி கோவிலில் தையல் நாயகி அம்மன், செல்வமுத்துக்குமரசுவாமி, அங்காரகன்(செவ்வாய்), தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சன்னதிகளோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமானோர் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.

    வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் சாலைகள் குறுகலாகவும், அதிக வளைவுகளை கொண்டிருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிரிழப்புகளும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஒருவழி பாதை அமைத்துத்தரவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாகைமாவட்ட கலெக்டர் பழனிச்சாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வைத்தீஸ்வரன்கோவில் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

    பின்னர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வைத்தீஸ்வரன்கோவில் கீழவீதி இரட்டைபிள்ளையார் கோவிலிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் பேருந்து நிலையம் வரை சுமார் 650 மீட்டர் நீளம் உள்ள ஒருவழிபாதை அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் ஒருவழிபாதை அமைக்கப்படுவதற்கான இடம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக இருப்பதால் அவரிடம் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மேற்கண்ட இடத்தில் ஒருவழிபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ஆய்வின்போது தாசில்தார் மலர்விழி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி செயல்அலுவலர் பாரதிதாசன், கிராம நிர்வாக அலுவலர் நவநீதன், பேரூராட்சி எழுத்தர் நடராஜன், பணியாளர் சுப்பிரமணியன், மற்றும் பலர் உடனிருந்தனர்.

    சீர்காழி அருகே பழமையான ஏரிகளான திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஏரிகளில் போர்வெல் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் பழனிசாமி கள ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே பழமையான ஏரிகளான திருவாலி மற்றும் பெருந்தோட்டம் ஏரிகளில் போர்வெல் அமைத்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்து கலெக்டர் பழனிசாமி கள ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி அருகே கடற்கரையோர கிராமங்களான பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், மார்த்தான்பட்டிணம், கீழமூவர்க்கரை, மேல மூவர்க்கரை,கோணயாம் பட்டினம், திருவாலி, திருநகரி,நெப்பத்தூர் போன்ற பல்வேறு கிராமங்களில் நிலத்தடிநீர் முற்றிலுமாக தரம் மாறி காவிநீராகவும்,உப்புநீராகவும் மாறிவிட்டது.

    இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கிராமமக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது.கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேற்கண்ட சில கிராமங்களில் ஆழ்குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டாலும் அது மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லையென கூறப்படுகிறது.

    நல்லதண்ணீர் கிடைக்க வழியின்றி பொதுமக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயரும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. மேற்கண்ட கடற்கரையோர கிராமங்களில் குடிநீர் பிரச்சனை வெகுவாக தலைதூக்க தொடங்கியது.இதனை சீர் செய்யக்கோரி மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி திருவாலி, பெருந்தோட்டம் ஏரிகளில் பார்வையிட்டு கள ஆய்வுசெய்தார். 115 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட பெருந் தோட்டம் ஏரியிலிருந்து அப்பகுதியை சுற்றியுள்ள குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களான கோணயாம்பட்டினம், மார்த்தான்பட்டினம், தென்னாம்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு மேற்படி பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்து கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்தும், அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார்.

    அதனைத்தொடர்ந்து 180 ஏக்கர் பரப்பளவுக்கொண்ட திருவாலி ஏரி அதனை சுற்றியுள்ள கிராமங்களான திருவாலி, நெப்பத்தூர், திருநகரி ஆகிய பகுதிகளுக்கு திருவாலி ஏரியிலேயே போர்வெல் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், சீர்காழி தாசில்தார் மலர்விழி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    சீர்காழி அருகே கார் மோதி பெண் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வருசைபத்து ஆமப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ். டீக்கடை தொழிலாளி.இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு ஜான்சிராணி என்ற 9 மாத பெண் குழந்தை இருந்தது. சார்லசின் தாய் அமுதா பேத்தியை தூக்கி வைத்து கொண்டு வீடு அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த காரின் பக்கவாட்டு கண்ணாடி குழந்தை ஜான்சிராணி மீது மோதியது. இதில் கீழே விழுந்த குழந்தை பலத்த காயம் அடைந்தது.

    உடனே சார்லஸ் மற்றும் குடும்பத்தினர் குழந்தையை சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் குழந்தையின் பாட்டி அமுதா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

    விபத்து குறித்து சீர்காழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் வேட்டங்குடி ஒத்தவெளி தெருவை சேர்ந்த சத்திய மூர்த்தியை கைது செய்தனர்.

    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த தம்பதியின் 9 மாத குழந்தை மர்ம கும்பலால் கடத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தூத்துக்குடி லயன்ஸ் டவுன் மினிசகாயப் புரத்தை சேர்ந்தவர்கள் ஜெரோம், சுகன்யா. இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது.

    இவர்கள் வேளாங்கண்ணிக்கு குழந்தையுடன் தரிசனத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேளாங்கண்ணி பேராலயம் மாதாக்குளம் அருகில் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் நாகை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை குறித்து தகவல் தெரிந்தால் உடன் தெரிவிக்குமாறு வேளாங்கண்ணி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மயிலாடுதுறையில் அரசு டவுன் பஸ் மரத்தில் மோதியதில் 26 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள செங்கோடியில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று காலை 9 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு வந்தது. இதனை டிரைவர் பாலகிருஷ்ணன் ஓட்டி வந்தார்.

    இந்த பஸ் மயிலாடுதுறை சீனிவாசபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி வந்தது. அதற்கு வழி விட டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ரோடு ஓரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் பஸ் டிரைவர் பாலகிருஷ்ணன், கல்லூரி, பள்ளி மாணவி ரமா, துர்கா தேவி, பிரியங்கா, ஆர்த்தி மற்றும் சதிஷ், விஜய், சின்னபாப்பா (70), மீனாட்சி உள்பட 26 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், தாசில்தார் காந்திமதி, அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் நாதன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

    விபத்து குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம் அருகே ஆஸ்பத்திரிக்கு செல்ல மனைவியிடம் பணம் கேட்டு கொடுக்காததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (40). விவசாயி. இவருக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி ஜெயசுதா(35). அருகில் உள்ள பெண்கள் விடுதியில் சமையலராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி முத்துசாமி மனைவி ஜெயசுதாவிடம் ஆஸ்பத்திரிக்கு செல்ல பணம் கேட்டுள்ளார். அதற்கு ஜெயசுதா உங்களிடம் கொடுத்தால் செலவு செய்து விடுவீர்கள். நான் வேலைக்கு சென்று திரும்பி வந்து அழைத்து செல்கிறேன் என கூறி வேலைக்கு சென்று விட்டார். முத்துசாமி யாரிடமோ கடன் வாங்கி கொண்டு வேதாரண்யம் அடுத்த முதலியார்தோப்பு- திருத்துறைப்பூண்டி மெயின்ரோடு, செக்போஸ்ட் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தாராம்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி கடந்த 17-ந்தேதி இறந்தார்.

    ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அருணாசலம், சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முத்துசாமிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் பனை மரத்தில் மோதி 2 பேர் பலியானார்கள்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (28), ராஜகுரு (24).

    இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நாகப்பட்டினம் சென்றனர். பின்னர் வீடு திரும்பினார்கள். நாகை அருகே உள்ள பிரதானராமபுரம் பூவத்தடி என்ற பகுதியில் இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலே பலியானார்கள்.

    இது குறித்து கீழையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான முருகானந்தத்திற்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. மலேசியாவில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்து இருந்தார்.

    ராஜகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்தவர் ஆவார். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் நாலுவேதபதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை வெட்டி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த வடக்கு பொய்கை நல்லூர் சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது38). இவரது தம்பி ராஜேந்திரன் (33). தொழிலாளி. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    ராஜேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல நேற்று இரவும் ராஜேந்திரன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது தாய் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்தார். இதை பாலமுருகன் தட்டிக்கேட்டார். இதனால் அண்ணன்- தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், அரிவாளால் ராஜேந்திரனை வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராசேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யத்தில் லாரி டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியிலிருந்து லாரி ஓட்டி வந்த மகாமணி (42) என்பவர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு அதில் அமர்ந்திருந்தாராம்.

    அப்போது அங்கு வந்த கீழஆறுமுகக்கட்டளை பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் குணசேகரன், நாகத்தோப்பு சேகர் மகன் அருண்பாண்டியன் (22) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என மூவரும் சேர்ந்து மகாமணியை தரக்குறைவாக பேசி பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மகாமணி வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மற்ற இருவரையும் தேடி வருகிறார்.

    மயிலாடுதுறையில் வாகன சோதனையில் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இன்ஸ்பெக்டர் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த டிரைவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தரங்கம்பாடி:

    கரூர் பகுதியை சேர்ந்த ரெத்தினம் மகன் சக்திவேல் (வயது 41) லாரி டிரைவர். இவரும் அதேபகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 39) என்பவரும் கல் லோடு ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை வந்தனர்.

    அப்போது மயிலாடுதுறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஜெயபால் லாரியை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபால், சக்திவேல், சுந்தர்ராஜ் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கொசுவர்த்தி சுருளால் ஆடையில் தீப்பற்றி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்தானம், இவரது மனைவி ராஜவள்ளி (வயது 45), சம்பவத்தன்று இரவு கொசுத்தொல்லையால் கொசுவத்தி சுருளை பற்றவைத்துவிட்டு கணவன் மனைவி இருவரும் தூங்க சென்றனர். அப்போது நள்ளிரவு கொசுவத்தி சுருள் நெருப்பு ராஜவள்ளியின் புடவை மீது பட்டு தீ பிடித்தது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் தூங்கி கொண்டிருந்த கணவர் எழுந்து ராஜவள்ளியின் புடவையில் பற்றிய தீயை அணைத்தார். இதில் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகப்பட்டினம் போலீசில் அவரது மகள் பாக்கியமேரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே ரவுடியை கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அருகே ஆத்தூர் நடுத்தெருவை சேர்ந்த மணி மகன் சின்னப்பா (வயது 28). அதே பகுதியை சேர்ந்த கோவிந்த சாமி மகன் மாணிக்கம் (36). மயிலாடுதுறை திருமஞ்சன வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கில்லி பிரகாஷ் என்கிற பிரகாஷ் (31).

    இவர்கள் 3 பேரும், கடந்த மாதம் (நவம்பர்) மணல்மேடு அருகே ஆத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி மனோகரன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை பரிந்துரையின் பேரில் சின்னப்பா, மாணிக்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய சின்னப்பா, மாணிக்கம், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    ×