என் மலர்
செய்திகள்

நாகை அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி 2 பேர் பலி
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகானந்தம் (28), ராஜகுரு (24).
இவர்கள் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் நாகப்பட்டினம் சென்றனர். பின்னர் வீடு திரும்பினார்கள். நாகை அருகே உள்ள பிரதானராமபுரம் பூவத்தடி என்ற பகுதியில் இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோடு ஓரம் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
இது குறித்து கீழையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான முருகானந்தத்திற்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. மலேசியாவில் வேலை பார்த்து விட்டு ஊருக்கு வந்து இருந்தார்.
ராஜகுரு சிங்கப்பூரில் வேலை பார்த்தவர் ஆவார். விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் நாலுவேதபதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






