என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    சீர்காழி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் லேப்-டாப் திருடிய சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த கொண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வந்த இலவச லேப்டாப்களை பள்ளியில் உள்ள ஒரு அறையில் பூட்டி சீல் வைத்திருந்தினர். அதனை மர்ம நபர்கள் உடைத்து 48 லேப்டாப்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இதுகுறித்து சீர்காழி டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு போலீசார் நாகராஜ், சுதாகர், வில்சன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றில் சில அரசு லேப்டாப்கள் கிடந்தது. அவை கொண்டல் அரசு பள்ளியில் கொள்ளையடிக்கப்பட்ட லேப்டாப்கள் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்த சீர்காழி திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில் அவரும் அவரது நண்பர்களும் திட்டமிட்டு லேப்டாப்களை கொள்ளையடித்திருப்பதும், அதனை விற்க முடியாமல் பாதி லேப்டாப்களை ஆற்றில் வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ணன், அவரது நண்பர்கள் கும்பகோணம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த செந்தில்(வயது 38), லைன்கரை தெருவை சேர்ந்த சரவணன் (28), திருவிடைமருதூரை சேர்ந்த நாகராஜ் (39) ஆகியேரை கைது செய்தனர்.

    மேலும் கொள்ளையடித்த லேப்டாப்களை விற்ற நபர்களிடம் அவர்களை நேரில் அழைத்து சென்று போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 25 லேப்டாப்கள் மீட்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சீர்காழி கோர்ட்டில் ஜெயிலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கீழ்வேளூர் அருகே போதை பொருள் வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனி பகுதியில் கீழ்வேளூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற் கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பெண் காக்கழனி தோப்பு தெருவை சேர்ந்த துரைசாமி மனைவி சாவித்திரி (வயது50) என்பதும், இவர் 550 கிராம் டயோசிபார்ம் என்ற போதை பொருள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி மற்றும் போலீசார் சாவித்திரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலியானார். இச்சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள பொரும்பூர் கீழ தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவராம் (54) இவர் கருவடி வாய்க்கால் பகுதியில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏறினார்.

    அப்போது அங்கிருந்த மின் கம்பியை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது.

    இது குறித்து ஜெகஜீவராம் மகன் ஜெகன்ராஜ் பெரம்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பணம் இல்லாததால் அங்கு இருந்த பொதுமக்கள் ஏ.டி.எம் மையத்தை முற்றுகையிட்டு உடனடியாக பணம் நிரப்ப வேண்டுமென கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அனைத்து பொதுமக்களும் தினந்தோறும் ஏ.டி.எம்.மிற்கு சென்று பணம் எடுக்க முடியாமல் திரும்பி ஏமாற்றத்துடன் வருகின்றனர். ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் குறைவான அளவு பணம் வைக்கப்படுவதால் சிறிது நேரத்தில் பணம் தீர்ந்து விடுகிறது. இதனால் அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப பணம் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.

    நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஏ.டி.எம் மையங்களில் வரிசையாக பணம் எடுக்க காத்திருந்தினர். ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் போதிய அளவு பணம் இல்லாததால் வரிசையில் நின்றவர்கள் பணம் எடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

    பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பல நாட்களாக பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று பழைய பேருந்துநிலையம் எதிரே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் இல்லாததால் அங்கு இருந்த பொதுமக்கள் ஏ.டி.எம் மையத்தை முற்றுகையிட்டு உடனடியாக பணம் நிரப்ப வேண்டுமென கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பூம்புகார் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள மேலையூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் பெருந்தோட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுருதி (வயது 15).

    இவர் தரங்கம்பாடி அருகே உள்ள ஆணைக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை ரவிக்குமாரும், சுருதியும் மோட்டார் சைக்கிளில் விநாயகர் கோவிலுக்கு சென்றனர். அப்போது வெட்டப்பள்ளம் நாடார் தெருவைச்சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் சுருதி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு மயிலாடுதுறை உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பூம்புகார் போலீசார் பலியான சுருதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பூம்புகார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் பொறையாறில் கல்லூரி ஊழியர்களை தாக்கியதாக வக்கீல் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறில் சி.பி.எம்.எல். கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வரலாற்றுத்துறை பொறுப்பு பேராசிரியையாக மல்லிகா புண்ணியவதி என்பவர் பணியாற்றி வருகிறார்.

    நேற்று முன்தினம் வரலாற்றுதுறை தலைவர் விடுமுறை எடுத்ததால் துறை தலைவர் பொறுப்பில் மல்லிகா புண்ணியவதி பணியாற்றினார். அன்று வரலாற்றுதுறை பேராசிரியராக பணியாற்றும் அமிர்தநாதன் தாமதமாக வந்துள்ளார். இதுதொடர்பாக மல்லிகா புண்ணியவதி கேட்டதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி கல்லூரி முதல்வர் ஜோனஸ் குணசேகரிடம் மல்லிகா புண்ணியவதி புகார் செய்தார். இதுதொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் கேண்டீனில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மல்லிகா புண்ணியவதியின் கணவரும் வக்கீலுமான பிரபாகர் என்பவர் தனது நண்பர் மோகன் என்பவருடன் அங்கு வந்தார். அவர் அமிர்தநாதனுடன் தகராறு செய்து சேரை தூக்கி வீசியுள்ளார். அமிர்தநாதன் தள்ளிச்சென்றதால் அந்த சேர் கல்லூரி ஊழியர்கள் சார்லஸ், செல்வகுமார் ஆகியோர் மீது விழுந்தது. இதில் அவர்களும் சில கல்லூரி மாணவர்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வர் பொறையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து பிரபாகர், மோகன் ஆகிய 2 பேரை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் நிதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்.  இந்த சம்பவம் பொறையாறு பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    டெல்டா மாவட்டங்களில் மேலும் 2 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த ஆந்தக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது68). விவசாயி. இவருடைய மனைவி காந்திமதி. இவர்களுக்கு இளங்கோவன் என்ற மகன் உள்ளார்.

    தியாகராஜன் ஆந்தக்குடி பகுதியில் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்தநிலையில் தற்போது மழை பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வராததாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகின. இதனால் மன வேதனையில் இருந்த தியாகராஜன் நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார்.சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் மந்தை வெளி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது70). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். உக்கடை கிராமத்தில் 2 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தார்.

    இந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருக தொடங்கின. இந்த நிலையில் அழகர்சாமி நேற்று வயலுக்கு சென்றுள்ளார். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் கருகியதை கண்டு மனம் உடைந்த நிலையில் வீட்டிற்கு வந்தவர் திடீர் என மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    டெல்டா மாவட்டங்களில் பயிர்கருகியதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 36 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    குத்தாலம் அருகே காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர். போராட்டத்தால் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குத்தாலம்:

    குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சிக்கு உட்பட்ட எலந்தங்குடி, மாதா கோவில் தெரு, அண்ணா நகர், மாரியம்மன் கோவில் தெரு, தோப்பு தெரு ஆகிய பகுதிகளில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறது. இங்கு கடந்த 1 வருடமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    இதில் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மயிலாடுதுறை- திருவாரூர் மெயின் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் இப்பகுதியில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் சாலை அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் எலந்தங்குடி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மத்திய அரசு கொண்டு வந்த செல்லாத நோட்டு பிரச்சினையை சரி செய்யக் கோரி பி.எஸ்.என். எல் . ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாரண்யம் தொலைதொடர்பு அலுவலக வாயிலில் பி.எஸ்.என்.எல் தொழிற்சங்க இளநிலைப் பொறியாளர் நாகரெத்தினம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நே‌ஷனல் பெடரேசன் ஆப் டெலிகாம் கம்யூனிகேசன் மற்றும் பி.எஸ்.என்.எல் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் நாகராஜன், ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசு கொண்டு வந்த செல்லாத நோட்டு பிரச்சினையை சரி செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை அருகே வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை கூறைநாடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 26). இவர் இரவு 11 மணியளவில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பிராந்தி பாட்டிலை திறந்து பார்த்துள்ளார். அதனை திறக்க முடியாததை கண்ட லெட்சுமணன் மகன் சிங்காரவேல் (32), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த குஞ்சான் மகன் ஆறுமுகம் (32) ஆகிய இருவரும் கிண்டல் செய்துள்ளனர்.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிங்காரவேலும், ஆறுமுகமும் சாகுல்ஹ மீது வயிற்றில் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மேல் சிகிச்சைகாக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிங்காரவேல், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.

    கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் விரட்டி அடித்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் வேளாங்கண்ணி, செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 9 பேர் வைத்திருந்த மீன்களை பறித்துவிட்டு அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி விரட்டி அடித்தனர்.

    இதனால் மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

    வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மேலும் 2 விவசாயிகள் மயங்கி விழுந்து இறந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலத்தை சேர்ந்தவர் நடராஜன் (60). இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்திலும் பன்னாள் பகுதியை சேர்ந்த அறிவழகன் என்பவரது ஒரு ஏக்கர் குத்தகை நிலத்திலும் சம்பா சாகுபடி செய்து இருந்தார்.

    போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. பயிர்கள் கருகியதை பார்த்து வேதனையடைந்த நடராஜன் வயலில் மயங்கி விழுந்தார்.

    அவரை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    திருவாரூர் மாவட்ட கொரடாச்சேரி அருகே உள்ள கீர கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (65). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். வயலில் கருகிய பயிர்களை பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

    டெல்டா மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவம் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    ×