என் மலர்
செய்திகள்

சீர்காழி அருகே லேப்-டாப் திருடிய சத்துணவு அமைப்பாளர் உள்பட 4 பேர் கைது
சீர்காழி:
சீர்காழியை அடுத்த கொண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக வந்த இலவச லேப்டாப்களை பள்ளியில் உள்ள ஒரு அறையில் பூட்டி சீல் வைத்திருந்தினர். அதனை மர்ம நபர்கள் உடைத்து 48 லேப்டாப்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து சீர்காழி டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் அழகுதுரை, குற்றப்பிரிவு போலீசார் நாகராஜ், சுதாகர், வில்சன் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் அருகே நத்தம் கிராமத்தில் உள்ள ஆற்றில் சில அரசு லேப்டாப்கள் கிடந்தது. அவை கொண்டல் அரசு பள்ளியில் கொள்ளையடிக்கப்பட்ட லேப்டாப்கள் என தெரியவந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்த சீர்காழி திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அதில் அவரும் அவரது நண்பர்களும் திட்டமிட்டு லேப்டாப்களை கொள்ளையடித்திருப்பதும், அதனை விற்க முடியாமல் பாதி லேப்டாப்களை ஆற்றில் வீசி சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கிருஷ்ணன், அவரது நண்பர்கள் கும்பகோணம் மாரியம்மன் கோவிலை சேர்ந்த செந்தில்(வயது 38), லைன்கரை தெருவை சேர்ந்த சரவணன் (28), திருவிடைமருதூரை சேர்ந்த நாகராஜ் (39) ஆகியேரை கைது செய்தனர்.
மேலும் கொள்ளையடித்த லேப்டாப்களை விற்ற நபர்களிடம் அவர்களை நேரில் அழைத்து சென்று போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 25 லேப்டாப்கள் மீட்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் சீர்காழி கோர்ட்டில் ஜெயிலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.