என் மலர்
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆதனூர் ஊராட்சி கோவில் தாழ்வை சேர்ந்தவர் சிவானந்தம் (55) விவசாயி.
இவர் 2 ஏக்கர் நிலத்தில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியது.
இதனால் சிவானந்தம் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
இன்று காலை வயலுக் கு சென்ற அவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து சென்று சிவானந்தம் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.
பயிர் கருகிய கவலையில் உயிரிழந்த விவசாயி சிவானந்தத்துக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும் அன்பரசன் என்ற மகனும் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர் இழந்து உள்ளனர். தற்போது மேலும் ஒரு விவசாயி உயரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு வாட்டாக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சேது (73). இவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சம்பா சாகுபடி செய்து இருந்தார். ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது.
இன்று காலை சேது தனது வயலுக்கு சென்றார் பயிர்கள் கருகி இருப்பதை பார்த்து வேதனை அடைந்தார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஆலங்குடி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (46). விவசாயி. இவர் அப்பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வந்தார். தண்ணீரின்றி பயிர்கள் வாடுவதை கண்ட அவர் மாரடைப்பால் இறந்தார்.
மதுக்கூர் அருகே உள்ள அத்து வெட்டி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி (65). இவர் அப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்திருந்தார். தண்ணீரின்றி பயிர்கள் கருகியதை பார்த்த அவர் மாரடைப்பால் இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருக்கு முருகையன் என்பவருக்கு தனது நிலத்தை விற்றுள்ளார். இதில் தனித்தனியே கிரயம் செய்து கொடுக்க செலவு அதிகம் ஆகும் என்பதால் சுந்தரேசன் தன் பெயருக்கே எழுதி வாங்கிக்கொண்டாராம். நிலத்திற்கு பணம் கொடுத்த முருகையன் எனக்கு நிலத்தை பிரித்து கொடுக்கவில்லையே, பணத்தை வாங்கிக் கொண்டாயே என கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஆறுமுகம் சுந்தரேசனிடம் கேட்டபோது அவர் பிரித்து கொடுத்துவிடுவதாக கூறியுள்ளார். இதில் மனம் உடைந்த ஆறுமுகம் விஷத்தை குடித்து வீட்டு வாசலில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.
இது குறித்து ஆறுமுகத்தின் மனைவி பொற்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கீழ்வேளூர்:
பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:-
தமிழகத்தில் இதுவரை பயிர்கள் கருகியதால் மன முடைந்து தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் 67 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இது எனக்கு மிகவும் வேதனை தருகிறது. மனித உயிர்களை பற்றி மட்டுமே எனக்கு தெரியும். பயிர்களை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இந்த ஆய்வின்போதுதான், விவசாயிகள் எவ்வித துன்பங்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர் என்பது தெரிய வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு முறையாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசிடம் இருந்து மாநில பேரிடர் நிவாரண நிதி பெற வேண்டும். மத்திய அரசுக்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண நிதி வழங்கக்கூடாது என்று எந்தவித உள்நோக்கமும் கிடையாது. ஆனால் தமிழக அரசிடம் இருந்து உரிய முறையில் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
தமிழக அரசு விவசாயிகளின் பிரச்சினையில் மிகவும் மெத்தனமாக உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பா.ஜ.க.விற்கு எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மேலும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நிதி செலுத்தவும், அந்தந்த குடும்பங்களின் தொழில் தெரிந்தவர்களுக்கு முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் கடன் பெற்று தரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் நடைபெறும் போராட்டங்களால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. டெல்டா மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இரண்டொரு நாட்களில் தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்திக்க தேதி கேட்டுள்ளேன். அப்போது இது குறித்து வலியுறுத்துவேன். மேலும், டெல்லியில் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் வேதரத்தினம், கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் உள்பட பலர் உடனிருந்தனர்.
சீர்காழி தாடாளன் கோவில் காமராஜபுரத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (வயது 38), ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் பவிதா (17). இவர், சீர்காழியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை பள்ளிக்கு செல்ல பவிதா, தனது பள்ளி சீருடையை இஸ்திரி பெட்டி மூலம் தேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இஸ்திரி பெட்டியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியது. இந்த தீ அருகில் இருந்த பவிதாவின் ஆடையில் பற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பவிதாவின் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
மேலும் பவிதாவை சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் பவிதாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது, அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அரசாளமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55) விவசாயி. இவர் சம்பா சாகுபடி செய்திருந்தார். கடைமடை பகுதி என்பதால் பம்பு செட் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
ஆனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கிணற்றில் தண்ணீர் சரிவர வரவில்லை. இதனால் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று வயலுக்கு சென்ற முருகேசன் பயிர்கள் கருகியதை பார்த்து வேதனை அடைந்தார். வீட்டிற்கு வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். செம்மங்குடி என்ற இடத்தில் சென்ற போது அவரது நிலைமை கவலைக்கிடமானது உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
முருகேசனுக்கு ராஜி என்ற மனைவியும், 3 மகன், 3 மகள்கள் உள்ளனர்.
கீழ்வேளூர் அருகே உள்ள கிள்ளுக்குடி ஊராட்சி அய்யடி மங்கலம் காலனி தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (55). விவசாயி. இவர் 3 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. நேற்று இரவு வயலுக்கு சென்ற அவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரை சேர்ந்தவர் முருகையன் (70). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் முருகையன் மன வேதனையில் இருந்தார். இன்று காலை அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவருக்கு குஞ்சம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நாகை மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2016-17) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும், தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை) அளிக்கவேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்
விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு 31.01.2017க்குள் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மனுவாக தெரிவித்தனர். பின்னர் 7 பயனாளிகளுக்கு கல்வி நிதியுதவி மற்றும் கண் கண்ணாடி நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.
கூட்டத்தில் உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) வேலு, மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயமீனா, அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரரர்கள் கலந்து கொண்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம், சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தை சேர்ந்த ராமையன் மகள் மஞ்சுளா (வயது 26). இவருக்கும், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைகுடி கிராமம் ராமன் கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் லோகநாதன் (27) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மஞ்சுளா, தனது கணவர் லோகநாதனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவர் லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள், வீடு கட்ட பெற்றோரிடம் பணம் வாங்கி வர சொல்லி மஞ்சுளாவை அடிக்கடி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்த மஞ்சுளாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மஞ்சுளா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மஞ்சுளாவின் தந்தை ராமையன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் மஞ்சுளாவுக்கு 10 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் உள்பட சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து கொடுத்ததாகவும், கணவர் லோகநாதன் புதிதாக வீடு கட்ட பணம் வாங்கிவா என மஞ்சுளாவை சித்ரவதை செய்ததால் தனது மகள் விஷம் குடித்து இறந்ததாகவும், மஞ்சுளா சாவுக்கு காரணமான கணவர் லோகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், நரசிம்மன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். மஞ்சுளாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சுபாநந்தினி தனி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரியாபட்டினம், தென்னம்புலம் கலை நகரை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சுகன்யா (வயது 20). இவர் பிளஸ்-1 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சுகன்யா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னதுரை தனது மகள் மாயமானது பற்றி கரியாபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகன்யாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சுகன்யா இன்று காலை கரியாபட்டினம் போலீசில் காதலனுடன் வந்து தஞ்சம் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கத்திரிபுலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (23) என்பவரை காதலித்து வந்ததும், சம்பவத்தன்று காதலனுடன் சென்னை சென்று வடபழனியில் பதிவு திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. தமிழ்செல்வன் சென்னையில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
தஞ்சம் அடைந்த காதல்ஜோடி வேதாரண்யம் கோர்ட்டில் இன்று ஆஜர் படுத்தப்படுகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். காதல் ஜோடியிடம் இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர விசாரணை நடத்தினர்.
காதல்ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் கரியாபட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் ஆரியநாட்டுத்தெருவில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தெற்கே ஐந்து கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் ஆரியநாட்டுத்தெருவைச் சேர்ந்த ரவி (வயது 50) என்பவர் இரு படகுகளுக்கு இடையே சிக்கி வலதுகால் முறிந்து படுகாயமடைந்தார்.
அவரை சக மீனவர்கள் மீட்டு கோடியக்கரை கடற்கரைக்கு கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
படுகாயமடைந்த மீனவர் ரவிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்காவில் தலைஞாயிறு, கரியாப்பட்டினம், வாய்மேடு, மருதூர், ஆயக்காரன்புலம், கத்தரிப்புலம், செம்போடை, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட ஆற்றுப்பாசன மற்றும் மானாவாரி பகுதியில் 24 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி நேரடி நெல்விதைப்பாக செய்தனர்.
ஆற்றுப்பாசன பகுதிகளில் காவேரி நீர் வராததாலும் மானாவாரி பகுதிகளில் போதிய பருவ மழை பெய்யாததாலும் சம்பா சாகுபடிகள் கருகத் தொடங்கின. பல இடங்களில் பயிர் போதுமான வளர்ச்சி இல்லாததால் இனி சம்பா பயிரை காப்பாற்ற முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்து 7 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பல இடங்களில் தங்கள் சாகுபடி செய்த வயல்களில் ஆடு, மாடுகளை கட்டி மேய்க்கத் துவங்கி உள்ளனர். இந்நிலையில் ஒருசில இடங்களில் ஓரளவு வளர்ந்துள்ள பயிர்களில் அதிகப்படியான களைகள் மண்டிக் கிடக்கின்றன. வரிகீரை, வரகுபுல், அமளை கோரை போன்ற களைகள் பயிரை விட அதிகமாக மண்டிக் கிடக்கின்றன.
வழக்கமாக மழை பெய்து சாகுபடி நன்றாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு களை எடுப்பதற்கு 15 முதல் 18 ஆட்கள் ஆகும். ஆனால் தற்போது மண்டிக்கிடக்கும் களையை எடுப்பதற்கு ஏக்கருக்கு 60 முதல் 75 ஆட்கள் ஆகிறது. இதனால் ஒருசில இடங்களில் சிறிது களையை எடுத்துவிட்டு மேலும் களை எடுக்க பணம் இல்லாமல் வயலை அப்படியே விட்டுவிட்டனர்.
ஓரளவு வளர்ந்த பயிரை காப்பாற்றுவதற்கு போராடும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் தகுந்த ஆலோசனை கூறி களைகளை கட்டுப்படுத்தும் முறையினையும் இருக்கும் பயிரை காப்பாற்றுவதற்கும் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.






