என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மோட்டார் சைக்கிள் மோதி மெக்கானிக் படுகாயமடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தைச் சேர்ந்த மேலஆறுமுகக் கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் வேதலிங்கம் (52). இவர் தோப்புத்துறையில் வெல்டிங் கம்பெனியில் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த போது நாகை சாலை தியேட்டர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்புராஜன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    நாகை அருகே பஸ் மோதி தொண்டு நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கேரளாவை சேர்ந்தவர் பாபு (45). இவர் நாகை மாவட்டம் கீழையூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து கீழையூர் வந்து கொண்டிருந்தார். கீழையூர் அருகே உள்ள காரை நகர் பகுதியில் சென்று போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த பாபு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பயிர்கள் கருகியதால் மனவேதனையுடன் இருந்த விவசாயிகள் 3 பேர் உயிர் இழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டி அருகே காரைநகர் பகுதியை சேர்ந்தவர் வைரப்பன் (வயது58). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்திருந்தார். சாகுபடி செய்திருந்த பயிர்கள் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கருகின. இந்த நிலையில் தினம் வைரப்பன் தனது வயலுக்கு சென்றார். பின்னர் கருகி இருந்த பயிர்களை பார்த்து மனவேதனையுடன், சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் வடவேற்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (80). விவசாயி. இவருக்கு வடவேற்குடி பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்து இருந்தார். இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியதால் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் வயலுக்கு சென்ற வடிவேல் திடீரென வயலிலேயே மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் வடிவேல் மாரடைப்பால் இறந்தார். இறந்துபோன வடிவேலுக்கு லதா என்ற மகளும், சிவக்குமார், இளையராஜா, சதீஷ்குமார் என்ற 3 மகன்களும் உள்ளனர்.

    நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு கடற்கரை சாலை நாடார் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் (47). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் முற்றிலும் கருகி போனது. இதனால் தனது நிலத்தில் மாட்டை மேய விட்டார். விளை நிலத்தில் மாடுகளை மேயவிடும் நிலை ஏற்பட்டுள்ளதை நினைத்து அவர் மனவேதனையுடன் காணப்பட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கீழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த வெங்கடாசலத்திற்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் பயிர் கருகியதால் பெண் விவசாயி உள்பட 2 பேர் மாரடைப்பால் இறந்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி பொட்டு அம்மாள் (62).இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார்.

    போதிய மழை இல்லாததால் இவர் சாகுபடி செய்திருந்த பயிர்கள் கருக தொடங்கியது. இதனால் மனவேதனையில் இருந்தார். இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.

    இதேபோல், வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன் புலம் 3-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 1½ ஏக்கர் நிலத்தில் நேரடி சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் கருகிய வேதனையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

    இவருக்கு சசிகலா என்ற மனைவியும் செந்தில், கண்ணன் என்ற மகளும் பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    வேதாரண்யம் பகுதியில் பயிர் கருகியதால் விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
    நாகூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விலங்கியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதைதொடர்ந்து அந்த அமைப்பினர் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதைதொடர்ந்து கடந்த 2007-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இது தமிழர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    ஆண்டுதோறும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும், சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து வருகின்றது. இந்தநிலையில் நாகூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் இந்திய தேசியலீக் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், நடராஜன் உள்பட போலீசார் நாகூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்தநிலையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் திட்டமிட்டப்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக நாகை மாவட்டம் போலகம், கூத்தாடி தோப்பு பகுதியிலிருந்து காளை மாட்டை ஒரு மினி வேனில் ஏற்றி கொண்டு வந்தனர். நாகூர் பெட்ரோல் நிலையம் அருகே வந்தபோது அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த மினிவேனை மறித்து காளையை சிறைபிடித்தனர்.

    அப்போது அங்கு வந்த இந்திய தேசிய லீக் கட்சியினர் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ. நிஜாமுதீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் அத்தாவுல்லா உள்பட 23 பேரை கைது செய்தனர்.
    கோடியக்கரையில் மீன்பிடித்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி மீன்களை பறித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பல ஊர்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தரங்கம்பாடி பகுதி பெருமாள் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் கிருஷ்ணகுமார், லோகநாதன், பிரவீன், பிரசாந்த் ஆகிய 4 பேரும் கடந்த 7-ந்தேதி மாலை மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். நேற்று இரவு அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை சுற்றிவளைத்தனர்.

    பின்னர் மீனவர்கள் 4 பேரையும் கடுமையாக தாக்கி அவர்களிடமிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டனர். மேலும் அவர்களை உடன் அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர்.

    இதையடுத்து இன்று காலை கரைக்கு திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து தமிழக கடலோர காவல்படையினர் மற்றும் மீன்துறை அலுவலர்களிடம் சம்பவம் குறித்து புகார் தெரிவித்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் நடைபெற்று வருவதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    வேதாரண்யம் அருகே வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கிய பெண்ணிடம் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்று விட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி. இவரது மனைவி சிந்தாமணி (வயது 81). இவர் சம்பவத்தன்று தன் வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த தோடு, செயின் உள்பட 6½ பவுன் நகைககளை காணவில்லை. அதனை மர்ம நபர் பறித்து சென்று விட்டான்.

    இதுகுறித்து சிந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்கள் மற்றும் ஜி.பி.எஸ்.கருவி பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் கோடிக்கரையில் தற்போது மீன்பிடி சீசன் ஆகும். அங்கு மாவட்டத்தின் பலபகுதிகளை சேர்ந்த மீனவர்களும் முகாமிட்டு மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தரங்கம்பாடி அருகே உள்ள பெருமாள் பேட்டையை சேர்ந்த மீனவர்கள் அன்புராஜ் (வயது 27), கண்ணதாசன் (23), ரவிச்சந்திரன் (30), ஜெகன் (20), ஏலமமுத்து (40), ஆகியோர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதேபோல் புதுப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் காசிபிள்ளை (50), செல்லையா (39), மகேந்திரன் (33), காளிதாஸ் (40), குமார் (38) ஆகியோர் இன்னொரு படகிலும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


    அவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே இரவு 8 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் 2 படகுகள் மீதும் மோதியதுடன், மீனவர்களை தாக்கினர். பின்னர் மீனவர்களிடம் இருந்த ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறித்துக்கொண்டு 1 மணியளவில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இதன் பின்னர் கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து தமிழக கடலோர காவல் படையினரிடம் புகார் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகை மாவட்டம் கீவளூர் அருகே வேலைக்கு போகாமல் இருந்த மகனை தந்தை திட்டியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீவளூர் அருகே உள்ள புதுச்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ராஜதுரை (22). இவர் கடந்த 2 வருடமாக திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    பின்னர் சொந்த ஊர் வந்தவர் மீண்டும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ராஜதுரை உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் உடல் கருகிய அவர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கீவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அமுதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.

    நாகையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது. ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை தாமரைக்குளம் மேற்கு தெருவில் வீரம்மாள், செல்வி, ஜோதி, குப்பம்மாள், முருகேஸ்வரி, போதுமணி ஆகியோர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த ராசாயி ஓட்டு வீட்டுக்கும் பரவியது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    இது குறித்து நாகை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 7 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.

    சேத மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    தீ விபத்தின் போது வீட்டில் கட்டப்பட்டு இருந்த ஒரு ஆடு கருகி பலியானது. தென்னை மரமும் எரிந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது52). இவர் அந்த பகுதியில் ரேடியோ பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி கடைக்கு தேவையான பொருட்களை வாங்க வேதாரண்யம் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் இரவு வீடு திரும்பினார்.

    அவர் வேதாரண்யம்-திருத்துறைப் பூண்டி மெயின் ரோட்டில் ஆதனூர் பாலம் அருகே திரும்பும்போது பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த சோழன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ராஜேந்திரன், சோழன் படுகாயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    மயிலாடுதுறை அருகே தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் செட்டி தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி (62). இவர் மயிலாடுதுறையில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடை நடத்தி வந்தார்.

    இவரது மகன் தமிழ்வாணன். இவருக்கு திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. எனவே தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் படி தமிழ்வாணன் தனது தந்தையிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது.

    இன்று காலையும் தமிழ்வாணன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். இதில் தந்தை -மகனுக்கிடையே தகராறு உருவானது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்வாணன் அங்கு கிடந்த கட்டையால் தந்தையில் தலையில் ஓங்கி அடித்தார். மேலும் கத்தியாலும் குத்தினார். இதில் பார்த்தசாரதி சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    அதன் பின்னர் தமிழ்வாணன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    கொலை செய்யப்பட்ட பார்த்சாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளி தமிழ்வாணனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    தந்தையை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×