என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் இன்று மத்திய அரசை கண்டித்து வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர்.
- எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
விழுப்புரம்:
மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விழுப்புர மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குவிந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குற்றவியல் வக்கீல்கள், சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமையில் பார் அசோசியன் தலைவர் தயானந்தம், விழுப்புரம் லாயர் அசோசியேஷன் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தனர். 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணை பிளக்கும் வண்ணம் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மூத்த வக்கீல்கள் மாரிமுத்து, ஜெயபிரகாஷ், தன்ராஜ், தமிழரசன், முகில்வண்ணன், பிரின்ஸ், சோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்த விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக உள்ளது.






