என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளை கலெக்டர் நேற்று முன்தினம் இரவு திடீரென ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் நாகரசம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவியர் விடுதிகளை நேற்று முன்தினம் இரவு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள், சுற்றுப்புறத் தூய்மை, மாணவர்களின் வருகைப்பதிவேடு, சமையல் கூடம், கழிப்பறை, குடிநீர் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த விடுதிகளில் காலை உணவாக பொங்கல், இட்லி, ரவைகிச்சடி, எலுமிச்சை சாதம் ஆகியவை சுழற்சி முைறயிலும், மதிய உணவாக சாதம், சாம்பார், பொறியல், மோர், குருமா, மட்டன், சிக்கன் வாரத்தில் 7 நாட்கள் சுழற்சி முறையிலும், இரவு சாதம், காரகுழம்பு, இட்லி, சாம்பார் என சுழற்சி முறையிலும் வழங்கப்படுகிறது. மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் விடுதி காப்பாளர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் நடத்த ப்படுகிறது.
மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக 25 மாணவர் விடுதியும், 19 மாணவியர் விடுதியும் என மொத்தம் 44 விடுதிகளில் 3016 மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வரை தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 4 இலவச இணை சீருடைகள் வழங்கப்படுகிறது.
மேலும் சிறப்பு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள், ஆங்கில பேச்சாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அரசு விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் தங்களின் கல்வி தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்றார்.
ஓசூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 2 பழமையான மரங்கள் சாய்ந்தன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்ததால் , ராயக்கோட்டை ரோடு ஹட்கோ குடியிருப்பு பகுதியில் 2 பழமையான மரங்கள், நேற்று வேருடன் சாய்ந்து விழுந்தன.
இதனை மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
சிங்காரபேட்டை அரசு பள்ளி வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கழிவறைக்கு தூக்கி சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள கேத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன். இவன் சிங்காரபேட்டை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பாலிடெக்னிக்கல்லூரி மாணவன், 10-ம் வகுப்பு மாணவன், 11-ம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேர் கடந்த மாதம் 14-ந்தேதி அன்று சிங்காரபேட்டை பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த 12 சிறுவனை பள்ளி கழிவறைக்கு தூக்கி சென்றுள்ளனர். பின்னர் அங்கு 11-ம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேரும் சேர்ந்து அந்த சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுவன் சத்தம் போட்டான். ஆனால் அவர்கள் நீ சத்தம் போட்டு ஊரை கூட்டினால் உயிர் வாழ முடியாது. நாங்கள் செல்வதை கேள் என்றார். இதனால் பயந்து போன சிறுவன் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் கேட்டு அடி பணிந்து நின்றான்.
மேலும் இந்த சம்பவத்தை நீ யாரிடம் சொல்ல கூடாது. அதனையும் மீறி நீ யாரிடமும் சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்றனர். பின்னர் அவர்களிடம் இருந்து அந்த சிறுவனை தப்பி வீட்டிற்கு சென்று விட்டான்.
நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் சிறுவன் கூறினார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கஸ்தூரியிடம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து அலுவலர் கஸ்தூரி நேற்று சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவன் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 வயது குழந்தைக்கு கண்ணில் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த தாய் கிருஷ்ணகிரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, வெங்கடேசபுரம் அடுத்த உஸ்தலப்பள்ளியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது30), இவரது மனைவி துளசி (27) இவர்களுக்கு திருமணமாகி, 7வயதில் ஆண் குழந்தையும், 4வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது பெண் குழந்தைக்கு கடந்த இரண்டு வருடம் முன்பு கண்ணீர் நீர் வழிந்த வண்ணம் இருந்தது.
இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. பெங்களூரு தனியார் மருத்துவமனை பரிசோதித்த போது எங்கள் மகளுக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்த நிலையில், குழந்தைக்கு குணமாகவில்லை.
மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் அதற்கு, ரூ.5லட்சம் செலவாகும் எனவும் கூறினர். ஏற்கனவே பல லட்சங்கள் செலவழித்த நிலையில் கூலி வேலை செய்யும் எங்களால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று வாரம் ஒரு முறை குழந்தைக்கு ஊசி போட்டு வருகிறோம். அங்கு சென்று வருவதற்கு கூட வசதியில்லாததால் சிரமப்பட்டு வருகிறோம்.
தமிழக அரசு எங்கள் நிலையை உணர்ந்து எங்கள் மகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வரவேண்டும். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம் என அவர்கள் கூறினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ- மாணவிகள் எழுதினர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (5-ந் தேதி) தொடங்கும் பிளஸ்- 2 பொதுத் தேர்வினை 79 மையங்களில் 22,479 மாணவ, மாணவிகள் எழுதினர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று (5-ந் தேதி) வியாழக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 192 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 11 ஆயிரத்து 158 மாணவர்களும், 11 ஆயிரத்து 321 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 479 பேர் இன்று தேர்வு எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும்,79 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கல்வி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு 79 கண்காணிப்பாளர்களும், 1,300 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 150 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனித்தேர்வர்களுக்காக கிருஷ்ணகிரி டி.கே.சாமி மெட்ரிக் பள்ளி, மத்தூர் குணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓசூர் சி.எஸ்.ஐ., மெட்ரிக் பள்ளி என 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி குடும்பத்தினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியவாணி. இவரும் ஏ.கே .மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு கார்த்திக், காதலி சத்தியவாணியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் ஊத்தங்கரை போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் காதல் ஜோடியை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அந்த காதல்ஜோடியை உறவி னர்கள் முன்பு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தை நேற்று பதிவு திருமணம் செய்வ தற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டாரும் இணைந்து வந்தனர்.
இந்த நிலையில் மணமகன் சாட்சி கையொப்ப மிட மாமனாரை அழைத்துள்ளார்.
அப்போது மணமகன் மாமனாரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாமனார், மணப்பெண்ணிடம் வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.
இதை கேட்டு மணமகனின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது இருதரப்பினர் கடுமையாக மோதி கொண்டனர்.
இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் பெண்ணின் உறவினர்கள் மணமகனை கட்டையால் தாக்க முயன்றனர். இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்களுக்குள் சமாதானம் பேசினர். இதையடுத்து மணமகன், மாமனார் காலில் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு மீண்டும் பதிவு திருமணம் அமைதியாக நடந்தது.
இதைத்தொடர்ந்து மணமகள்-மணமகன் இருவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி குடும்பத்தினர் ஒருவரையொருவர் தாக்கிய சம்பவம் ஊத்தங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கடன் தொல்லையால் கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிபட்டியில் கார் செட் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் அரவிந்தன் (வயது 35) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தொழில் சம்பந்தமாக பல்வேறு இடங்களில் அரவிந்தன், கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லை காரணமாக அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பூச்சி மருந்து குடித்து அரவிந்தன் மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து காவேரிப்பட்டணம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே யானை தாக்கியதில் தொழிலாளி காயம் அடைந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது65). கூலி தொழிலாளி, நேற்று காலை விறகு வெட்டுவதற்காக, குந்துக்கோட்டை வன ப்பகுதியில் சென்றார்.
அப்போது, அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை ராஜகோபாலை தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, அங்கிருந்து யானை சென்றுவிட்டது. அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற ஜெம்பேரி (45) என்பவர் பார்த்து, அவரை மீட்டு வண்ணாத்தி கிராமத்திற்கு தூக்கி வந்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜ கோபாலை போலீசார் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அவர் அனுமதி க்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரி-வேப்பனபள்ளி சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் மூட்டையுடன் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த மூட்டையில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மொபட்டுடன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வேப்பனபள்ளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர்(வயது50) என்பதும், வேப்பனபள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மேலும் ஒரு டன் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பஞ்சேஸ்வரம் அடுத்த பி.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆஞ்சினப்பா. இவரது மனைவி ஜலஜம்மா (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கனமழையால் பி.செட்டிப்பள்ளி அருகே உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஓடையை கடக்க ஜலஜம்மா இறங்கிய போது அவருடன் வந்த மற்ற 2 பெண்கள் தடுத்தனர். ஆனால் அதற்குள் ஜலஜம்மா ஓடையில் இறங்கிய நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
இதை பார்த்த 2 பெண்களும், ஜலஜம்மா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறையினர்.
தேவி ஏரியில் நேற்று இரவு மீட்டனர். இந்த சம்பவம் பற்றி கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றில் 300 மின்கம்பங்கள் சேதமானது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், அவ்வப்போது மின்வெட்டால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் பெய்யும் மழையால் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி நகர் உட்பட பல இடங்களில், 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால், பல பகுதிகள் இருளில் மூழ்கின.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும போது, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக பராமரிப்பிற்காக மின்நிறுத்தம் செய்யப்படவில்லை. மேலும்
கடந்த இரு தினங்களாக அடித்த சூறாவளி காற்றினால் கிருஷ்ணகிரி நகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன.
மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்கள் சாய்ந்து உள்ளன என ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மின் கம்பிகளில் உள்ள இன்சுலேட்டர், வெடித்து விடுவதால் அதையும் ஆராய்ந்து மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டம் முழுவதும் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு இதுவரை 300 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமாகி உள்ளது. இவை அனைத்து மாற்றிமைக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
கிருஷ்ணகிரி அணை பூங்காவில் 17 வயது புள்ளிமான் இறந்தது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையை பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கானோர் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர்.
நேற்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவ்வாறு குவித்த அவர்கள், அணை பூங்காவில் தங்கள் குழந்தைகளை விட்டு விளையாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் அங்குள்ள மான் பூங்காவில் 60 மான்கள் உள்ளன.
அதில் 17 வயது மதிக்கத்தக்க ஆண் ஒன்று இறந்து கிடப்பதை, மான்களை பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்து, அதை சமுக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த பூங்கா பராமரிப்பாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கால்நடை மருத்துவர் அங்கு சென்று பிரேத பரிசோதனை செய்து, அதை அந்த பூங்காவின் ஒரு பகுதியில் புதைத்தனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வயது முதிர்வின் காரணமாக மான் இறந்ததாக தெரிவித்தனர். மான் இறந்து கிடந்ததை பார்த்த சுற்றுலா பயணிகடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






