என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய லாரி சிக்கியது.
    • டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சதீஷ், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்தென்னரசு மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சூளகிரி அடுத்த சப்படி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தினார்கள். அதில் 50 கிலோ அளவிலான 396 மூட்டைகளில் 19 ஆயிரத்து 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் சோமனஹள்ளியை சேர்ந்த மணிவண்ணன்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றது தெரிந்தது. ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன்பு மறியல் நடந்தது.
    • விபத்தில் இறந்தவர் உடலை தர தாமதமானதாக உறவினர்கள் புகார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கார்வேபுரம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த முரளி (35), ஹரீஷ் (32) ஆகியோர் நேற்று முன்தினம் காரில் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கார் அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் மேம்பாலத்தில் வந்தபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியது.

    இதில் முரளி, ஹரீஷ் 2 பேரும் பலியானார்கள். அவர்களின் உடல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் வரையில் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்படாததை கண்டித்து உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் மற்றும் டவுன் போலீசார் விபத்தில் பலியானவர்களின் உறவி னர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    பிரேத பரிசோதனை செய்வதற்கு முன்பாக தயாரிக்க வேண்டிய ஆவணங்கள் காவல் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு மருத்துவமனையிடம் வழங்கி, பிரேத பரிசோதனை செய்து உடல்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்த தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சூளகிரி ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • புகைப்படத்துடன் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம்-சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள 4 ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.

    அதில் மேலுமலை கிராம ஊராட்சியில் வார்டு எண் 10, சூளகிரி கிராம ஊராட்சி வார்டு எண் 5, தியாகரசனப்பள்ளி ஊராட்சி வார்டு எண் 9, கொம்மேபள்ளி ஊராட்சி வார்டு எண் 9 ஆகிய காலி இடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.

    இதனால் அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்காளர் புகைப்பட பட்டியலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளரின் அறிவுரையின்படி சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி ஆணையாளர் அசோகன் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அந்தந்த ஊராட்சியினரிடம் புகைபடத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வழங்கினார்.

    இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், மூகிலன், அனைத்து கட்சி நிர்வாகிகள் கங்கப்பா, பாலசுப்பிரமணியன், குருபிரசாத் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் காந்தியை விசாரிக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஓசூர், கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் எதிரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார்.

    இதில் பழி வாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊத்தங்கரை முன்னாள் தலைவர் ஆறுமுகம், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில நிர்வாகி ஆறுமுகசுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, முன்னாள் நகர தலைவர் வின்செண்ட், விவசாய அணி தலைவர் சூர்யகணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், குட்டி என்கிற விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் காந்தியை விசாரிக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • ஓசூர், கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தினர்.

    ஓசூர்,

    மத்திய பா.ஜ.க. அரசு, பொய் வழக்கு போடுவதாக கண்டனம் தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் காமராஜ் காலனி 2-வது கிராஸ் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் அன்வர், வீர.முனிராஜ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    மேலும் இதில், மாவட்ட பொருளாளர் மகாதேவன், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, மஞ்சுளா மற்றும் மாவட்ட, மாநகர, வட்டார நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • கிருஷ்ணகிரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • சங்கடஹர சதுர்த்தியை கொண்டாடினர்.

    கிருஷ்ணகிரி,

    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்–ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதையொட்டி விநாயகருக்கு, 608 லிட்டர் பால் அபிஷேகமும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

    சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு, மஹா தீபாராதனைகளுடன் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டன.

    இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில் என பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • காவேரிப்பட்டினம் மாரியம்மன் கோவிலில் ஊர் பண்டிகை தொடங்கியது.
    • பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் ஊர் பொதுமக்கள் பரம்பரை அறங்காவலர்கள் , கூம்பு எஜமானர்கள் சமூக சங்க தலைவர்கள் சார்பில் காவேரிப்பட்டினம் ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பண்டிகை கடந்த மாதம் 24-ந் தேதி முதல் சாட்டலுடன் தொடங்கியது. முதல் சாட்டல் விடுத்த 15 நாட்களுக்குள் காவேரிப்பட்டணம் பொதுமக்கள் வலசை சென்று வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது .

    இரண்டாவது சாட்டல் நிகழ்ச்சியுடன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ சாமுண்டி அம்மன் வனத்திற்கு பானகம் கட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    ஏராளமான ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காவேரிப்பட்டணத்தில் இருந்து சாமுண்டி அம்மன் வனத்திற்குச் சென்று பானகம் கட்டும் நிகழ்ச்சிக்கு சென்று வந்தனர்.

    • காவேரிப்பட்டினத்தில் வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
    • மின் கம்பத்தில் ஏறியபோது விபரீதம் நடந்தது.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி சவுளுரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 22). இவர் பட்டதாரி.

    இந்நிலையில் நேற்று விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சு வதற்காக மின் மோட்டாரை ஆன் செய்துள்ளார். .அப்பொழுது மின்சாரம் வரவில்லை. இதற்காக கம்பத்தின் மீது ஏறும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து உறவினர்கள் கூறும் போது மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இதுபோல உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 மாதத்துக்கு முன்பு இதுபோலவே இப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    மின்சாரம் இல்லாதது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து சரிவர சோதனை செய்வதில்லை என குற்றம்சாட்டி உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கூறுகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாகலூரில் கழிவுநீர் சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது.
    • ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    ஓசூர்,

    ஓசூர் ஒன்றியம் பாகலூர் ஊராட்சியில், தேர்பேட்டை பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 30,000 மதிப்பில் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் 2 வடிகால் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

    இதற்கான பணிகளை ஊராட்சி தலைவர் வி.டி.ஜெயராமன் நேற்று பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    மேலும் இதில், வார்டு உறுப்பினர் அப்பையா நாயுடு, ஊராட்சி செயலர் சர்வேஷ் ரெட்டி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வடமாநில டிரைவர் சிப்காட்டில் மர்மமாக இறந்தார்.
    • இதனால் மற்ற டிரைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் இரு சக்கர வாகனங்களை வடமாநிலங்களுக்கு கன்டெய்னர் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக 10-க்ற்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகள் சிப்காட் வளாகத்தின் அருகே உள்ள முருகன் கோவில் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (45) என்ற ஓட்டுனர் தனது கன்டெய்னர் லாரியுடன் கடந்த 15-ம் தேதி வந்து அன்று முதல் காத்திருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் எழுந்து லாரியை சுத்தம் செய்துவிட்டு உள்ளே சென்றவர் நெடு நேரமாகியும் லாரி கேபினிலிருந்து வெளியே வரவில்லை. சகலாரி ஓட்டுனர்கள் மனோஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்திறகு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் அங்கு சென்று விசாரனை மேற்கொண்ட போலீசார், பிரேதத்தை கைபற்றி தருமபுரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாமல்பட்டி ரெயில் பாலம் மழை நீரால் மூழ்கியது.
    • இதனால்மக்கள் அவதியடைந்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டியில் தென்னக இரயில்வே தரைபால் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூர் -பாண்டிசேரி சாலையில் அமைக்கப்பட்டிள்ளது.இந்த தரைப்பாலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக நீர் வெளியேறும் பாதையை தண்ணீர் அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு நீர் வெளியேராமல் அங்கேயே தேங்கி இருந்தது.

    இதனால் அந்தவழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் தத்தளித்து வருகின்றனர்.

    இதனால் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். பலநேரங்களில் அவர்களின் வாகனம் தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனத்தை இயக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர் கர்நாடகாவிலிருந்து பாண்டி செல்லக்கூடிய பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரக்கூடிய பல தனியார் வாகனங்கள் இந்த ரயில்வே தரைபாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி கொண்டு வாகனங்கள் பழுதடைந்து மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகப்பெரிய அவதிப்படுகின்றனர்

    நேற்று இரவு பெய்த கன காரணமாக தரைப்பாலத்தில் தேங்கிய அதிக அளவு தண்ணீரில் இரண்டு பேருந்துகள் தண்ணீரில் மாட்டிக்கொண்டது . இந்நாள் வரை இதற்கு தீர்வு எட்டவில்லை இப்பகுதியில் அதிக மழை பொழியும் போதெல்லாம் தரைப்பாலம் கட்டியதிலிருந்தே இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பாலத்தில் இருந்து நீர் வெளிவருவதற்கான வழியை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தற்காப்பு கலை போட்டியில் ஓசூர் மாணவர்கள் வென்றனர்.
    • எம்.எல்.ஏ.விடம் அவர்கள் வாழ்த்து பெற்றனர்.

    ஓசூர்,

    நேபாளத்தில், சர்வதேச அளவில் ஊசூ தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. இதில், ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவியர் 8 பேர், தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். நேபாள நாட்டில் போகாரா என்ற இடத்தில் உள்ள ரங்கசாலா ஸ்டேடியத்தில் சர்வதேச அளவிலான விளை யாட்டுப்போட்டிகள் கடந்த 10 -ந்தேதி முதல் 15 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதில், இந்தியா, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஊசூ பாக்ஸிங், கிக் பாக்சிங், தடகள போட்டிகள், கபடி, சிலம்பம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    சர்வதேச அளவில் நடைபெற்ற இந்த விளை யாட்டுப் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஊசூ தற்காப்பு கலை போட்டிகளில் மட்டும் இந்தியாவிலிருந்து 60-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். தமிழகத்திலிருந்து, ஓசூரை சேர்ந்த 8 மாணவ-மாணவியர், ஜூனியர் மற்றும் சப் -ஜூனியர் பிரிவிலும் பங்கேற்றனர்.

    போட்டிகளில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கங்களை வென்று, ஓசூர் திரும்பிய மாணவர்களை, பள்ளியின் முதல்வர் பபியோலா மேரி மற்றும் பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற இந்த மாணவர்கள், அடுத்ததாக தாய்லாந்தில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான ஊசூ போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

    இந்தநிலையில் சாதனை மாணவர்கள், ஓசூர் எம்.எல்ஏ.ஒய்.பிரகாசிடம் நேரில் வாழ்த்து பெற்றனர். அவர்களை, போட்டிகளில் மேலும் பல சாதனைகள் புரிய பிரகாஷ் எம்.எல்.ஏ.வாழ்த்தினார். அப்போது, பூனப்பள்ளி ஊராட்சி தி.மு.க.செயலாளர் மஞ்சுநாதப்பா, எடப்பள்ளி எம்.பிரகாஷ், ராமச்சந்திரன் உன் பட பலர் உடன் இருந்தனர்.

    ×