என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • கைதான இருவரிடம் இருந்து 9 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • பல்வேறு இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    மத்தூர், 

    ஊத்தங்கரை அருகேயுள்ள மத்தூர் போலீஸ் சரக பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து டி .எஸ்.பி.அலெக்சாண்டர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொடமாண்டபட்டி கூட்டுரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகப்படும்படி இருந்த 2 பேரை பிடித்தது விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .

    இதனால் அவர்களை மத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் கரம்பூரை சேர்ந்த சக்திவேல், மேகநாதன் ஆகிய அந்த 2 பேரும் மத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் திருடியதை ஒப்புக்கொண்டனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 பவுன் தங்க நகைகளை மீட்டனர். 

    • பகல் நேரங்களில் மதுகுடித்து விட்டு வீட்டில் குடிமகன்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
    • இது பற்றி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் நகரில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    இதனால் பகல் நேரங்களில் மதுகுடித்து விட்டு வீட்டில் குடிமகன்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது பற்றி போலீசில் புகார் கொடுத்தும் போலீசார் எந்த விதநடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது திருட்டு தனமாக நடக்கும் மதுவிற்பனையை முற்றிலும் தடை செய்யப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இங்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள்.

    இதனால் இப்பகுதியில் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. கு

    டித்துவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள கள்ளத்தனமாக மது விற்பதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அணைக்கு சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டது.
    • கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை, வரு வாய்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி, 

    கர்நாடகா மாநிலம் பெங்களுரு பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கிருஷ்ண கிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து 1128 கனஅடியாக இருந்தது. நேற்று காலை 2.299 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளவான 52 அடியில் 50.70 அடிக்கு தண்ணீர் உள்ளதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணையின் பாதுகாப்பினை கருதி வினாடிக்கு 2,426 கனஅடி தண்ணீர், பிரதான மதகு வழியாகவும், 3 சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை, வரு வாய்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கிருஷ்ணகிரி அணையில் தரைப்பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அணைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • பத்திரிகையாளர்கள் அல்லாத மற்ற நபர்கள் பிரஸ் ஒட்ட கூடாது.
    • பிரஸ் என கூறி மிரட்டி யாரேனும் பணம் கேட்டாலோ, காவல் துறையில் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்கள் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில சோதனை நடத்தி தற்போது வரையில் 4 போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பத்திரிகையாளர்கள் அல்லாத மற்ற நபர்கள் யாரேனும் வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல எந்த அலுவலகங்களிலும் பிரஸ் என கூறி மிரட்டி யாரேனும் பணம் கேட்டாலோ, காவல் துறையில் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது தற்போது வரையில் மகராஜகடை, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கந்திகுப்பம், மத்திகிரி ஆகிய போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 20 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கந்துவட்டியால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் 96779 45569 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் செய்யலாம்.

    பாதிக்கப்பட்ட நபர்களிடம் விவரங்கள் பெறப்பட்டு, வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கந்து வட்டியால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எந்தவித அச்சமும் இன்றி புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் ஆகியவை நடந்தது. பகல் கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

    • லாரி கவிழ்ந்த விபத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • இந்த சாலை அதிக வளைவுகளை கொண்ட சாலை என்பதால் இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிகம் காணப்படுகிறது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதியில் இரும்பு தகடுகள் ஏற்றி வந்த லாரி வளைவு பகுதியில் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்தார். இந்த லாரி சேலம் உருக்கு ஆலையில் இருந்து சட்டீஸ்கர் மாநில ஆலைக்கு சென்றது. இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் என கூறுகின்றனர்.

    வாணியம்பாடி முதல் அயோத்தியாப்பட்டணம் வரை நான்கு வழி சாலை வேலைகள் நடந்து வரும் சூழ்நிலையில் ஏ. பள்ளிப்பட்டி வரை இந்த சாலையின் வேலை முழுமையாக முடிவடைந்து உள்ளது.

    இந்த சாலை அதிக வளைவுகளை கொண்ட சாலை என்பதால் இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் அதிகம் காணப்படுகிறது. அதனாலேயே இதுபோன்ற விபத்து கள் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுபோன்ற ஆபத்தான விளைவுகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கடந்த 12 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் அனைவரும் 100 சதவிதம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    கடந்த 12 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் 100 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற உறுதுணையாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பி. சேகர் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு 12 ஆண்டுகளாக தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற ஊக்குவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் நேசபிரபா, ஆசிரியர்கள் சகாய ஆரோக்கியராஜ், சதீஷ், அமலா ஆரோக்கியமேரி, சிவக்குமார், ஆல்பர்ட் டேவிட் மற்றும் தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க கவுரவ தலைவர்கள் கண்ணன், கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் கிடைக்காமல் பல நாட்கள் தவித்து வந்தனர்.
    • பல முறை புகாகுடிநீர் கிடைக்காமல் பல நாட்கள் தவித்து வந்தனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், கண்ணன் டஹள்ளி, ஊராட்சி கண்ணட ஹள்ளி கூட்டுச் சாலை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்றுகாலை பெண்கள் காலி குடங்களுடன் திருவண்ணாமலை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போத குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

    இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1600 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
    • தென்பெண்ணை ஆற்றில் இந்த கழிவுநீர் கலந்து ரசாயன நுரை அதிக அளவு செல்கிறது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,600 கன அடி நீர் வந்தது.. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் 40.51 அடி நீர் இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1600 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.

    கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில் இந்த கழிவுநீர் கலந்து ரசாயன நுரை அதிக அளவு செல்கிறது. ரசாயன நுரைகள் அதிக அளவில் குவிந்தும், பொங்கி செல்வதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,. சுத்தமான நீர் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை யாற்றில் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 242 மதிப்பெண்கள் எடுத்தும் தேர்ச்சி ஆகவில்லை.
    • மன உலைச்சலில் மாணவி வீட்டில் தூக்குபோட்டார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்க ரையை அடுத்த சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகள் காவியா (வயது17). இவர் ஊத்தங்கரை மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 கணிதப் பாடப் பிரிவில் படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் காவியா தேர்வில் தோல்வியடைந்ததாக தெரிகிறது. அவர் 600 மதிப் பெண்ணுக்கு 242 பெற்றுள்ளார்.

    மேலும் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி மற்றபாடங்களில் தேர்வாகவில்லை. இதன் காரணமாக மன விரக்தி அடைந்து மாணவி வீட்டில் தூக்குபோட்டு உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலை குட்டை அமைக்கும் பணி.
    • களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சி பனங்காட்டு பகுதியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர் நிலை குட்டை அமைக்க களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் (வ ஊ )ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது.
    • அகழாய்வின் போது கிடைத்த பானை ஓடுகள், மண் குடுவைகள், மண் குவளைகள், வட்டச் சில்கள், கல் மணிகள், சுடுமண் மணிகள் மற்றும் இரும்பு கருவிகளைப் பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை முதுகலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், மயிலாடும்பாறையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர்.

    மேலும், அகழாய்வின் போது கிடைத்த பானை ஓடுகள், மண் குடுவைகள், மண் குவளைகள், வட்டச் சில்கள், கல் மணிகள், சுடுமண் மணிகள் மற்றும் இரும்பு கருவிகளைப் பார்வையிட்டனர்.

    இந்த அகழாய்வு குறித்து மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் மற்றும் பொறுப்பாளர் பரந்தாமன் ஆகியோர் மாணவர்களிடம் கூறியதாவது:

    தொல்லியல் எச்சங்கள் அதிகமாக காணப்படக்கூடிய தமிழ்நாட்டில், தற்போது தமிழக அரசு, பண்டைய தமிழ் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாடு மற்றும் கலாசார வாழ்வியல் முறைகளை வெளிக்கொண்டு வருவததற்காக தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வு நடந்து வருகிறது.

    இதில், மயிலாடும்பாறை அகழாய்வு வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த அகழாய்வு குறித்து, வரலாற்றுத்துறை கல்லுாரி பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் பேராசிரியை பிரயலட்சுமி ஆகியோர் கூறுகையில், மாணவர்கள் தொல்லியல் பாடத்தை ஏட்டில் இருப்பதை படிப்பதைவிட கள ஆய்வு செய்து, களத்தில் நின்று கற்றல் மிகவும் சிறந்த முறையாகும். இத்தகைய கள ஆய்வு படிப்பினை மாணவர்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றிருக்கும் என்றனர்.

    ×