என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • தங்க காசு ஒன்றை திருடி தனது கைப்பையில் ஒளித்து வைத்த காட்சி பதிவாகி இருந்தது.
    • அவரை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்சூர் அஹமது (வயது 36). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நகை கடையில் தங்க நாணயம் ஒன்று மாயமானது.

    இதேபோல அப்பகுதிகளில் உள்ள மேலும் சில கடைகளிலும் நகைகளை திருடு போனது. இது குறித்து நகை கடை உரிமையாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொ ண்டிருந்தனர்.

    இந்நிலையில் மன்சூர் அஹமது நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு பெண் நகை வாங்குவது போல வந்து தங்க காசு ஒன்றை திருடி தனது கைப்பையில் ஒளித்து வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சி நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மன்சூர் அஹமது கேமராவில் பதிவாகியிருந்த காட்சி மூலம் அப்பெண்ணை அடையாளம் கண்டு அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு நகை கடையில் சலுகை விலையில் நகை விற்பனை நடைபெறுவதாக கூறி அவரை வர வைத்தார்.

    இதையடுத்து அந்த பெண் குறிப்பிட்ட நகை கடைக்கு வந்தார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து திருட்டு நகைகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி கவிதா (37) என்பது தெரிய வந்தது. அவர் இதேபோல பல்வேறு நகை கடைகளிலும் வாடிக்கையாளர் போல உள்ளே சென்று நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கவிதாவை கைது செய்த போலீசார் அவரை கிருஷ்ணகிரி மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், தெரிவித்திருந்தார்.
    • மத்திய அரசு ஒதுக்கீடு செய்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    ஓசூர், 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க மாநில செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.நரசிம்மன், "கிருஷ்ணகிரி-ஓசூர் வழியாக சென்னை -பெங்களூர் ெரயில் பாதை புதிய ெரயில் பாதை திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு விளக்கம் அளிக்க விரைவில் மத்திய அமைச்சர் ஓசூர் வர உள்ளார் என்றும், இந்தத் திட்டத்திற்கு சுமார் 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக கிருஷ்ணகிரி எம்.பி, டாக்டர் ஏ செல்லகுமார் நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூர் ஜோலார்ப்பேட்டை ெரயில்வே திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை. ஓசூர் - ஜோலார்ப்பேட்டை இடையே ெரயில்பாதை அமைக்க இதுவரை 11 முறை சர்வே செய்யப்பட்டது. 10 முறை சர்வே செய்ததில் இந்த ெரயில்பாதையில் ெரயிலை இயக்கினால் நஷ்டம் ஏற்படும் என அறிக்கை ெரயில் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    2019 -ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு,11-வது முறையாக எனது தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு, அறிக்கை தயாரித்து அளித்தபின், லாபத்துடன் இயங்கும் ெரயில்பாதை என ெரயில்வே வாரியம் ஒப்புக் கொண்டது.

    இது குறித்து ஹோஸ்டியா, ஒசூர் தொழிற்சாலைகள் சங்கம், விவசாயிகள், கிரானைட் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இத் திட்டத்திற்கு ரூ.1,496 கோடி செலவு ஆகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால்,இந்த திட்டத்திற்கு 1,900 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துவிட்டதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    பேட்டியின் போது, மேற்கு காங்கிரஸ் தலைவர் எஸ்.ஏ. முரளிதரன், முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • குழந்தையை பணத்திற்காக விற்றதை தனலட்சுமி ஒப்புக் கொண்டார்.
    • குழந்தையை வாங்கிய உதயா-சுமதி தம்பதி மற்றும் குழந்தையை விற்ற தனலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 35). இவர், கடந்த 12-ந் தேதி 8 மாத ஆண் குழந்தையுடன் கிருஷ்ணகிரிக்கு வந்தார்.

    புதிய பஸ் நிலையம் சென்ற தனலட்சுமி குழந்தையை கழிப்பறை முன் படுக்க வைத்துவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றதாகவும், மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் மர்மநபர்கள் குழந்தையை கடத்தி சென்றதாக தனது கணவரிடம் கூறினார்.

    இது தொடர்பாக தனலட்சுமியின் கணவர் வெங்கடேசன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக தனலட்சுமியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறினார். இதனால் தனலட்சுமி மீது சந்தேகம் அடைந்த போலீசார் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒரு பெண்ணும், ஆணும் தனலட்சுமியுடன் வந்து பேசுவதும், பின்னர் குழந்தையை அவர்கள் வாங்கி செல்வதும் பதிவாகி இருந்தது. இதைத் தொடர்ந்து தனலட்சுமியிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    அதில் முகநூலில் வந்த பதிவை பார்த்து குழந்தையை பணத்திற்காக விற்றதை தனலட்சுமி ஒப்புக் கொண்டார். இது குறித்து தனலட்சுமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் தரப்பில் இது பற்றி கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்தவர் உதயா (37), இவரது மனைவி சுமதி (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    இதனால் தங்களுக்கு குழந்தை வேண்டும். அதற்காக பணம் தருகி றோம் என்று தங்களின் செல்போன் எண்ணுடன் சமூக வலைத்தளமான முகநூலில் பதிவு செய்து ள்ளனர்.

    அந்த முகநூல் பதிவை தனலட்சுமி பார்த்துள்ளார். தனலட்சுமிக்கு ஏற்கனவே கமலினி (8) என்ற பெண் குழந்தையும், ராம்பிரசாத் (4) என்ற ஆண் குழந்தையும் உள்ளதால் 3-வதாக பிறந்து தற்போது 8 மாதமாக உள்ள ஆண் குழந்தையை வளர்க்க தனலட்சுமிக்கு மனமில்லை.

    அந்த குழந்தையை பணத்திற்கு விற்று விடலாம் என்று திட்டமிட்ட தனலட்சுமி முகநூலில் குறிப்பிட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது ரூ.25 ஆயிரத்துக்கு குழந்தையை வாங்கி கொள்வதாக உதயா தம்பதி கூறியதையடுத்து, தனது குடும்பத்தினரிடம், கிருஷ்ணகிரிக்கு சென்று வருவதாக கூறி விட்டு குழந்தையுடன் தனலட்சுமி வந்தார்.

    பின்னர் பஸ் நிலையத்தில் திருப்பூர் தம்பதியிடம் குழந்தையை கொடுத்து விட்டு ரூ.25 ஆயிரத்தை வாங்கினார். பிறகு தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என தனலட்சுமி நாடகமாடி உள்ளார்.

    இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சென்று விற்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையை வாங்கிய உதயா-சுமதி தம்பதி மற்றும் குழந்தையை விற்ற தனலட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது,
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என வழங்கப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மத்தூர் உபகோட்டம் சார்பில் போச்சம்பள்ளி மின் பகிர்மான கோட்ட செயற் பொறியாளர் இந்திரா, முன்னிலையில், கிருஷ்ணகிரி செயற்பொ றியாளர் (பொது) வேலு தலைமையில் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது, இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாவது பரிசு, மூன்றாவது பரிசு என வழங்கப்பட்டது.

    போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் எழுதுகோல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மின் சிக்கனம் குறித்து பிரதான சாலை வழியாக பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக மத்தூர் பேருந்து நிலையம் வந்தடைந்தது.

    இதில் மின் சேமிப்பு மின் சிக்கனம் குறித்து துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும், காணொலி காட்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதேபோல் போச்ச ம்பள்ளி, அரசம்பட்டி, பண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் உதவி செயற் பொறியாளர் மகாலட்சுமி, போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாவின், உதவி பொறியாளர்கள் பெருமாள், சிவக்குமார், சரவணன், அசோக்குமார், அருள், கார்த்திகேயன், மின் வாரிய மேற்பார்வையாளர்கள், மின்பாதை ஆய்வாளர்கள் மற்றும் மின் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
    • அனைத்து பெட்டிஷன்தாரர்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரிலும் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையிலும் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.

    இதில் ஏராளமானோர் தங்கள் குறைகளை பெட்டிஷனாக எழுதி காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளியிடம் கொடுத்தனர்.

    அவர் அதை உடனடியாக பரிசீலித்து அந்த பெட்டிஷனுக்கு சம்பந்தப்ப ட்டவர்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு வரவழைத்து அனைத்து பெட்டிஷன்தாரர்களுக்கும் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    இது குறித்து பொது மக்கள் கூறும் பொழுது, பெட்டிஷன் மேளா நடைபெறுகிறது என தெரிவித்ததும் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தோம்.

    அவர் அதை உடனடியாக பரிசீலித்து சம்பந்தப்ப ட்டவர்களை அழைத்து எங்கள் குறைகளை போக்கி கொடுத்தார். இதற்கு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

    பெட்டிஷன் மேளாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பையூர் ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் விமல், மாவட்ட பால்வளத் தலைவர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் பி.டி.சுந்தரேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் சமரசம், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் மதிவாணன், சண்முகம், பெரியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    • மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.
    • சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாக்கடை போலீசார் ராமியணப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அரசின் அனுமதியின்றி மூன்று யூனிட் மண் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து லாரியை ஓட்டிவந்த சீனிவாசன் (வயது 32) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பத்மநாபனின் மனைவி மாடியில் இருந்துள்ளார்.
    • உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீஸ் சரகம் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 31).இவரது வீடு தரைத்தளம் மற்றும் மாடி கொண்டது.

    பத்மநாபனின் மனைவி மாடியில் இருந்துள்ளார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய பத்மநாபன் கீழ் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க நகைகள், 3590 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.

    அதிர்ச்சியடைந்த பத்மநாபன் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் கைரேகை சோதனை மேற்கொண்டு பத்மநாபன் வீட்டில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகை வாங்குவது போல நடித்தபடி தங்க காசுகளை திருடி ஒளித்து வைத்துள்ளார்.
    • கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.

    கிருஷ்ணகிரி, 

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்சூர் அஹமது (வயது 36). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடைக்கு ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி கவிதா (37) என்பவர் நகை வாங்குவது போல வந்துள்ளார்.

    அப்போது நகை வாங்குவது போல நடித்தபடி தங்க காசுகளை திருடி ஒளித்து வைத்துள்ளார்.

    இதை கடை உரிமையாளர் மன்சூர் அஹமது பார்த்து விட்டார். இதையடுத்து கவிதாவை கையும் களவுமாக பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார்.

    போலீசார் கவிதாவை விசாரித்து கைது செய்தனர்.அவரிடம் இருந்து 4 கிராம் தங்க காசுகளை பறிமுதல் செய்தனர்.

    • அவ்வழியாகவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கார் அவர்கள் மீது மோதியது.
    • கவிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி, 

    ஓசூர் பழைய ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 37).இவர் தனதுதாயுடன் இருசக்கர வாகனத்தில் ஓசூர்-பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாகவந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கார் அவர்கள் மீது மோதியது.இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.அவரது தாய் லோகம்மாள் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல வாணியம்பாடி பகுதியை சேர்ந்த குமார் (38) என்ற வாலிபரும், போச்சம்பள்ளி அருகேயுள்ள குட்டன்கொல்லை கொட்டாய் பகுதியை சேர்ந்த கமலநாதன் (46) என்பவரும் இருசக்கர வாகனங்களில் சென்றபோது வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனர்.

    • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
    • சிகிச்சை பலன் தரவில்லை என்று வேதனையில் இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேகைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 44).இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.இதற்காக சிகிச்சை பெற்றும் வருகிறார்.

    ஆனால் சிகிச்சை பலன் தரவில்லை என்று வேதனையில் இருந்துள்ளார்.இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி கல்பனா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள மணவாரனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன முனியப்பன் கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்ல கங்கமடுகு கிராமத்திலிருந்து குப்தா நதியின் கடந்து செல்ல வேண்டும்.

    கடந்த ஒரு வருடமாக குப்தா நதியில் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து கனமழை காரணமாகவும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக ஆபத்தான நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி பயணம் செய்து வருகின்றனர். மேலும் தற்போது மீண்டும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் கிராம மக்கள் அனைவரும் கிராமத்திலேயே தவித்து வருகின்றனர்.

    இதனால் கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் இரண்டு மாதங்களாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். மேலும் முதியவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை மருத்துவ வசதி கூட இல்லாமல் கிராமத்திலேயே முடங்கியுள்ளதால் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் ரேஷன் பொருட்கள் கூட வாங்க முடியாமல் ஆற்றை கடந்து செல்ல அச்சப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் ஆபத்தான முறையில் பாய்ந்து ஓடும் வெள்ளப்பெருக்கு ஆற்றில் ஊன்று கோளை வைத்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர்.

    மேலும் இரண்டு மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பள்ளி குழந்தைகளை ஆசிரியர்கள் வந்து கிராம மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் வைத்தனர்.

    இதையடுத்து பெற்றோர்கள் தனது குழந்தைகளை ஆற்றில் ஆபத்தான முறையில் தோளில் சுமந்து கொண்டு பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

    மேலும் பல மாதங்களாக கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவிக்கும் இந்த கிராம மக்களுக்கு அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×