என் மலர்
கிருஷ்ணகிரி
- மினி லாரி திம்மராயன் மீது மோதியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- விபத்தில் பலியான தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியபனமூட்லு கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி ராணி.
இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மகள் சவுந்தர்யா (23). இவருக்கும், சோக்காடி கிராமத்தை சேர்ந்த முல்லையரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 1½ வயது மகன் உள்ளான். இவர்கள் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திம்மராயன், பெரியபனமூட்லு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அந்த வழியாக கோழி பாரம் ஏற்றி வந்த மினி லாரி திம்மராயன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்னையில் இருந்து நேற்று அதிகாலை சவுந்தர்யா, அவரது கணவர் முல்லையரசு, குழந்தையுடன் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஆட்டோவில் பெரிய பனமூட்லு கிராமத்துக்கு சென்றனர்.
ஆட்டோவை ஜெகதேவியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டிச் சென்றார். வேட்டியம்பட்டி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற பஸ், எதிர்பாரதவிதமாக ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் சவுந்தர்யா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தை புகழ்நிதிக்கு காலில் காயம் ஏற்பட்டது. முல்லையரசு, ஆட்டோ டிரைவர் சுப்பிரமணி ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த மகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.
- வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் தருமபுரி, திருப்பத்தூர் பிரதான சாலையோரம் உள்ள ஏரிக்கரையோரம் மத்தூர் பகுதியை சேர்ந்த ரம்ஜான் மற்றும் அவரது மருமகன் இம்ரான் ஆகிய இருவரும் தள்ளு வண்டியில் மாட்டிறச்சி வறுவல் கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமால்பாஷா என்பவரது மகன்கள் சாதிக்பாஷா, அவரது தம்பி முஸ்தபா ஆகிய இருவரும் இம்ரானிடம் வருவல் கறியை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர்.
இதில் இருவருக்கு மிடையே வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் மது போதையில் இருந்த முஸ்தபா ஆத்திரமடைந்து தனது சட்டை பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்ஜான் மற்றும் இம்ரானை வயிற்றுப் பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தமிட்டுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் கத்தி குத்தில் அடிபட்டு கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய முஸ்தபா, சாதிக் பாஷா இருவரையும் கைது செய்து போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பயங்கர ஆயுதங்களுடன் அந்த ஓட்டலுக்கு வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வந்துள்ளனர்.
- ஓட்டல் ஊழியர்கள் சுரேஷ், குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி பிரதான சாலையில் பிரபலமான ஓட்டல் உள்ளது.
கடந்த 21-ந்தேதி இந்த ஓட்டலுக்கு அருகேயுள்ள வெங்கடாசலம் என்பவரது வீட்டின் முன்பு வரதராஜன் (எ ) ராஜா (வயது 55), நவீன்குமார் (25), விக்ரம் (எ) அப்பு (22) ஆகியோர் தாங்கள் வந்த காரை நிறுத்தியுள்ளனர்.
இதனை வெங்கடாச்சலம் எதற்காக எனது வீட்டின் முன்பு காரை நிறுத்துகிறீர்கள் என்று கேட்டபோது காரில் வந்த வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வெங்கடாச்சலத்தை தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வெங்கடாச்சலம் கே.ஆர்.பி.டேம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பயங்கர ஆயுதங்களுடன் அந்த ஓட்டலுக்கு வரதராஜன் உள்ளிட்ட 3 பேரும் வந்துள்ளனர்.
தங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் மேலாளர் முத்துராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதை தடுக்க வந்த ஓட்டல் ஊழியர்கள் சுரேஷ், குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.காயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஓட்டல் மேலாளர் கட்டியானப்பள்ளியை சேர்ந்த முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி.டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜன், நவீன்குமார், விக்ரம் 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
- கெலமங்கலம் அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.
- சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புறப்பட்டது முதலே பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கெலமங்கலம் அருகே பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதில் பஸ்சின் அடியில் சிக்கிய யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.
விபத்தில் சிக்கிய பஸ்சின் பின்சக்கரங்கள் தனியாக கழன்று ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து பஸ் ஓட்டுனரிடம் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.
- இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே தேவசபையின் பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இயேசு கிறிஸ்து இந்த உலகில் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா என்ற தீர்க்கதரிசி ராஜரீகத்தையும், ஆளுகைையயும் தன் தோளின் மேல் ஏற்றுள்ள அவரது தன்மைகள் பலவற்றை தாங்கும் பெயர்களை முன்அறிவித்தான். அவரது நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமை உள்ள தேவன், நித்தியபிதா சமாதானப்பிரபு ஆகும்.
இந்த உலகத்தில் பிரவேசித்த போது, தேவதூதர்கள் தேவனுக்கு மகிமையும், இந்த பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என பாடினார். இந்த உலகிற்கு சமாதானத்தையும், ஆத்மீக மீட்பையும் கொடுக்கவே, ஏசுபிரான் அவதரித்தார்.
இருள் நிறைந்த உலகிற்கு அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டு, இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.
உலகிற்கு சமாதானம் உண்டாக்க நிலை நாட்ட இயேசு வந்தார். இன்று கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் அனைவரும் துன்பங்களை கடந்து மகிழ்ச்சியுடன் வாழ பெந்தேகொஸ்தே மாமன்றத்தின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
- கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே. தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் கலந்து கொண்டு வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு தந்தைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வரவேற்கப்பட்டார்கள்.
அவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.பி. ரமேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பங்கு தந்தைகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து நல்ஆசி வழங்கினார்கள். மேலும் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.
விழாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கலந்து கொண்டு பங்கு தந்தைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.
- மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவை போற்றும் இலக்கியக் கருத்தரங்கம் நடந்தது.
இந்த கருத்தரங்கை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத்து, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
முன்னதாக அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள் இசையுடன் திருக்குறள் நடனம் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பவானி, தமிழ் வளர்ச்சித்துறை முன்னர்ள இயக்குநர் எழிலரசு, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயன், அரசு ஆடவர் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பழனிவேலு, அரசு ஆடவர் கல்லூரி விரிவுரையாளர் பேகம், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்குமார், முன்னர்ள சட்டமன்ற உறுபப்பினர் கோவிந்தசாமி, தமிழ் வளாச்சித்துறையின் தமிழ்செல்மல் விருதாளர் கருமைத் தமிழாழன், ராசு மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அ மைச்சருமான எம்.ஜி.ஆரின் 35 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக ஓசூர்- பாகலூர் சாலையில், அடகோ பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி மாலை அணிவித்து, பூஜைகள் செய்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு , பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் கட்சியினர் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட துணை செயலாளர் கே.மதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் எஸ்.நாராயணன், ஓசூர் கிழக்கு பகுதி செயலாளர் ராஜி, ஓசூர் ஜெயப்பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- பெரியாரின் 49-வது நினைவு நாள், ஓசூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
- பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியாரின் 49-வது நினைவு நாள், ஓசூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
ஓசூர் - தளி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கி பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இதில், மாநகர செயலாளருமான எஸ்.ஏ.சத்யா, மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், துணை மேயர் ஆனந்தய்யா, மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
- கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில ஆலயத்தில், நல்லிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு பிரார்த்தனை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு, கிறிஸ்து பிறப்பு சிறப்பு விழிபாட்டில் ஈடுபட்டனர்.
மேலும், கிறிஸ்துமஸ் பெரு விழாவினை முன்னிட்டு தேவாலயம் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உட்புறமும், வெளிப்புறமும் இயோசு பாலகனின் பிறப்பை உணர்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்ப ட்டிருந்தது.
தொடர்ந்து, தேவாலயத்தில் உலக நன்மைக்காகவும், உலக மாந்தர் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். பிரார்த்தனையின் போது பாடல் குழுவினரால், சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைத்து பாடப்பட்டது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புத்தாடைகளை அணிந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துக்கொண்டனர்.. சிறப்பு பிரார்தனையின் முடிவில் அனைவரும் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர்.
தருமபுரியில் மாவட்ட த்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து ெகாண்டு வழிபாடு செய்தனர்.
- எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி,
எம்.ஜி.ஆரின், 35-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அ.தி.மு.க., அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏக்கள் முனி வெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் சேசவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் மக்பூல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அருகில் உள்ள கிட்டம்பட்டியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையில், எம்.ஜி.ஆரின் நினைவு சமாதிக்கு, மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில், நகர செயலாளர் கேசவன் தலைமையில், எம்.ஜி.ஆரின் படத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
நகர துணை செயலாளர் குரு, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாசலம், அவைத் தலைவர் ரியாஷ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜன், இலக்கிய அணி நகர செயலாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர்கள், சீனிவாசன், சென்னப்பன், பீட்டர், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
- கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாமினை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகர்மனற் தலைவர் பரிதா நவாப் பங்கேற்று முகாமினை தொடங்கி வைத்தார்.
பின்னர் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தினை சுத்தம் செய்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
இது குறித்து தலைமையாசிரியர் கூறுகையில், வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் ஒவ்வொரு நாளும் மருத்துவ முகாம், சுய முன்னேற்ற விழிப்புணர்வு முகாம், முதலுதவி முகாம், கண்சிகிச்சை முகாம் மற்றும் கோயில் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்வேதா ராணி, பள்ளி ஆசிரியர்கள் திவ்யலட்சுமி, செல்வி, சண்முகப்பிரியா, புவனேஸ்வரி, கவிதா, வெண்ணிலா, மற்றும் முரளி, நயாஸ், மணிமேகலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.






