என் மலர்
கிருஷ்ணகிரி
- பழனிசாமி மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்
- பழனிசாமி மீண்டும் மதுக்குடித்து வந்தால் கணவன்-மனைவி இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வந்தார். கால்டாக்சி டிரைவரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும் உள்ளார். சேலம் மாவட்டம் வெப்பாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக ஓசூருக்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் பழனிசாமி மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பழனிசாமி மீண்டும் மதுக்குடித்து வந்தால் கணவன்-மனைவி இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த பழனிசாமி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேவதி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி ஓசூரை அடுத்த பாகலூர் தளாபேட்டை சேர்ந்தவர் சச்சின் (23). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர்கள் தட்டி கேட்டார். இதனால் மனவேதனை அடைந்த சச்சின் கடந்த 15-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம்குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக வந்து விஜயா கையில் வைத்திருந்த பையை பறித்து சென்றனர்.
- வாலிபர்கள் பையில் இருந்த நகையை மட்டும் எடுத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அருகே வெண்ணாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவரது மனைவி விஜயா (வயது62). இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி-சென்னை பைபாஸ் சாலையில் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் நிறுத்தம் அருகே மெதுவாக வந்து விஜயா கையில் வைத்திருந்த பையை பறித்து சென்றனர். அப்போது அவர் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அதற்குள் அந்த வாலிபர்கள் பையில் இருந்த நகையை மட்டும் எடுத்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து விஜயா கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் நிறுத்ததில் பஸ்சுக்காக காத்திருந்த மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.
- மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது45). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்திரம்மா (45). இந்த நிலையில் கோவிந்தராஜ் அதேபகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அதனை சந்திரம்மா தட்டிகேட்டதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த கோவிந்தராஜ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதியது.
- ஆனால் செல்லும் வழியில் அருணா பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாறம்பள்ளியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அருணா (வயது35). இவரது மகன் அஸ்வின்குமார் (19). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தாய் அருணா, மகன் அஸ்வின்குமார் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். இதில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதியது.
இதில் காயமடைந்த தாய், மகன் 2 பேரையும் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அருணா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அஸ்வின்குமார் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளம உத்தாங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண்தேவ் சர்மா (20). கூலித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கொத்தகொண்டப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அருண்தேவ் சர்மாவின் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார்.
- அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது.
கிருஷ்ணகிரி,
சேலம் மாவட்டம் மேட்டூர் லக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 29). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி கொண்டப்பநாயன அள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று அவர் நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது அங்குள்ள ஒரு மின்மோட்டாரை ஆன் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்மீது மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த குருபரபள்ளி போலீசாருக்கு உடனே அங்கு வந்து சதீஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அஞ்செட்டி போன்ற மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும்.
- இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி கலெக்டர் சரயு தலைமையில் காணொளி காட்சி வாயிலாக துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு துறைகள் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 4 இடங்களில் நடைபெற உள்ளது.
அதன்படி மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பர்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஓசூர் காமராஜ் காலனி அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், தொற்றா நோய்களுக்கான ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் சிகிச்சை, பொது மருத்துவம், இசிஜி மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோதனை, கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் போன்ற சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்களால் அளிக்கப்பட உள்ளது.
மேலும் சித்தா மருத்துவம், ஆயுர் வேத மருத்துவ சிகிச்சை வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் பங்கேற்று மேல் சிகிசசை தேவைப்படுவோர்க்கு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கப்படும். காப்பீட்டு திட்ட அட்டை இல்லாதவர்களுக்கு இந்த சிறப்பு மருத்துவ முகாமில் காப்பீடு அட்டை வழங்கப்படும். குறிப்பாக தூய்மை பணியாளர்களை அனைவருக்கும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க செய்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா அஞ்செட்டி போன்ற மலை கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் இந்த முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உரிய துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.ரமேஷ்குமார், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் சையதுஅலி மற்றும் காணொளி காட்சி வாயிலாக ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தலா 5 பேர் வீதம் மொத்தம் 1,665 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- இதன்மூலம் இப்போது பயிற்சி பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் இருக்கும் மற்ற சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சுய உதவிக்குழுக்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு களநீர் பெட்டியைப் பயன்படுத்தி குடிநீர் ஆதாரங்களின் தரத்தை பரிசோதனை செய்வது குறித்து விழிப்புணர்வு ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
நேற்று முதல் மூன்று நாட்களுக்கு 30 ஊராட்சி களில் இருந்து 5 உறுப்பினர் வீதம் 150 பேருக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தாமரை மகளிர் கூட்டமைப்பு சுயஉதவிக்குழு நிறுவனம், சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு, களநீர் பரிசோதனை பெட்டியைப் பயன்படுத்தி குடிநீர் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்தியது.
இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டு, களநீர் பரிசோதனை பெட்டியின் மூலம், புளோரைடு, மொத்த உப்பு, தண்ணீரில் உள்ள மாசு, தண்ணீரின் அடர்த்தி உள்ளிட்ட 13 பரிசோதனைகளை செய்து காண்பித்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் கூறுகையில், இதே போன்று மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள 333 ஊராட்சிகளிலும் தலா 5 பேர் வீதம் மொத்தம் 1,665 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இப்போது பயிற்சி பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் இருக்கும் மற்ற சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் என்றார்.
இந்த பயிற்சியை மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த திவ்யா மற்றும் நீர் பகுப்பாய்வாளர்கள் கண்ணையன், மாதப்பன், சேகர், பவித்ரா, சத்யா ஆகியோர் வழங்கினர். இதில், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் ரகோத்சிங், இளநிலை பொறியாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் சரயு அமைத்துள்ளார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில், பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறையினர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர்.
அதில், 25 கிலோ அளவிலான, 600 சாக்கு பைகளில், 15 டன் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தை சேர்ந்த கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கன்டெய்னர் லாரியும் தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- நுண்ணூட்டச்சத்து தரக்கூடிய மண்புழு உரம் ரூ.10, கால்நடைகளுக்கு தேவையான தீவனகரனை கோ-5, ஒரு ரூபாய்க்கும் கிடைக்கிறது.
- பயிர் ஒண்டர் ஒரு கிலோ ரூ.225 -க்கு கிடைக்கிறது.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் அனீஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜீனூர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனைக்கு உள்ளது.
வைகாசி மற்றும் கார்த்திகை பட்டத்திற்கு தேவையான அதிக விளைச்சல் கொண்ட நெல் விதைகளாவன நெல் பையூர்-1, உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.37, ஆடி மற்றும் புரட்டாசி மாத பட்டத்திற்கு ஏற்ற ரகமான ராகி பையூர்-2 உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.52, புரட்டாசி மாத பட்டத்திற்கு ஏற்ற ரகமான கொள்ளு பையூர்-2, உண்மை நிலை விதை ஒரு கிலோ ரூ.60, காய்கறிகளான பீர்க்கன், பாகற்காய், புடலங்காய் விதைகள் ஒரு பாக்கெட் ரூ.20க்கு கிடைக்கும்.
மேலும், நாற்றுகளாக வைகாசி மற்றும் கார்த்திகை பட்டத்திற்கு தேவையான நெல் பையூர்-1, நாற்று 1 பாத்தி ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1,200, அதிக விளைச்சல் தரும் தென்னை நாற்று ஆழியார்-1 ரூ.75, மா இளந்தண்டு ஒட்டு ரூ.40, மா நெருக்கு ஒட்டு ரூ.70, அலங்கார செடிகள் ரூ.20, பயிர் வினைவூக்கிகளான தென்னை டானிக் ஒரு லிட்டர் ரூ.325, பயிர் ஒண்டர் ஒரு கிலோ ரூ.225 மற்றும் இயற்கை உரங்களான பயிர்களுக்கு முதன்மை ஊட்டச்சத்துகளான தழைச் சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து தரக்கூடிய மண்புழு உரம் ரூ.10, கால்நடைகளுக்கு தேவையான தீவனகரனை கோ-5, ஒரு ரூபாய்க்கும் கிடைக்கிறது.
எனவே இத்தகைய வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர்.
- மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஒன்றியம் நெரிகம் ஊராட்சியில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலான்மைதுறை சார்பில் நரிக்குறவர், குருவிகாரன் சமுக இன மக்கள், பழங்குடி மக்களுக்கு சாதி சான்றில் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவானது ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்
இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி தாசில்தார் பண்ணீர் செல்வி, டெப்டி தாசில்தார் அம்மு, வருவாய் அலுவலர் குமரேசன், கிராம அலுவலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் கங்கராஜ் துணைத் தலைவர் குருவா மற்றும் ஊழியர்கள் ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர் . மேலும் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவத்தனர்.
- மின்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சுற்றுபுற பகுதிகளில் அடிக்கடி டிரான்ஸ்பார்மார் உடைக்கப்பட்டு மின்கம்பி திருடுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் தேன்கனிக்கோட்டை- பாலதோட்டன ப்பள்ளி சாலையில் உள்ள பால் குளிருட்டும் நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுமனைகள் உள்ளது.
இங்குள்ள டிரான்ஸ் பார்மர் உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மின்துறை அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
16 மற்றும் 25 கே.வி கொண்ட இரண்டு டிரான்ஸ்பார்மர்களை உடைத்து அதிலிருந்த 240 லிட்டர் ஆயில் மற்றும் 120 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது.
இதன் மதிப்பு 2 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்துறை பொறியாளர் தேன்மொழி கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிந்து மின்கம்பி மற்றும் ஆயில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் ஒரே மாதத்தில் 5 இடங்களில் டிரான்ஸ்பார்மர் உடைத்து மின்கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதாக குறிப்பிடத்தக்கது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
- சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க இளைஞரணி சார்பில் அகில இந்திய பொது செயலாளரும், முன்னால் எம்.எல்.ஏ. என்.புஸ்ஸி ஆனந்தின் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் இளையப்பன் மற்றும் சத்தியசீலன், சங்கர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி இளைஞரணி தலைமையில் நடிகர் விஜய்யின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவம்பட்டி பகுதியில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
முன்னதாக இவ்விழாவில் சிவம்பட்டி ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து சிவம்பட்டி அரசு தொடக்கக் கல்வி மாணவ, மாணவியர் 200 பேருக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள் உப கரணங்கள் வழங்கப்பட்டது.
அத்துடன் மத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளி மற்றும் புறநோயாளிகள் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிவம்பட்டி, மத்தூர், களர்பதி, கிருஷ்ணாவரம் உள்ளிட்ட பகுதிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சத்தியநாராயணன், சக்தி, சத்தியன், அருள்குமார, அருண்குமார், தளபதி பாஸ்கரன், விஜயரங்கன், சாம்ராஜ், லோகேஷ், வினோத், இளவரசன், சாரதி, பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






