என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் (வயது 50). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும் பா.ஜ.க. பிரமுகராகவும் இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பி.பி.ஜி.குமரன் கொலை வழக்கில் மண்ணூர் குட்டியை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
அப்போது மண்ணூர் குட்டி ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளராகவும் இருந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மண்ணூர் குட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த மண்ணூர் குட்டி நேற்று மதியம் 12 மணி அளவில் காரில் காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தார். அவரது டிரைவர் காரை ஓட்டி வந்தார். திருமங்கலம் என்ற இடத்தில் அவர் காரில் இருந்து இறங்கினார்.
அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மண்ணூர் குட்டியை கத்தியால் சரமாரியாக தலை, கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டினர். இதில் மண்ணூர் குட்டி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. கொலை நடந்ததும் மண்ணூர் குட்டியின் கார் டிரைவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட மண்ணூர் குட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான மண்ணூர் குட்டியை பட்டப்பகலில் கொலை செய்த கும்பலை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி 3 தனி போலீஸ் படைகளை அமைத்துள்ளார்.
கொலையாளிகளை பிடிப்பதற்காக சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான ‘ஏ.சி.’ பஸ் இன்று காலை மயிலாப்பூரில் இருந்து 30 மாணவர்களை ஏற்றி கொண்டு சென்றது.
7 மணி அளவில் கிண்டி ஆல்டா சிக்னல் அருகே பஸ் வந்தபோது என்ஜினில் இருந்து புகை வந்தது. உடனே டிரைவர் பஸ்சை ரோட்டோரம் நிறுத்தினார்.
ஆனால் அதற்குள் பஸ்சில் தீ பிடித்து பரவியது. இதனால் அலறியடித்தபடி மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார்கள். சிலர் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர்.
முக்கிய பகுதியான கிண்டி சாலையில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து கிண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் பஸ் முற்றிலும் நாசமானது. மாணவர்கள் உடனடியாக பஸ்சில் இருந்து வெளியேறியதால் தப்பினர். 30 மாணவர்கள் மாற்று வாகனத்தில் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கிண்டியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
ஆளும் கட்சியினர் பதுக்கி வைத்துள்ள பணத்தை கைப்பற்ற வெளி மாநில போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.
தேர்தலில் வைகோ போட்டியிடுவதும், போட்டியிடாததும் அவரது தனிப்பட்ட விஷயம். அதை அவரிடம் கேட்க வேண்டும். அதற்காக தி.மு.க. மீது பழி போடுவது தவறு. முதல்-அமைச்சரை பற்றி கூறிய கருத்துக்காக அ.தி.மு.க.வினர் என் கொடும்பாவியை எரிக்கிறார்கள். எரிக்கட்டும். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.
என்னைப்பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறிய கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம்:
தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்தவர் புத்திரிபாய். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். நேற்று பணி முடிந்து புத்திரிபாய் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் புத்தரிபாய் அணிந்து இருந்த 8½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இதே போல் மாடம்பாக்கம் குமரன்நகரில் மேரி என்பவர் வீட்டு முன் இரவு 9 மணிக்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.
இந்த 2 சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் பா.ஜனதா கட்சி ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா உதவியுடன் 2 அல்லது 3 இடங்களில் வெற்றி பெறும் என்று சுப்பிரமணியசாமி கூறி இருப்பது அவரது சொந்த கருத்து.
பா.ஜனதாவில் தான் எல்லா தலைவர்களும் அவர்களது சொந்த கருத்துகளை கூற சுதந்திரம் உண்டு. வேறு எந்த கட்சியிலும் இது கிடையாது.
தேர்தல் ஆணையம் தற்போது பிடித்துள்ள பணம் மிகவும் குறைவுதான். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டுக்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ஆயிரக்கணக்கான கோடி பணம் விதைக்கபட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி, அமித்ஷா தமிழகத்தில் பிரசாரம் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
ஊரப்பாக்கம், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனை ஆதரித்து கனிமொழி எம்.பி. பேசும்போது கூறியதாவது:–
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ஒருவரை தேர்வு செய்து முதல்வராக அமர வைத்தீர்கள். ஆனால், அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதையாவது நிறைவேற்றினாரா? ஆனால், தலைவர் கலைஞர் கடந்த ஆட்சியின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு தற்போது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதனால் தான் தற்போது பொதுமக்கள் அனைவரும் தலைவரின் ஆட்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலர் மது ஆலைகளை நடத்தி வருகின்றனர். அவற்றை மூடலாமே என்று ஜெயலலிதா கேள்வி கேட்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போது மதுக்கடைகளை மூடாமல் தற்போது படிப் படியாக மூடுவேன் என்று கூறி வருகிறார். அப்படியானால் மிடாஸ் ஆலையை மூட ஜெயலலிதா தயக்கம் காட்டுவது ஏன்?
கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் சாலைகள் போடப்பட்டதா? தேர்தல் வருவதையொட்டி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சாலைகள் போடப்பட்டு வருகின்றன. மக்களுக்காக எந்த செயல் திட்டத்தையும் செயல்படுத்தாத அரசை தூக்கியெறிய நேரம் வந்து விட்டது. மே.16–ந்தேதி நடைபெறும் தேர்தலின் போது பொதுமக்களாகிய நீங்கள் வாக்கு என்ற துருப்புச் சீட்டை பயன்படுத்தி அ.தி.மு.க. அரசை தூக்கியெறியுங்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த மழைக்கு காரணம் இயற்கையாக இருக்கலாம். ஆனால், வெள்ளம் செயற்கையாக வந்தது.
செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் நள்ளிரவில் பொதுமக்கள் தூங்கும் நேரத்தில் எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த பொருள்கள், மாணவர்களின் பாடப் புத்தகங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சென்னை மாநகரமே ஸ்தம்பித்து. மக்களை காப்பாற்றுவதற்காக வந்த உதவிகளை பயன் படுத்திக் கொள்ள அரசு முன்வரவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற வந்த மத்திய அரசின் கப்பல் படைக்கு எங்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அதற்கான வழிகாட்டுதலைக் கூட வழங்க தமிழக அரசு தவறிவிட்டது.
ஆனால், தன்னார்வ அமைப்புகளால் வழங்கப்பட்ட பொருள்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து எதுவும் கவலைப்படாமல் வாட்ஸ்அப்பில் ஆறுதல் கூறி விட்டு ஹெலிகாப்டர் மூலம் சேதப்பகுதிகளை பார்வையிட்டவர்தான் இந்த ஜெயலலிதா. வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றார். அதுவும் முறையாக வழங்கப்படவில்லை.
இப்படி மனிதபிமானமே இல்லாமல் மக்களை நடத்துபவரை பொதுமக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. காணொலிக் காட்சியாக இருந்த அரசு கடந்த ஓராண்டில் ஸ்டிக்கர் ஆட்சிக்கு மாறியதுதான் சாதனை.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ரேசன் கடைகளில் எந்தப் பொருள்களும் கிடைப்பதில்லை. ரேசன் அட்டை கூட வழங்கப்படவில்லை.
இதனால் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர் விண்ணப்பித்த 15 நாள்களில் ரேசன் கார்டுகள் ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கப்படும். பொருள்கள் சரியான எடை அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்ய பொட்டலங்களில் (பாக்கெட்கள்) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். மறைமலை நகர், செங்கல்பட்டு பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.
திருப்போரூர்:
புதுவை, நைனார்மண்டபம் பகுதியைச்சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சுமிதா (வயது 27).
பி.டி.எஸ் படித்து விட்டு திருப்போரூரை அடுத்த நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் டாக்டராக பணி புரிந்து வந்தார்.
கேளம்பாக்கத்தில் தங்கி இருந்த அவர் வீட்டிற்கு அருகிலேயே கிளினிக்கும் வைத்து நடத்தி வந்தார். நேற்று இரவு சுமிதா வீட்டில் இறந்து கிடப்பதாக புதுவையில் உள்ள தந்தை சரவணனுக்கு தகவல் வந்தது.
இதுபற்றி அவர் தனது நண்பர் மூலம் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று தரையில் விழுந்து கிடந்த சுமிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த மின் விசிறியில் கயிறு ஒன்று தொங்கி கொண்டு இருந்தது.
போலீஸ் விசாரணையில் கேளம்பாக்கத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கும் நபர் ஒருவர் அடிக்கடி சுமிதாவுடன் பேசுவதும், அவரும் அடிக்கடி அந்த ஓட் டலுக்கு சாப்பிட செல்வதும் தெரியவந்தது.
அந்த நபரின் செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுமிதா சாவில் மர்மம் நீடிக்கிறது. அவர் கொலைசெய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டாக்டருக்கும் ஓட்டல் ஊழியருக்குமான தொடர்பு என்ன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக ஓட்டல் ஊழியரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆலந்தூர்:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்லும் வழியில் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மெதுவாக செயல்படுகிறது. கரூரில் முக்கிய பிரமுகர் ஒருவரின் குடோனில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அரசு அதிகாரிகள், தலைமை செயலாளர், ஆகியோர் மூடி மறைக்க முயலுகின்றனர்.
இந்த விவகாரத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் தேர்தல் கமிஷன் இருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக உளவுத்துறை செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்துடன் உளவுத்துறையும் இணைந்து இவ்வாறு செயல்படுகிறது.
காவல் துறையில் சில அதிகாரிகளும், அதற்கு பக்க பலமாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும்.
தவறு செய்பவர்கள் மீது தேர்தலுக்கு பிறகு ஆட்சி அமைந்ததும் கலைஞர் நடவடிக்கை எடுப்பார்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனர். தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நான் 27–ந்தேதி கொளத்தூர் தொகுதியில் மனு தாக்கல் செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழனி தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
கச்சிப்பட்டு பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனி கொளுத்தும் வெயிலில் வீடுவீடாக சென்று பெண்களிடம் அ.தி.மு.க.அரசின் சாதனைகளை கூறி வாக்குசேகரித்தார்.அவருடன் மொளச்சூர் பெருமாள் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் செந்தில் ராஜன், பொதுகுழு உறுப்பினர் எழுச்சூர் ராமச்சந்திரன், ஒன்றியகுழு துணை தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் பாபு, ஒன்றிய இணை செயலாளர் தமிழ் செல்வி முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, நிர்வாகிகள் சுப்புராயன், தங்கராஜன், இளங்கோவன், முன்னாள் சேர்மன் பிள்ளை பாக்கம் மூர்த்தி உள்பட பலர் சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இசை கச்சேரி நடத்தி வருகிறார். இவரது மனைவி சித்ரா (29). அருகில் உள்ள இவர்களது மற்றொரு வீட்டில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த வித்யா சாகர் (34). அவரது மனைவி ஸ்ரீஜா (29). ஆகியோர் குடியிருந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அன்று பிரபாகர் கச்சேரிக்காக வெளியூர் சென்றிருந்தார். அப்போது தனியாக வீட்டில் இருந்த சித்ராவுக்கு வித்யா சாகரும் அவரது மனைவி ஸ்ரீஜாவும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
பின்னர் அவர் அணிந்திருந்த 11/2 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ. 4500 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.இது தொடர்பாக பாலு செட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பூரில் பதுங்கி இருந்த வித்யாசாகர், ஸ்ரீஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம்-2 ல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது வித்யா சாகர் இறந்து விட்டார்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி ஸ்ரீஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உள்ளார்.
மேல்மருவத்தூர்:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 15–ந்தேதி மதுரையில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
திறந்த வெனில் நின்று பேசியபடி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திடீரென சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.
மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரசாரத்தை இன்று காஞ்சீபுரத்தில் நிறைவு செய்கிறார்.
மதியம் 3 மணிக்கு செய்யூர் தொகுதிக்குட்பட்ட சோத்துபாக்கம், 4 மணிக்கு மதுராந்தகம் தேரடி, அதன்பின் உத்திரமேரூர் தொகுதி, காஞ்சீபுரம் தேரடி, இரவு 7.30 மணிக்கு கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பு (செங்கல்பட்டு தொகுதி), இரவு 9 மணிக்கு திருப்போரூர் – இல்லிலூர் சாலை சந்திப்பு (திருப்போரூர் தொகுதி) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை வேனில் வந்த மு.க.ஸ்டாலின் அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே வேனை நிறுத்தி விட்டு இறங்கினார்.
பின்னர் சாலையில் நடந்து சென்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். திடீரென மு.க. ஸ்டாலின் ரோட்டில் நடந்து செல்வதை பார்த்த பொது மக்கள் அவரிடம் கை குலுக்கினர்.
பஜார் பகுதிக்கு மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கடையாக சென்று வியாபாரிகளிடம் தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆப்பிள் பழம், குளிர்பானம், இளநீர் ஆகியவை வியாபாரிகள் கொடுத்தனர். அதை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.
இந்த திடீர் நடை பிரசாரத்தின்போது கூட்டணி கட்சியினரையும் சந்தித்து பேசினார்.
அதன்பின் அவர் மேல்மருவத்தூர் புறப்பட்டு சென்றார். மு.க.ஸ்டாலின் தனது 2–வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.
செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, நகர செயலாளர் ஜெ.சண்முகம் தலைமையில் சிங்கபெருமாள் கோவிலில் நடைபெற்றது.
காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனனை அறிமுகப்படுத்தி பேசியதாவது:–
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் ஆப்பூர் ஊராட்சியில் இரண்டுமுறை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்று அப்பகுதியில் சிறப்பாக மக்களுக்கு பணியாற்றி வருகிறார். ஒன்றியத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் ஆங்காங்கே தி.மு.க. சின்னமான உதயசூரியன் மற்றும் வேட்பாளர் பெயரை எழுத வேண்டும். காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்.
மகளிர் மற்றும் இளைஞர்களை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் நிலவுவதால் சுமார் 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வரலட்சுமி மதுசூதனன் வெற்றிப்பெற செய்ய வேண்டும். அவரது வெற்றி உறுதி என்று கூறினார்.






