என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    விமான நிலையம் அருகே நடுரோட்டில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    நெய்வேலியை சேர்ந்தவர் முகமது ஜமாலுதீன் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் அடையாறில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற உறவினர்கள் 3 பேருடன் இன்று காலை காரில் வந்தார்.

    விமான நிலையம் அருகே பரங்கிமலை, சிமெண்ட் ரோடு சிக்னலில் வந்த போது திடீரென கார் தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த முகமது ஜமாலுதீன் உள்பட 4 பேரும் உடனடியாக காரில் இருந்து வெளியே வந்தனர். பரங்கிமலை தீயணைப்பு வீரர்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர்.
    செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தியதாக 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    திருத்தணியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவரது கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் செங்கல்பட்டு டவுன் பெரிய நத்தத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர்.

    2 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செங்கல்பட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த 28–ந் தேதி ஆண்ட்ரூஸ் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது மகேஸ்வரியை காணவில்லை.

    இது குறித்து ஆண்ட்ரூஸ் செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் மகேஸ்வரி செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் அருகே உள்ள காட்டு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று மகேஸ்வரியை மீட்டனர்.

    அவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இந்த கடத்தல் தொடர்பாக செங்கல்பட்டு பெரிய நத்தத்தை சேர்ந்த கார்த்திக், அண்ணாதுரை, தினேஷ், சந்துரு, பூ பாலன் ஆகிய 5 பேர் கைது செய்ப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகேஸ்வரியை கடத்தியது அவரது உயிர் தோழி கவுரி என்று தெரிய வந்தது.

    மகேஸ்வரி 2–வது திருமணம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை. அதனால் நண்பர்கள் கார்த்திக், அண்ணாதுரை, தினேஷ், சந்துரு, பூ பாலன் ஆகிய 5 பேர் மூலம் மகேஸ்வரியை கடத்தி உள்ளார்.

    கைது செய்யப்பட்ட 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கவுரியை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்களை தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    காஞ்சீபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் காஞ்சீபுரம் அடுத்த காரப்பேட்டை பல்கலைகழக பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது.

    மற்ற தொகுதிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்கள் குறித்த விவரம் வருமாறு:

    சோழிங்கநல்லூர் – முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேடவாக்கம் சாலை, சோழிங்கநல்லூர்.

    ஆலந்தூர் , பல்லாவரம் – எம்.ஐ.டி.கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை.

    தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா தேசிய மேல் நிலைப்பள்ளி, சேலையூர், தாம்பரம்.

    செங்கல்பட்டு, திருப்போரூர் – ஆசான் மெமோரியல் பொறியியல் கல்லூரி, தண்டரை, திருப்போரூர்.

    செய்யூர், மதுராந்தகம் – சௌபாக்கியா சௌகர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம்.
    தொழிலாளர்களின் கோரிக்கையான வைப்பு நிதிக்கான வட்டி உயர்த்தப்பட்டு உள்ளதாக பண்டாரு தத்தாத்ரேயா பேட்டி அளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தி தரவேண்டும் என தொழிலாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் இதற்கான வட்டியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறி வந்தது. இது பற்றி மத்திய நிதி அமைச்சகத்திடம் பேசி தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டியை 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தொழிலாளர்கள் நலன் காக்கும் அரசு. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று பல சலுகைகளை நிறைவேற்றி கொடுத்து உள்ளது. இதனுடைய தாக்கம் தமிழகம், கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரம்- திருவள்ளூர் மாவட்டத்தில் 256 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான இரா.கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 29ம் தேதியுடன் முடிவடைந்தது. மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மொத்தம் 315 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    வேட்புமனு மீது பரிசீலனை நேற்று நடந்தது. அந்த பரிசீலனைபடி மொத்தம் 169 வேட்பு மனுக்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 146 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யபட்ட விபரம் வருமாறு (அடைப்புக்குள் மொத்த வேட்பு மனுக்கள்):–

    சோழிங்கநல்லூர்– 15 வேட்பு மனுக்கள் தள்ளுபடி (31)

    ஆலந்தூர் – 28 (41)

    ஸ்ரீபெரும்புதூர் – 14 (30)

    பல்லாவரம் – 16 (33)

    தாம்பரம் – 19 (39)

    செங்கல்பட்டு – 14 (31)

    திருப்போரூர் – 6 (18)

    செய்யூர் (தனி) – 6 (19)

    மதுராந்தகம் (தனி) – 6 (21)

    உத்திரமேரூர் – 9 (24)

    காஞ்சிபுரம் –13 (28).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் போட்டியிட 267 ஆண்கள், 28 பெண்கள் உள்பட 295 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இறுதியில் 110 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 185 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. காஞ்சிபுரம்– திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 21 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 256 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர், ஏப்.30–

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூரை சேர்ந் தவர் குட்டி என்ற வெங் கடேசன். அ.தி.மு.க.வில் ஒன்றியக்குழு தலைவ ராக பதவி வகித்து வந்தார். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மனா கவும் இருந்தார்.

    கடந்த 6 மாதங் களுக்கு முன்பு வெங்கடேசனிடம் இருந்து அ.தி.மு.க. ஒன்றிய குழு தலைவர் பதவி பறிக்கப் பட்டது. இதையடுத்து அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். கடந்த 27–ந் தேதி காரில் வெங்கடேசன் சுங்குவார் சத்திரத்துக்கு சென்றார்.

    சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலம் என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்ற வெங்கடேசனை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியால் சரமாரி யாக குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.

    பட்டப் பகலில் நடந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் பா.ஜன தா பிரமுகர் வெங்கடேசன் கொலை தொடர்பாக ஸ்ரீபெரும் புதூர் அடுத்த கிளாய் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன், செம்பரம் பாக்கம் பகுதியை சேர்ந்த இன்பராஜன் ஆகிய 2 பேர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோர்ட் டில் நேற்று சரண் அடைந் தனர். ‘‘ அவர்களை சோலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை வந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    ஆலந்தூர்:

    அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருப்பார்கள். அதற்கு ஏற்ப மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை ஆட்சியில் அமர்த்துவார்கள்.

    மோடி அலைப் பற்றி பேசுகிறீர்கள். தமிழ்நாட்டில் மோடி அலையை எதிர்பார்க்க முடியாது. மத்தியில் பிரதமர் மோடி நல்ல ஆட்சி செய்து வருகிறார்.

    தொழில் துறையை பொருத்தவரை தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் வந்தபோது வெள்ளத்தால் சிறு தொழிலில் பாதிப்பு அடைந்தது.

    தேர்தல் வந்ததால் சில தொழில் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்த திட்டம் தொடரும்.

    என்னை பொறுத்தவரை எனது துறை திட்டங்கள் குறித்து சந்தித்து பேச முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு கொடுத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீபெரும்புதூர் பாரதிய ஜனதா பிரமுகர் கொலையில் 4 பேர் சிக்கி உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணூர்குட்டி என்கிற வெங்கடேசன் (50). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக இருந்தார்.

    நேற்று மதியம் அவர் சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கிய போது வெங்கடேசனை 6 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். கார் டிரைவர் ராமன் தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக 4 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடந்து வருகிறது. கார் டிரைவர் ராமனிடமும் விசாரணை நடக்கிறது.

    கடந்த 2012–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பி.பி.ஜி. குமரன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் வெங்கடேசன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    எனவே இந்த கொலைக்கு பழிக்கு பழியாக வெங்கடேசன் தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு தனியார் கம்பெனி நிர்வாகிகளை மிரட்டியதாக வெங்கடேசன் மீது சுங்குவார் சத்திரம் போலீசில் வழக்கும் உள்ளது. அவர் தனியார் கம்பெனிகளில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

    தொழில் போட்டியில் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரே மாதத்தில் அரிய வகை சிங்கவால் குரங்குகள் 2 குட்டிகளை ஈன்றுள்ளன.
    வண்டலூர்:

    சிங்கத்தின் வாலின் நுனியில் கொத்தாக முடியிருப்பது போல் உள்ள குரங்கு, சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்படுகிறது. இக்குரங்கு பெரும்பாலும் சோலைக்காடுகளில் காணப்படுவதால் சோலை மந்தி என்றும் அழைக்கப்படுகிறது. சிங்கத்தின் பிடரியை ஒத்த முகம், வால், கருமை நிற உடல், வெளிரிய பிடரி ஆகியவற்றால் பெரும்பான்மை பார்வையாளர்களை கவரும் இந்த உயிரினம் அரிதான மற்றும் அழிந்து வரும் ஓரிட உயிரினம் ஆகும்.

    உலகிலேயே மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மட்டும் இக்குரங்கு காணப்படுகிறது. இக்குரங்குகளின் வாழ்விடங்களான பசுமை மாறாக்காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்கள் வளர்க்கப்படுவதால் இக்குரங்குகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது.

    எனவே இந்த உயிரினத்தை அழிவில் இருந்து காக்க அடைப்பிட இனப்பெருக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இனப்பெருக்க ஒருங்கிணைப்பு பூங்காவாக மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்டது. மேலும், மைசூரு, திருவனந்தபுரம் பூங்காக்கள் ‘‘இனப்பெருக்க பங்கேற்பு பூங்காவாக’’ செயல்படுகின்றன.

    இத்திட்டப்படி பார்வையாளர் வருகை புரியாத இடத்தில், இயற்கையான காட்டுப்பகுதியில் 2 அடைப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண், இரண்டு பெண் கொண்ட 2 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு அடைப்பிடங்களில் விடப்பட்டன. திறந்தவெளி அடைப்பிடத்தில் இயற்கையாக வளர்ந்துள்ள மரங்களுடன் ஆல், அரசு, மா, பலா, வேம்பு, நெல்லி, இலுப்பை, கொடுக்காப்புளி போன்ற மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

    விலங்கு இல்லத்தில் குரங்குகள் நடமாடுவதற்கு தகுந்தவாறு மரக்கிளைகள், கயிறுகள், பலகைகள் ஆகியவற்றை கொண்டு சுற்றுச்சூழல் வளமைப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டன. இதனால் இயற்கையான சூழ்நிலையை ஒத்த வாழ்விடம் அமையப்பெற்றதால் சிங்கவால் குரங்குகள் விரைவாக இனப்பெருக்கம் செய்கிறது.

    இத்திட்டத்தின் கீழ் முதன் முதலாக வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வால்பாறை சோலைக்காடுகளிலிருந்து 1990-ம் ஆண்டு ஒரு சிங்கவால் ஆண் குரங்கும், 3 சிங்கவால் பெண் குரங்குகளும், 1999-ம் ஆண்டு ஒரு சிங்கவால் பெண் குரங்கும் கொண்டு வரப்பட்டது. இந்த குரங்குகளும், அதன் வழித்தோன்றல்களும் இனப்பெருக்கம் செய்து இதுவரை 50 குட்டிகளை ஈன்றுள்ளன. இங்கு பிறந்த சிங்கவால் குரங்குகள் விலங்குகள் பரிமாற்ற முறையில் கவுகாத்தி, சிம்லா, டெல்லி, திருவனந்தபுரம், மைசூரு, ஐதராபாத், பரோடா, கிண்டி ஆகிய இடங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மறைவிட இனப்பெருக்க மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அஞ்சலி என்ற 7 வயது பெண் சிங்கவால் குரங்கும், அசோக் என்ற 9 வயது ஆண் சிங்கவால் குரங்கும் இணை சேர்ந்து கடந்த மாதம் 14-ந் தேதி ஒரு குட்டி ஈன்றது. இதே போல பார்வையாளர்கள் பார்வையிடும் இருப்பிடத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ராகவி என்ற 7 வயது பெண் சிங்கவால் குரங்கும், ரவி என்ற 9 வயது ஆண் சிங்கவால் குரங்கும் இணை சேர்ந்து கடந்த மாதம் 26-ந் தேதி ஒரு குட்டியை ஈன்றது.

    ஒரே மாதத்தில் பிறந்த இந்த 2 குட்டிகளும் வளர்ந்த பிறகே ஆணா?, பெண்ணா? என தெரியவரும். இவைகளையும் சேர்த்து வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கை தற்போது 23 ஆக உயர்ந்துள்ளது.

    இத்தகவலை பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    ×