என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வெட்டிக்கொலை
    X

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வெட்டிக்கொலை

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மண்ணூர் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணூர் குட்டி என்கிற வெங்கடேசன் (வயது 50). இவர் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும் பா.ஜ.க. பிரமுகராகவும் இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பி.பி.ஜி.குமரன் கொலை வழக்கில் மண்ணூர் குட்டியை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

    அப்போது மண்ணூர் குட்டி ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவராகவும், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளராகவும் இருந்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மண்ணூர் குட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ஜாமீனில் வெளியே வந்த மண்ணூர் குட்டி நேற்று மதியம் 12 மணி அளவில் காரில் காஞ்சீபுரத்தை அடுத்த சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்தார். அவரது டிரைவர் காரை ஓட்டி வந்தார். திருமங்கலம் என்ற இடத்தில் அவர் காரில் இருந்து இறங்கினார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மண்ணூர் குட்டியை கத்தியால் சரமாரியாக தலை, கழுத்து, மார்பு போன்ற இடங்களில் வெட்டினர். இதில் மண்ணூர் குட்டி அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. கொலை நடந்ததும் மண்ணூர் குட்டியின் கார் டிரைவரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கொலை செய்யப்பட்ட மண்ணூர் குட்டியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான மண்ணூர் குட்டியை பட்டப்பகலில் கொலை செய்த கும்பலை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி 3 தனி போலீஸ் படைகளை அமைத்துள்ளார்.

    கொலையாளிகளை பிடிப்பதற்காக சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×