என் மலர்
செய்திகள்

அச்சரப்பாக்கம் பஜாரில் ஓட்டு கேட்ட மு.க.ஸ்டாலினுக்கு பழம், இளநீர் கொடுத்த வியாபாரிகள்
மேல்மருவத்தூர்:
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 15–ந்தேதி மதுரையில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
திறந்த வெனில் நின்று பேசியபடி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். திடீரென சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.
மு.க.ஸ்டாலின் தனது முதல் கட்ட பிரசாரத்தை இன்று காஞ்சீபுரத்தில் நிறைவு செய்கிறார்.
மதியம் 3 மணிக்கு செய்யூர் தொகுதிக்குட்பட்ட சோத்துபாக்கம், 4 மணிக்கு மதுராந்தகம் தேரடி, அதன்பின் உத்திரமேரூர் தொகுதி, காஞ்சீபுரம் தேரடி, இரவு 7.30 மணிக்கு கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பு (செங்கல்பட்டு தொகுதி), இரவு 9 மணிக்கு திருப்போரூர் – இல்லிலூர் சாலை சந்திப்பு (திருப்போரூர் தொகுதி) ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக இன்று காலை வேனில் வந்த மு.க.ஸ்டாலின் அச்சரப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம் எதிரே வேனை நிறுத்தி விட்டு இறங்கினார்.
பின்னர் சாலையில் நடந்து சென்றபடி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். திடீரென மு.க. ஸ்டாலின் ரோட்டில் நடந்து செல்வதை பார்த்த பொது மக்கள் அவரிடம் கை குலுக்கினர்.
பஜார் பகுதிக்கு மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கடையாக சென்று வியாபாரிகளிடம் தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆப்பிள் பழம், குளிர்பானம், இளநீர் ஆகியவை வியாபாரிகள் கொடுத்தனர். அதை மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார்.
இந்த திடீர் நடை பிரசாரத்தின்போது கூட்டணி கட்சியினரையும் சந்தித்து பேசினார்.
அதன்பின் அவர் மேல்மருவத்தூர் புறப்பட்டு சென்றார். மு.க.ஸ்டாலின் தனது 2–வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறார்.






