என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமியிடம் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 9 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது.

    இந்நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தா.மோ.அன்பரசன், சுந்தர், எழிலரசன், புகழேந்தி, அரசு, எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கஜலட்சுமியை சந்தித்து மக்கள் பிரச்சனையை கையாள்வது குறித்தும், தொகுதி மேம்பாட்டு நிதியினை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் தொகுதிவாரியாக மூன்று அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.

    காஞ்சீபுரம் அருகே பாலாற்று பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் வக்கீல் பலியானார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வேதாசலம் நகரைச் சேர்ந்தவர் தண்டபாணி (40) வக்கீல். இவர் நண்பர்கள் 3 பேருடன் திண்டிவனத்திலிருந்து காஞ்சீபுரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.

    காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டினை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே வக்கீல் தண்டபாணி பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். உயிரிழந்த தண்டபாணிக்கு நேற்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
    மடிப்பாக்கத்தில் விமான நிறுவன ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கம், சதாசிவம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரகுநாதன். அண்ணா சாலையில் உள்ள தனியார் ஏர் லைன்ஸ் விமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்று விட்டனர். ரகுநாதன் மட்டும் வீட்டில் இருந்தார்.

    நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இரவு திரும்பி வந்த போது ஜன்னல் உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 15 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    ரகுநாதன் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர கொள்ளை செயலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இது குறித்து மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலையூர் அருகே சாலையில் நடந்து வந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 10பவுன் நகையை பறித்து சென்றனர்.
    தாம்பரம்:

    திருநெல்வேலியை சேர்ந்தவர் கலாவதி (வயது65). இவரது மகள் ராஜியின் வீடு சேலையூர் அருகேயுள்ள சந்தோஷபுரத்தில் உள்ளது. மகளை பார்ப்பதற்காக கலாவதி கடந்த வாரம் வந்தார்.

    இன்று காலையில் அவர் பால் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கலாவதி அணிந்திருந்த தாலி செயினை பறித்தனர். கலாவதி செயினை இறுக பிடித்துக் கொண்டார். இதனால் கொள்ளையர்கள் பாதி செயினை மட்டும் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். கொள்ளை போன செயின் 10 பவுன் ஆகும்.

    இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    தினமும் மது குடித்துவிட்டு வந்து மகளை சித்ரவதை செய்ததால் தலையில் கல்லை போட்டு மருமகனை கொலை செய்த மாமியார் போலீசில் சரணடைந்தார்.
    காஞ்சீபுரம்:

    சின்ன காஞ்சீபுரம் கொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் என்கிற லெப்ட் விநாயகம் (வயது 42). பிரபல ரவுடி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விநாயகம் மீது விஷ்ணு காஞ்சி, சிவகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளன.

    இதில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் தான் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    விநாயகம் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து அடித்து உதைத்தார். இதனால் காமாட்சி தினமும் சித்ரவதையை அனுபவித்து வந்தார். எனவே அவர் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் நீலகண்டர் தெருவில் வசிக்கும் தனது தாய் கீதா வீட்டுக்கு சென்று விட்டார்.

    நேற்று இரவு விநாயகம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை குடும்பம் நடத்த வருமாறு தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டார். அதன்பிறகு போதை அதிகமானதால் அங்கிருந்த திண்ணையிலேயே அவர் படுத்து தூங்கி விட்டார்.

    கணவர் செய்யும் சித்ரவதைகளை தனது தாய் கீதாவிடம் காமாட்சி சொல்லி அழுதார். இதனால் கீதாவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கீதா கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது விநாயகம் திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று ஆவேசம் அடைந்த கீதா, தூங்கிக் கொண்டிருந்த மருமகன் விநாயகம் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார்.

    பின்னர் அங்கிருந்து நேராக விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்ரீநாத், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    இன்ஸ்பெக்டர் திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மல் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ராமதுரை (40). சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 26-ந்தேதி ‘பீட்’ பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் போலீஸ் நிலையத்திற்கு வந்த ராமதுரை பைக்கை நிறுத்திவிட்டு சாவியை மறந்து எடுத்து சென்றுவிட்டார்.

    இதனால் அவருக்கு பின்னால் பணியை தொடர வந்தவர் பைக்கை எடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் போலீஸ்காரர் ராமதுரையையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இது தொடர்பான புகார் சேலையூர் உதவி கமிஷனருக்கு தெரியாமல் பரங்கிமலை துணை கமிஷனருக்கு சென்றது. இதுபற்றி உதவி கமிஷனர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரை கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர், பைக் சாவியை எடுத்து சென்ற போலீஸ்காரர் ராமதுரையை சரமாரியாக திட்டினார்.

    இதில் மனவேதனை அடைந்த ராமதுரை அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று மதுவில் விஷம் கலந்து குடித்தார். பின்னர் மயக்க நிலையிலேயே மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு வந்து விஷம் குடித்ததை கூறி மயங்கினார். அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராமதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும் போது சட்டசபை தேர்தலையட்டி சென்னை புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு வட சென்னை பகுதியில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டனர்.

    அவர்கள் இன்னும் இடமாற்றம் செய்யப்படவில்லை. நீண்ட தூரம் பயணம் செய்து பணிக்கு வரும் அதிகாரிகள் அந்த வெறுப்பை அவர்களின் கீழ் பணி செய்யும் போலீஸ் காரர்கள் மீது காட்டுகின்றனர் என்றார்.

    தூசி அருகே கார்–பைக் மோதி தறி தொழிலாளி பலியானார்.

    வெம்பாக்கம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மானாமதி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராஜேஸ் (வயது28). பட்டுத்தறி தொழிலாளி. பட்டுத்தறி கூடத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த 26-ந்தேதி ராஜேஸ் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் தூசி வழியாக புறப்பட்டார்.

    மாங்கால் கூட்ரோடு அருகே வந்த போது எதிரே செய்யாறில் இருந்து வந்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் ராஜேஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து ஏற்பட்டதும் கார் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் ராஜேஸ் நேற்று பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மாகரல் பாலாற்றுப் படுகையில் திருட்டுத்தனமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது காலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, மகேந்திரன், முருகேசன் ஆகிய 3 பேர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய போது பிடிப்பட்டனர். அவர்களைக் கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    படப்பை விஷ்ணு நகரில் போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் மரணமடைந்தார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    திருச்சி காந்திநகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 19). இவர் சென்னை அருகே உள்ள படப்பை விஷ்ணு நகரில் தங்கி இருந்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த அறையில் 30 பேர் தங்கி இருந்தனர்.

    போதை ஊசி பழக்கத்துக்கு வாலிபர் கோவிந்தராஜ் அடிமையானார் என்று கூறப்படுகிறது. அவர் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி இருந்தார். நேற்றும் அவர் வேலைக்கு செல்லவில்லை. வீட்டில் படுத்து தூங்கினார்.

    அறையில் தங்கியிருந்த நண்பர்கள் அவரை தட்டி எழுப்பினர். அவர் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கோவிந்தராஜ் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.

    காஞ்சிபுரம்:

    அரக்கோணத்தை அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். தனியார் பேருந்து கம்பெனியில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து இருந்தார்.

    அப்போது அப்பகுதி காஞ்சிபுரம்-திருத்தணி சாலையில் சாலையைக் கடக்கும் போது தனியார் கம்பெனி பஸ் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் நாகரீகமான முறையில் வரவேற்பு கிடைத்தது என்று தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்ற விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

    நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாநிலங்களவையில் தி.மு.க. தமிழக மக்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. அதில் எப்போதும் தவறியதில்லை. தொடர்ந்து அதை செய்வோம்.

    தமிழகத்தில் முதல்- அமைச்சர் பதவி ஏற்பு விழாவை விட மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் எனக்கு நாகரீகமான முறையில் வரவேற்பு கிடைத்தது.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் நடுவரிசையில் அமர வைக்கப்பட்டதற்கு ஜெயலலிதா அளித்த விளக்கமே சிறிய மாறுதல்தான்.

    தற்போதுதான் அவர் பதவி ஏற்று இருக்கிறார். அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், பொறுத்திருந்து பார்ப்போம்.

    சட்டசபையில் பிரதான வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. வந்திருக்கிறது. தலைவரும், தளபதியும் சட்டமன்றத்தில் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    இவ்வாறு கனிமொழி கூறினார்.
    மண்ணிவாக்கத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் குமரன்நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    நேற்றுமுன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளனர். பணத்தை எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தின் ஒரு பகுதியை உடைத்து சாலையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன், ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடைக்கப்பட்ட ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் அதில் உள்ள பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை, அந்த எந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பற்றி வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பிறகு தெரியவரும். ஆனால் பணம் அப்படியே இருப்பதால் எந்திரத்தில் இருந்து பணம் கொள்ளை போகவில்லை என தெரிகிறது.

    இந்த மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தால் தான் எத்¢¢தனை பேர் இந்த எந்திரத்தை உடைத்தார்கள் என்பது தெரியவரும். விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×