என் மலர்
காஞ்சிபுரம்
குரோம்பேட்டை ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் ரெமிஜியஸ் (24). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர் அசோக்சமாஜூடன் மது அருந்தினார்.
பின்னர் அசோக்குமாரை தனது வீட்டுக்கு ரெமிஜியஸ் அழைத்து சென்றார். அங்கு இருவரும் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரெமிஜியஸ் செல்போனில் அழைப்பு ஒன்று வந்தது.
அவர் மாடிக்கு சென்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குடிபோதையில் மாடியின் தடுப்பு சுவர் மேல் பகுதியில் படுத்து தூங்கி விட்டார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் நள்ளிரவில் கீழே விழுந்ததால் யாருக்கும் தெரியவில்லை. இன்று காலைதான் அவர் பலியானது தெரிந்தது.
இது குறித்து சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரெமிஜியஸ் உடலை கைப்பற்றினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 11.15 மணியளவில் திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
மின்சார ரெயில்கள் அனைத்தும் அந்தந்த ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. ஆனால் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி வழக்கம் போல் மின்சார ரெயில் இயக்கப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து சிக்னல் கோளாறை சரிசெய்தனர். இதை தொடர்ந்து 12 மணிக்கு மேல் ரெயில் சேவை சீரானது.
தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் ஜி. எஸ்.டி. சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.
தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர் சென்றிருந்தவர்கள் இன்று காலை சென்னை நோக்கி ஏராளமான வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.
பெருங்களத்தூர் அருகே தனியார் ஆம்னி பஸ் வந்த போது முன்னால் சென்ற கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் மீது திடீரென மோதியது. இந்த வேகத்தில் அந்த வேன் முன்னால் நின்ற தஞ்சாவூரில் இருந்து வந்த அரசு பஸ் மீது மோதி நின்றது.
மேலும் அந்த அரசு பஸ் முன்னால் நின்ற கார் மீது மோதியது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஆம்னி பஸ்சுக்கும், அரசு பஸ்சுக்கும் இடையில் வேன் சிக்கி இருந்தது. இதில் அதில் இருந்த பெண்கள் உள்பட சுமார் 19 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயம் அடைந்தவர்களுக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த அனுப்பிரியா, சித்ரா, கவுரி, கவிதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் ஜி.எஸ்..டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் சென்னை நோக்கி வந்த அனைத்து வாகனங்களும் தாமதமாக வந்து சேர்ந்தன.
மத்திய மந்திரி மேனகா காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
பெண்களுக்கு மகப்பேறுகால விடுப்பு தொடர்பான மசோதா மேல்-சபையில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாதது வருத்தமளிக்கிறது. மேலும் ஒரு நாள் பாராளுமன்றம் நீடிக்கப்பட்டு இருந்தால் இந்த மசோதா நிறைவேறி இருக்கலாம். குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேறும்.
நாட்டில் யானைகள் இறப்பு அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. தற்போது நாட்டில் 20 ஆயிரம் யானைகள் தான் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. தமிழ்நாடு, அசாம், கேரளா போன்ற மாநிலங்களில் யானைகள் அதிகமாக உள்ளது. யானைகள் அடிக்கடி ரெயில்களில் அடிபட்டு இறக்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு யானை இப்படி இறப்பதாக தகவல். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
வனப்பகுதிகளில் யானைகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் ரெயில்களின் வேகத்தை குறைத்து இயக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்கள் அழிந்துவிட்டன. இதனால் யானைகள் வழிதவறிச் சென்று சிக்கி இறந்துவிடுகின்றன. வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் வழித்தடங்களை மத்திய-மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்த தடை அமலில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரியமான, வரலாற்று சிறப்பு மிக்க விளையாட்டு தான். அதேநேரம் அபாயகரமான, ஆபத்தான ஒரு விளையாட்டு.
தமிழகத்தில் உள்ள பா.ஜனதா கட்சி தலைவர்கள் திறமைமிக்க அனுபவம் கொண்டவர்கள். தமிழகத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. அதை செய்யாமல் அரசியல் காரணங்களுக்காக ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வதை அவர்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெருங்குடி பர்மா காலனியில் தனியார் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரும் உள்ளது. இதன் அருகே விற்பனைக்கு வரும் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
நேற்று இரவு திடீரென அங்கே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் விற்பனைக்கு இருந்த 450 புதிய மோட்டார் சைக்கிள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.
அந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மற்ற மோட்டார் சைக்கிள்கள் தப்பின. சேதமதிப்பு பல லட்சம் இருக்கும்.
நேற்று இரவு அப்பகுதியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது குறித்தும் துரைபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் மைதானத்தில் தேசிய கொடியை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றி வைத்தார்.
பின்னர் நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் கவுரவித்தார்.
விழாவில் பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் ரூ. 7 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 567 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, வருவாய் அலுவலர் சவுரிராஜன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் ஆர்.டி. சேகர் தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஆணையர் முஜிபுர் ரகுமான், கவுன்சிலர்கள் மனோகரன், ராம மூர்த்தி, சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சுந்தரவல்லி தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, சால்வை அணிவித்து கவுரவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய் துறை, முன்னாள் படை வீரர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மகளிர் திட்டம், தாட்கோ, புதுவாழ்வு திட்டம், வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் மூலம் மொத்தம் 148 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 17 ஆயிரத்து 163 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுந்தரவல்லி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி டி. இளங்கோவன், மாவட்ட போலீஸ் எஸ்.பி சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் (பொறுப்பு) ராதா கிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இதில் ஆணையர் செந்தில்குமரன், பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கம் ஜெயவந்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இங்கு அனுமதி இன்றி குழந்தைகள் தங்கவைக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு 5 குழந்தைகளை, குழந்தைகள் நல குழுமத்தினர் மீட்டனர்.
இந்நிலையில் அதே தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி 9 பள்ளி மாணவிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அந்த மாணவிகளை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாணவிகளை மீட்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார்.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் மணிகண்டன் தலைமையில் குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜாகீருதீன் முகமது, தாம்பரம் தாசில்தார் கார்த்திகேயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டேவிட்பால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் மற்றும் போலீசார் தொண்டு நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 9 மாணவிகளை மீட்டனர். அவர்கள் அனைவரும் சேலையூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவிகளை அங்கிருந்து மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்கவைத்து அதே பள்ளியில் படிப்பை தொடர குழந்தைகள் நல குழுமத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இது குறித்து குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜாகீருதீன் முகமது கூறுகையில், தனியார் தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்கவைக்கப்பட்டு இருந்த 9 மாணவிகளையும் ஒப்படைக்க கோரி நோட்டீசு அனுப்பினோம். அதை எதிர்த்து தொண்டு நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் தடை பெற்றனர். பின்னர் குழந்தைகள் நல குழுமம் ஐகோர்ட்டில் தடையை நீக்கி உத்தரவு பெற்றது. மீட்கப்பட்ட மாணவிகள் அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு அதே பள்ளியிலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றார்.
நேபாளத்தை சேர்ந்தவர் பதூர் பகதூர் (வயது 25). இவர் செம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் காவலாளி உள்பட பல்வேறு வேலைகளை பார்த்து வந்தார். பதூர் பகதூர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பரை பார்ப்பதற்காக செம்பாக்கம் பகுதிக்கு சென்றார். வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ராஜகீழ்ப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பதூர் பகதூர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் பதூர் பகதூர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய மர்மநபரை தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே, எச்சூர் கூட்ரோட்டில் மாமல்லபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் அவலூர் பேட்டையில் இருந்து வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து வேனில் இருந்த திரவியத்தை போலீசார் கைது செய்தனர். மினி வேன், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சாலமங்கலத்தில் தாம்பரம் - வாலாஜாபாத் செல்லும் சாலையில் விரிவாக்கப் பணி நடந்து வருகிறது.
இதற்காக சாலையோரம் கழிவுநீர், மழை நீர் செல்ல கால்வாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இன்று காலை கழிவு நீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். கால்வாயில் இருந்த கம்பிகள் அவரது உடலை குத்தி கிழித்து இருந்தது.
தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வாலிபர் உடலை கைப்பற்றினர். அவரது சட்டை பையில் தனியார் காவலாளி நிறுவன அடையாள அட்டை இருந்தது.
அதில் ராஜேந்திரகாலத்தி என்ற பெயர் இருந்தது. வாலிபர் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் அவரை கொலை செய்து கால்வாயில் வீசி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரு நகரங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்கள் விடுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
விடுதிகளில் தங்கவரும் உள்நாட்டவர், வெளி நாட்டவர் அனைவரிடமும் முகவரி அடையாளம், பாஸ்போட், குடியுரிமை, விசா என அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர்தான் அறை கொடுக்க வேண்டும்.
சந்தேகத்துக்கு இடமான நபர்கள் நடமாட்டம் தெரிந்தால் போலீசுக்கு தகவல் தரவேண்டும், 24 மணி நேரமும் உள்ளே வருவோர், வெளியே செல் வோரை கேமரா மூலம் காவலாளிகள் கண்காணித்து அதை கம்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் ஹோட்டல் நிர்வாகங்களுக்கு அறிவுறுத்திஉள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் சந்கேப்படும் வாகனங்களை போலீசார் நிறுத்தி தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.
மாமல்லபுரம் கடற்கரை அருகே கல்பாக்கம் அணு உலை இருப்பதால் தீவிரவாதிகள் நோட்டம் ஏதும் உள்ளதா? என்று கடலோர காவல்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் மீனவர்களுடன் கடலுக்குள் சென்று தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கேளம்பாக்கத்தை அடுத்த கோவளம் நாச்சியார்குளம் அருகில் நேற்று முன்தினம் இரவு காரில் வெடிகுண்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த சுரேஷ், அப்துல் சையது, சாகும் அமீது, அன்சாரி, ஆசிக் ரகுமான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கார், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. வெடி குண்டை சுரேஷ், பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி குளிர்சாதன பஸ்சில் எடுத்து வந்ததும் தெரிந்தது. கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கியூ பிரிவு போலீசார் விசாரணையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே அவர்களுக்கு நாட்டு வெடி குண்டை வாங்கி கொடுத்தது புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக இவர்களுக்கு உதவிய திருமுல்லைவாயல், சோழவரத்தை சேர்ந்த 3 பேரும் சிக்கி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதில் முக்கிய பிரமுகர் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஒருவரின் உத்தரவுப்படி வெடிகுண்டுடன் காரில் வந்ததாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து சிறையில் உள்ள குற்றவாளியிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதன் பின்னரே இந்த வழக்கில் உள்ள மர்மங்கள் விலகும்.
பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் கீரப்பாக்கத்தை அடுத்த முருகமங்கலத்தில் உள்ள கல்குவாரியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கைதானவர்களை இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள் என்று தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.






