என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்கவைக்கப்பட்ட 9 பள்ளி மாணவிகள் மீட்பு
    X

    தனியார் தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்கவைக்கப்பட்ட 9 பள்ளி மாணவிகள் மீட்பு

    சேலையூர் அருகே தனியார் தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்கவைக்கப்பட்டு இருந்த 9 பள்ளி மாணவிகளை குழந்தைகள் நல குழுமத்தினர் மீட்டனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த சேலையூர் அருகே மாடம்பாக்கம் ஜெயவந்புரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் உள்ளது. இங்கு அனுமதி இன்றி குழந்தைகள் தங்கவைக்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து சில மாதங்களுக்கு முன்பு 5 குழந்தைகளை, குழந்தைகள் நல குழுமத்தினர் மீட்டனர்.

    இந்நிலையில் அதே தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி 9 பள்ளி மாணவிகள் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். அந்த மாணவிகளை மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த மாணவிகளை மீட்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார்.

    அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் மணிகண்டன் தலைமையில் குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜாகீருதீன் முகமது, தாம்பரம் தாசில்தார் கார்த்திகேயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டேவிட்பால், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் மற்றும் போலீசார் தொண்டு நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு தங்கவைக்கப்பட்டிருந்த 9 மாணவிகளை மீட்டனர். அவர்கள் அனைவரும் சேலையூரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவிகளை அங்கிருந்து மீட்டு அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்கவைத்து அதே பள்ளியில் படிப்பை தொடர குழந்தைகள் நல குழுமத்தினர் ஏற்பாடு செய்தனர்.

    இது குறித்து குழந்தைகள் நல குழும உறுப்பினர் ஜாகீருதீன் முகமது கூறுகையில், தனியார் தொண்டு நிறுவனத்தில் அனுமதி இன்றி தங்கவைக்கப்பட்டு இருந்த 9 மாணவிகளையும் ஒப்படைக்க கோரி நோட்டீசு அனுப்பினோம். அதை எதிர்த்து தொண்டு நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் தடை பெற்றனர். பின்னர் குழந்தைகள் நல குழுமம் ஐகோர்ட்டில் தடையை நீக்கி உத்தரவு பெற்றது. மீட்கப்பட்ட மாணவிகள் அரசு அனுமதி பெற்ற காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு அதே பள்ளியிலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் மீது போலீசில் புகார் செய்யப்படும் என்றார்.

    Next Story
    ×