என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. அதில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சிவகங்கையைச் சேர்ந்த ராயப்பன் ஜோசப்(வயது 45) என்பவரின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 20 கிலோ மயில் தோகைகளை மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு கடத்திச் செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.
அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், ராயப்பன் ஜோசப்பின் விமான பயணத்தை ரத்து செய்தனர். அவரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் இருந்து சவுதிஅரேபியாவுக்கு விமானம் சென்றது. அதில் ஏற வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முகமது அனிபா(38) என்பவரின் சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சூட்கேசின் உள்ளே அவர், ரூ.36 லட்சம் மதிப்புள்ள 18 கிலோ சந்தன கட்டைகளை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், முகமது அனிபாவை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம்:
இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் பிரைட் தொண்டு நிறுவனத்தை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள், பெங்களூரில் உள்ள அகதிகளின் குழந்தைகள் இலங்கையில் தாய்-தந்தையர்களை இழந்த குழந்தைகள் என 6 வயது முதல் 20 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர் மொத்தம் 55 பேர் தங்கி இருந்தனர்.
இவர்கள் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்து வந்தனர்.
இந்த 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜு களில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர்.
இதையொட்டி அவர்கள் 55 பேர்களையும் பள்ளியில் இருந்து நீக்கி வைத்துள்ளனர். முறையான ஆவணம் இல்லாததால் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளனர். இனிமேல் போதிய ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்களை இனிமேல் சேர்க்கமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசார் அச்சிறுப்பாக்கத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரைட் தொண்டு நிறுவன மானேஜர் பேரின்ப நாயகத்திடம் விசாரணை நடந்து வருகிறது. இங்கு மாணவ-மாணவிகள் பாதுகாப்புக்கு இலங்கையை சேர்ந்த 4 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரைட் தொண்டு நிறுவனம் எந்த அடிப்படையில் இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்திருந்தது. இதற்கு அரசு அனுமதி பெற்றிருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். பயணிகளின் உடமைகளை விமான நிலையத்தில் இருந்து விமானம் அருகே கொண்டு செல்வதற்கு பல ஏஜென்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் பயணிகளின் உடமைகளை டிராலியில் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றுவார்கள்.
இந்த நிலையில் பயணிகளிடம் இருந்து தங்கள் உடமைகள் திறக்கப்பட்டு பணம்-பொருட்கள் திருட்டு போய் இருப்பதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் தற்காலிக ஊழியர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் ஜெயபிரகாஷ், ராஜேஷ், மகேஷ், நவீன், சரவணன், வடிவேல், ரஞ்சித், இளங்கோ ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விமான நிலையத்தில் இருந்து பயணிகளின் உடமைகளை கொண்டு செல்லும் இவர்கள் பொருட்களை விமானத்தில் ஏற்றியவுடன் சரியாக பூட்டப்படாத பெட்டி, பைகளை தனியாக எடுத்து அதை திறந்து பணம்-பொருட்களை திருடி உள்ளனர். பின்னர் அதை பங்கு போட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தீவிர கண்காணிப்பு இல்லாதது இவர்களுக்கு சாதகமாக அமைந்து விட்டது.
எனவே விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் உடமைகள் பாதுகாப்பு பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான விலங்குகள், பறவைகள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூங்காவில் குளிர்சாதன வசதி கொண்ட கூண்டில் பராமரிக்கப்பட்டு வந்த இந்திய ராஜநாகம் ஒன்று மர்மமான முறையில் இறந்தது. இதனால் பூங்காவில் இந்திய ராஜநாகம் இல்லாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படும் மிக அரியவகை உயிரினங்களில் ஒன்றான ராஜநாகம் இப்பூங்காவில் காட்சிப்படுத்த வேண்டிய அவசியம் கருதி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விலங்குகள் பரிமாற்ற முறையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிக்குலா உயிரியல் பூங்காவிலிருந்து இரண்டு ஆண் ராஜநாகங்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வந்தது.
இதன் பின்னர் பூங்காவில் வெளிப்புற சூழலில் ராஜநாகத்தை கண்ணாடி வழியாக பார்க்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒரு ஆண் ராஜநாகம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்துவிட்டது.
இதனையடுத்து மற்றொரு ஆண் ராஜநாகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கையினை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜநாகம் இறந்தது குறித்து வண்டலூர் பூங்கா துணை இயக்குனர் சுதாகர் கூறியதாவது:-
கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அரியவகையை சேர்ந்த ராஜநாகம் வளரும் பருவத்தில் இருந்தது. பாம்பு வளரும்போது அதன் தலையில் இருந்து தோல் உரியும். ஆனால் ராஜநாகத்தின் தலையில் இருந்து தோல் உரியாததால் அதன் கண் மற்றும் உடலில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் உணவு உட்கொள்ளவும் முடியாத நிலையினால் ராஜநாகம் இறந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் ஒருவர் கூறும்போது:-
ராஜநாகம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலை கிடையாது. இதன் காரணமாக ஏற்கனவே ஒரு ராஜநாகம் இறந்துவிட்டது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 ராஜநாகங்களில் ஒன்று நேற்று இறந்துவிட்டது. இனிவரும் காலங்களில் பூங்காவில் உள்ள மற்றொரு ராஜநாகத்தை நல்ல முறையில் அது வாழ்வதற்கு ஏற்ப சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். பொதுவாக ராஜநாகங்கள் பசுமைமாறாக் காடுகளில் காட்டாறுகள் மற்றும் நீர் நிலைகளின் அருகில் எப்போதும் குளிர்ச்சியாக உள்ள இடங்களில் வாழும் பழக்கம் கொண்டது.
இந்த வகை பாம்பு சுமார் 15 முதல் 18 அடிவரை வளரக் கூடியவை ஆகும். அதிகபட்சம் 51 முட்டைகள் வரை இட்டு அடைக்காக்கும். பத்து முதல் பதினொரு வாரங்கள் அடைக்காத்த பிறகு 50 செ.மீ. முதல் 52 செ.மீ. வரை நீளமுள்ள குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளாக முல்லைபெரியாறு, காவேரி, மீத்தேன் திட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியிருப்பது என பல்வேறு வாழ்வாதாரமான பிரச்சனைகள் உள்ளன.
இவை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கபடாமல் சட்டமன்றம் பஜனை மடமாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை.
பேரவை தலைவரை ஒருமையில் பேசுவதோ, சைகை செய்வதோ மிகப் பெரிய தவறு. தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை ஒருகட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் செயல்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என தெரிவித்தார். இதனை கேட்டு நான்கூட சந்தோஷப்பட்டேன்.
ஆனால் தமிழகம் முழுவதும் சபாநாயகரின் உருவ பொம்மையினை தி.மு.க.வினர் எரித்தனர். ஆனால் தி.மு.க. தலைமை அதனை கண்டிக்க வில்லை.
இந்த போக்கு மேலும் கசப்பைதான் உருவாக்குமே தவிர தமிழகத்திற்கு நன்மை தராது. சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்து உத்தரவிடவேண்டும். இதனால் ஒற்றுமை ஏற்படும்.
காமராஜர், அண்ணா போன்றோர்களின் ஆட்சி காலங்களில் சட்டசபை மாண்பு கட்டிகாக்கப்பட்டது. தற்போது இந்த இரு கட்சிகளினாலும் அது தொலைந்து போய் விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச் செயலளார் மல்லை சத்யா, நிர்வாகிகள் செங்குட்டுவன், உதயம் ராதா, மணிவேந்தன் நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அடுத்த பாலூர் அருகே மேலச்சேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த 16-ந்தேதி கூழ் வார்க்கும் விழா நடந்தது. அன்று இரவு இசை கச்சேரி நடந்தபோது காவாங்கரை எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்த கலையரசன் (20) நடனமாடினார்.
அப்போது அவரை சிலர் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார்.
இதையடுத்து மேலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று பாலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கொடுத்த மனுவில், கோவில் விழாவில் கலையரசனை அவரது தாய்மாமன்கள் ரங்கதுரை, ஏழுமலையை தாக்கினார்கள். எனவே இதை கொலை வழக்காக மாற்றி நடவடிக்கை வேண்டும் என்ற கூறி உள்ளனர்.
சட்டசபையில் காவல்துறை மானிய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையில் மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. ஆளுங்கட்சியினர் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்து வருவது வழக்கமாகிவிட்டது. சட்டசபையில் விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்களை சபை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது ஏற்புடையதல்ல.
சட்டசபையில் மக்கள் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவிடாமல் தடுப்பது போன்று உள்ளது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சபாநாயகர் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏற்புடையதல்ல.
மசோதாக்கள் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக நேரம் ஒதுக்கவேண்டும். முக்கிய மசோதாக்களில் உறுப்பினர்களை பேசவிடாமல் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவை சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காவல்துறை மானியம் என்பது முக்கியமானது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டம், ஒழுங்கு நிலை கேள்வி குறியாக உள்ளது. தொடர்ந்து கொலை, கொள்ளைகள் நடந்து வருகிறது. காவல்துறை மானியத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது. அதில் அவர்கள் கலந்து கொண்டு பேசவேண்டும். விவாதம் செய்யவேண்டும். உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதுபோன்ற ஜனநாயக சட்டமன்றத்தில் நல்லநிலையை ஏற்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பூந்தமல்லியில் இருந்து மந்தைவெளி நோக்கி இன்று காலை மாநகர பஸ் (எண்.54 எப்) சென்று கொண்டு இருந்தது. 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
நந்தம்பாக்கம் அடையாறு ஆற்றுப்பாலத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற மாற்றுத் திறனாளியின் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் வாலிபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி பக்கவாட்டில் இருந்த இரும்பு தடுப்பில் பலத்த சத்தத்துடன் இடித்தது.
மேலும் சிறிது தூரம் சென்ற பஸ் அங்கிருந்த கம்பத்தில் மோதி நின்றது. அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கினர். சிலர் ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.
விபத்து நடந்ததும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பஸ் மோதியதில் பலத்த காயம் அடைந்த மாற்றுத்திறனாளி ராஜேந்திரன் மற்றும் வாலிபருக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.
பாலத்தின் தடுப்பு கம்பியில் பஸ் மோதி நின்றதால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலாங்கரையை அடுத்த உத்தண்டி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இணை ஆணையர் வீரபாண்டி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கருப்பசாமி, பாஸ்கர், கருணாகரன், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் துரை மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 தனியார் ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், சாலைவரி செலுத்தாமலும் இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து அதிலிருந்த பயணிகளை வேறு பஸ்களில் அனுப்பி வைத்து 4 ஆம்னி பஸ்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆம்னி பஸ்களும் சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை சிங்கப்பூருக்கு செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது யூசுப் வைத்திருந்த பையை மத்திய தொகுப்பில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.
அதில் சுமார் 8 கிலோ எடை உள்ள காய்ந்த நிலையில் இறந்த கடல்குதிரை இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் முகமது யூசுப் கடல் குதிரையை மருந்து தயாரிக்க பயன்படுத்துவதற்காக சிங்கப்பூருக்கு கடத்த இருந்தது தெரிந்தது.
இதையடுத்து முகமது யூசுப்பை அதிகாரிகள் கைது செய்தனர். 8 கிலோ கடல் குதிரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் 67-வது முறையாக ‘லிப்ட்’ சுவரில் உள்ள கற்கள் உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.
இங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒருமுறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.யும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது 67-வது முறையாக விபத்து நடந்துள்ளது. மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளுக்கு பயணிகள் செல்ல ‘லிப்ட்’ வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளம் பகுதியில் ‘லிப்ட்’ அறையின் சுவற்றில் சலவை கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
2 அடி அகலமும் 7 அடி நீளமும் கொண்ட இந்த கற்களில் 5 கற்கள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி 3 நாள் தொடர் விடுமுறை என்பதால் பொழுது போக்குக்காக மாமல்லபுரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே வந்து இருந்தனர். அவர்கள் நடந்து சென்று பாரம்பரிய சின்னங்கள், குடவரைக் கோயில்கள் என புராதன சின்னங்களை மலைக் குன்றுகளுக்கு சென்று பார்க்க முடியாமல் திரும்பினர். குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டனர்.
கோவளம் அருகே உள்ள திருவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). நேற்று மதியம் திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலை அருகே கடை வீதிக்கு வந்த போது வெயில் தாங்க முடியாமல் சுருண்டு மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






