என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமராஜர் காலத்தில் காக்கப்பட்ட சட்டசபை மாண்பு இப்போது இல்லை: வைகோ வேதனை
    X

    காமராஜர் காலத்தில் காக்கப்பட்ட சட்டசபை மாண்பு இப்போது இல்லை: வைகோ வேதனை

    காமராஜர் காலத்தில் காக்கப்பட்ட சட்டசபை மாண்பு இப்போது இல்லை என வைகோ பேட்டி அளித்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

    அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது தமிழகத்தின் தலையாய பிரச்சனைகளாக முல்லைபெரியாறு, காவேரி, மீத்தேன் திட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டியிருப்பது என பல்வேறு வாழ்வாதாரமான பிரச்சனைகள் உள்ளன.

    இவை பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கபடாமல் சட்டமன்றம் பஜனை மடமாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளுமே மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது இல்லை.

    பேரவை தலைவரை ஒருமையில் பேசுவதோ, சைகை செய்வதோ மிகப் பெரிய தவறு. தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை ஒருகட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்களின் செயல்களுக்காக நான் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன் என தெரிவித்தார். இதனை கேட்டு நான்கூட சந்தோ‌ஷப்பட்டேன்.

    ஆனால் தமிழகம் முழுவதும் சபாநாயகரின் உருவ பொம்மையினை தி.மு.க.வினர் எரித்தனர். ஆனால் தி.மு.க. தலைமை அதனை கண்டிக்க வில்லை.

    இந்த போக்கு மேலும் கசப்பைதான் உருவாக்குமே தவிர தமிழகத்திற்கு நன்மை தராது. சபாநாயகர் தி.மு.க. உறுப்பினர்களின் சஸ்பெண்ட் உத்தரவினை மறுபரிசீலனை செய்து ரத்து செய்து உத்தரவிடவேண்டும். இதனால் ஒற்றுமை ஏற்படும்.

    காமராஜர், அண்ணா போன்றோர்களின் ஆட்சி காலங்களில் சட்டசபை மாண்பு கட்டிகாக்கப்பட்டது. தற்போது இந்த இரு கட்சிகளினாலும் அது தொலைந்து போய் விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, துணை பொதுச் செயலளார் மல்லை சத்யா, நிர்வாகிகள் செங்குட்டுவன், உதயம் ராதா, மணிவேந்தன் நகரச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×