என் மலர்
காஞ்சிபுரம்
தாம்பரத்தை அடுத்த காட்டாங்கொளத்தூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சியினருக்கு இடையே அரசியல் முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு இவர்களுக்கிடையேயான இந்த விரோதம் கோஷ்டி மோதலாக மாறியது. காட்டாங்கொளத்தூர், திருப்பன ஆழ்வார் தெருவில் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மூர்த்தி மற்றும் சிலர் தகராறு செய்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டனர். இதனால் அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேகே போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டது.
பின்னர் காட்டாங்கொளத்தூர், திருவள்ளுவர் தெருவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் முத்தையாவின் காரும் அடித்து நொறுக்கப்பட்டது.
இச்சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பன ஆழ்வார் தெருவில் 4 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் காட்டாங் கொளத்தூருக்கு விரைந்து சென்றனர். அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முத்தையா, சின்னமலை, கார்த்திக், சுரேஷ், மூர்த்தி ஆகிய 5 பேரும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஆனந்த், பாலகிருஷ்ணன், தியாகு, சுரேஷ், இன்னொரு ஆனந்த் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் காட்டாங்கொளத்தூரில் பதட்டம் நிலவுகிறது.
காஞ்சீபுரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் முதல் மாநில மாநாடு காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு வள்ளலார் மூட்டிய புரட்சி என்ற நூலினை வெளியிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தமிழக வாலிபர் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதனால் இரு மாநில உறவு பாதிக்கப்படும். இது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். காவிரி நீர் பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம் மூலம் தீர்வு காண வேண்டும்.
ரியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு ரூ.2 கோடி பரிசு அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநாட்டில் சென்னையில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் வள்ளலார் கோட்டத்தினை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. சூப்பர் வைசராக காஞ்சீபுரத்தை அடுத்த களக்காடி கிராமத்தை சேர்ந்த நரசிம்மனும், விற்பனையாளராக செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கத்தை சேர்ந்த தங்கராஜும் உள்ளனர்.
நேற்று இரவு விற்பனை முடிந்து மதுக்கடையை பூட்டினர். பின்னர் விற்பனை பணம் ரூ.4 லட்சத்தை பையில் வைத்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய நரசிம்மனும், தங்கராஜும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது காரில் இருந்து முகமூடி அணிந்த மர்ம கும்பல் கீழே இறங்கினர்.
அவர்கள் நரசிம்மனையும், தங்கராஜையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்தி முனையில் அவர்களை மிரட்டி ரூ.4 லட்சத்தை பறித்து காரில் தப்பி சென்று விட்டனர்.
கீழே விழுந்ததிலும், முகமூடி கும்பல் தாக்கியதிலும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுராந்தகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள மதுக்கடைகளிலும், டாஸ்மாக் ஊழியர்களிடமும் கொள்ளை நடக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட கொள்ளை நடந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலப்பாக்கத்தில் மதுக்கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம கும்பல் அள்ளிச் சென்றனர்.
இந்த கொள்ளை சம்பவங்களில் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும்போது, “மதுக்கடை மற்றும் மதுக்கடை ஊழியர்களிடம் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் முறையாக வழக்குபதிவு செய்வதில்லை. பல ஊழியர்கள் இழந்த பணத்தை தாங்களே கட்டும் நிலை உள்ளது.
குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால் மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. எனவே, கொள்ளையர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
எண்ணூர் அனல்மின் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை போன்ற விலங்கு சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் பார்த்து சிறுத்தை புலி என்று அச்சம் அடைந்தனர்.
அதே விலங்கை அனல்மின் நிலைய பாதுகாவலர் ஒருவரும், மின்சார ரெயில் டிரைவர் ஒருவரும் பார்த்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் திருவொற்றியூர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக கிண்டி வனத்துறையினர் சிறுத்தை புலியை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கினர். ஆனால் சிக்கவில்லை.
இதுகுறித்து கிண்டி வனத்துறை அதகாரி ஒருவர் கூறும் போது, எண்ணூர் அனல் மின் நிலைய பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் சிறுத்தை புலி எதுவும் சிக்கவில்லை.
இங்கு சிறுத்தை புலி வருவதற்கான வாய்ப்பு குறைவு. காட்டுப்பூனையை பொதுமக்கள் பார்த்து இருக்கலாம்.
காட்டுப்பூனை சுமார் 3 அடி முதல் 11 அடி நீலம் வரை வளரும். மற்ற விலங்குகள் எதுவும் தாக்கப்படாததால் சிறுத்தை புலி நடமாட்டம் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை செல்லும் விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த ராஜசேகர், குமரேசன், செந்தில்குமார் ஆகியோரது கைப்பையை சோதனை செய்த போது கட்டுகட்டாக அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதைத் தொடர்ந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.
இவர்களுக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று 3 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக காங்கிரஸ் அரசு திசை திருப்பும் விதமாக மாநில மக்களின் ஆதரவை பெறதான் காவிரி பிரச்சினையை கையில் எடுத்து உள்ளது.
தமிழக எல்லையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் பா.ஜனதாவும் பங்கேற்க தயாராக இருக்கிறோம். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமை குறித்து மத்திய நீர்வள அமைச்சகத்திடம் தமிழக பா.ஜனதா பேசி உள்ளோம்.
மழை காலத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை பெரிய அளவில் எடுக்க வில்லை என்று தெரிகிறது. மழை காலத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சலால் பொன்னேரி, திருத்தணி ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தும் மக்களுக்கு படுக்கை வசதி இல்லாமல் இருக்கிறது. இதில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வண்டலூர் பூங்கா மற்றும் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகளுக்காக விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும். 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா இயங்கும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் நத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் முருக பாரதி (11). வாலாஜா பாத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர். நேற்று பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வந்து சாலையை கடக்கும் போது பின்னால் வந்த அரசு பஸ் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகபாரதி சிசிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருவான்மியூர்:
துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் பழைய மகாபலிபுரம் சாலையில் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருபவர் ராஜாசிங்.
இவரிடம் முகப்பேரை சேர்ந்த திருநாவுக்கரசு கீழ்கட்டளையை சேர்ந்த விஜயராம், வேளச்சேரியை சேர்ந்த மாரிநாதன் உள்பட 15 பேர் தங்களது காரை விற்று தரும்படி கூறி காரை ராஜாசிங்கிடம் கொடுத்தனர்.
காரை பெற்றுக் கொண்ட ராஜாசிங் அதை விற்றார். ஆனால் பணத்தை காரின் உரிமையாளர்களுக்கு கொடுக்காமல் குடும்பத்துடன் ராஜாசிங் தலைமறைவாகி விட்டார். கார்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும்.
இதுகுறித்து திருநாவுக்கரசு, விஜயராம் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாசிங்கை தேடி வருகிறார்கள்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பரங்கிமலை அருகே உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதிலும், அப்பகுதியில் பறக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனால் விமானங்கள் புறப்படுவதிலும், தரை இறக்குவதிலும் கால தாமதம் ஏற்பட்டது.
மலேசிய, துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரவேண்டிய 14 விமானங்கள் தாமதமாக வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகளை வரவேற்க வந்தவர்கள் காத்து கிடந்தனர்.
சென்னையில் இருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு செல்ல வேண்டிய 8 விமானங்கள் தாமதாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆனால் புறப்படும் நேரம் சரியாக தெரிவிக்காததால் அதிகாரிகளிடம் யணிகள வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.
மதுராந்தகம் அருகே உள்ள பவுச்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாராசந்த் (45). இவர் பஜார் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலையில் அவரது அடகு கடையின் பின்புறம் உள்ள சுவர் உடைக்கப்பட்டு இருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். இதுபற்றி பாராசந்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனே கடைக்கு வந்து பார்த்தார். சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு கடப்பாறையால் உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் அடகு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
முன்பக்கமாக உடைத்தால் தெரிந்து விடும் என்பதால் பின்புற சுவரை உடைத்து கொள்ளையர்கள் புகுந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டுள்ளனர். மிக பலமிக்க லாக்கரை எப்படி உடைத்து நகையை எடுத்து சென்றார்கள் என்பது அதிர்ச்சியாக உள்ளது என்று பராசந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். போலீசாரும், கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பறிந்தது. அடகு கடையை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் உரிமைகளை பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் முழுமையாக பெறவில்லை.
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் செய்கின்ற போராட்டங்களில் தமிழர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் தாக்கப்படுவார்கள் என்றும், தமிழர்களில் கடைகள் உடைக்கப்படும் என்றும் சொல்லி மிரட்டுவது சரியானது அல்ல.
கர்நாடகாவில் சட்டம் -ஒழுங்கு என்பது அந்த மாநில சம்பந்தப்பட்ட பிரச்சனை.அதற்கு முதல்-மந்திரி சித்தராமையாதான் பெறுப்பு.
காவிரி ஆறு தமிழ்நாடு, கர்நாடகா இரண்டிற்குமே சொந்தமானது. ஆனால் அவர்களுக்கு சொந்தமானதை நாம் பெற்று விட்டதாக போராடுகிறார்கள். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இந்த பிரச்சனையில் தமிழக முதல்வரை கர்நாடகாகாரர்கள் மோசமாக விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
காவிரி பிரச்சனையில் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன்பு 10 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு சித்தராமையா எத்தனை முறை கடிதம் எழுதினார். மத்திய அரசு எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கக்கூடாது என்று இருக்கிறது.
அதனால்தான் அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியபோது தண்ணீர் இருக்கிறது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்போதும் டெல்லியில் காவிரி கண்காணிப்பு குழுவை கூட்டி உள்ளது. மத்திய அரசு காவிரி பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படுகிறது. காவிரி பிரச்சனையை இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் உரிமையை எந்தவிதத்திலும் இழந்து விட முடியாது. தமிழக பா.ஜனதா தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே நேற்று இரவு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கலப்பு திருமணம் என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. திருமணம் என்பது ஜாதியின் அடிப்படையில் தான் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த நடைமுறைதான் உள்ளது.
நாம் எல்லோரும் ஒன்றுதான். எனவே நாம் கலப்பு திருமணத்தை வரவேற்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கலப்புதிருமணத்துக்கு எதிரான செயல்களை எதிர்க்க வேண்டும். கலப்பு திருமணம் என்பது நல்ல விஷயம். இதற்கு சமூக நீதி அமைச்சகம், மத்திய அரசு மற்றும் பொதுமக்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






