என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் மறியலில் ஈடுபட்டனர்.
    ஆலந்தூர்:

    கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சாலையில் தனியார் பள்ளி உள்ளது. சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    மாணவர்களிடம் பள்ளி நிர்வாகத்தினர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கீழ்க்கட்டளை சந்திப்பு, மேடவாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    மடிப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இந்த மறியலில் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காஞ்சீபுரத்தில் சித்தராமையா உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மா.கா.வினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் புருசோத்தமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திடீரென அவர்கள் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சோழவரம் கடலில் மூழ்கி உயிரிழந்த என்ஜினீயரிங் மாணவர் உடலை 2 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர்.
    மாமல்லபுரம்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கெமிக்கல் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் மானாஷ் பாண்டே (வயது 20). இவரது சொந்த ஊர் புதுடெல்லி ஆகும்.

    நேற்று முன்தினம் மானாஷ் பாண்டே நண்பர்கள் 6 பேருடன் கோவளம் கடற்கரைக்கு சுற்றுலா வந்தார். பின்னர் அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.

    அப்போது ராட்சத அலை மானாஷ் பாண்டேவை கடலுக்குள் இழுத்துச் சென்றது. நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முட்டுக்காடு முகத்துவார பகுதியில் உள்ள இறால் பண்ணா அருகே மானாஷ் பாண்டே உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் மீட்டனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து பாங்காக்குக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் வைத்திருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் யூரோ பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

    இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சுற்றுலா விசாவில் பாங்காக் செல்ல இருந்ததும் தெரிய வந்தது.

    திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வராக மான்கள், ரியா பறவைகள் கொண்டு வரப்பட்டன.
    வண்டலூர்:

    திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வராக மான்கள், ரியா பறவைகள் கொண்டு வரப்பட்டன.

    வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விலங்குகள் பரிமாற்ற முறையில் வண்டலூர் பூங்காவுக்கு 4 ரியா பறவைகள், 6 வராக மான்கள் திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இவற்றில் 2 வெள்ளை நிற ரியா பறவைகளும், 2 பழுப்பு நிற ரியா பறவைகளும், 3 ஆண் மற்றும் 3 பெண் வராக மான்களும் அடங்கும்.

    இவற்றிற்கு பதிலாக வண்டலூர் பூங்காவில் இருந்து 4 வெள்ளை மயில்கள் (ஆண்-2, பெண்-2), 4 கட்ட உடல் மலைப்பாம்புகள் (ஆண்-2, பெண்-2) திருவனந்தபுரம் பூங்காவிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

    வண்டலூர் பூங்கா 1855-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ரியா பறவை முதன்முதலாக தற்பொழுதுதான் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உரிய நோய்த்தடுப்பு மருத்துவ நடவடிக்கைகளுக்குப் பிறகு ரியா பறவைகள் மற்றும் வராக மான்களை பார்வையாளர்கள் நேற்று முதல் பார்வையிடுகின்றனர்.

    ரியா பறவை பறக்க இயலா பறவையாகும். தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த பறவை, நெருப்புக்கோழி மற்றும் ஈமு போன்ற பறவைகளின் நெருங்கிய உறவினமாகும். இந்த பறவையில் பெரிய ரியா மற்றும் சிறிய ரியா என 2 இனங்கள் உள்ளன. நன்கு வளர்ந்த பெரிய ரியா 170 செ.மீ. உயரமும் 40 கிலோ வரை எடையும் இருக்கும்.

    வராக மான் வட இந்தியா, பாகி்ஸ்தான், நேபாளம், வங்காளதேசம், சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் காணப்படுகிறது. தலையை தொங்கியவாறே ஓடும் இந்த மான் மற்ற மானினங்களை போல் தடைகளை தாவாமலும் குதிக்காமலும் அவற்றினூடே ஊர்ந்து செல்லும் இயல்பை உடையது. பன்றியை போன்ற உடலமைப்பும் செயல்பாடுகளும் இருப்பதால் இந்த மான் வராக மான் என்று அழைக்கப்படுகிறது.

    அழிநிலை விலங்கினமான இந்த மான்கள் 17 முதல் 18 வயது வரை உயிர் வாழும். இந்த மானுடன் சேர்த்து இந்த பூங்காவிலுள்ள மானினங்களின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழ்வாணன் தலைமையில் பல்லாவரத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.

    தாம்பரம்:

    தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதும், தமிழக வாகனங்கள் சேதப்படுத்துவதும் நடந்து வருகிறது.

    இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். போராட்டங்களும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை பல்லாவரம் ரெயில் நிலையத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் தமிழ்வாணன் தலைமையில் திரண்டனர்.

    அவர்கள் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பிய படி கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பல்லாவரம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட தமிழ்வாணன் உள்பட 25 பேரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் சிறிது நேரம் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள கர்நாடகா வங்கியை வீரத்தமிழர் பேரவையின் தலைவர் தங்கபாஸ்கர் தலைமையில் பொதுச் செயலாளர் பூபதி ராஜா, தென்சென்னை மாவட்ட செயலாளர் மாணிக்தங்கராஜ், இளைஞரணி மாநில செயலாளர் சம்பத் உள்பட பலர்முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கர்நாடகாவில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். ‘விருகம்பாக்கம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

    மந்தைவெளியில் மாநகர பஸ் மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.
    திருவான்மியூர்:

    மந்தைவெளி ஏ.சி.எஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(18), 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் தனது நண்பரான கல்லூரி மாணவர் பால கிருஷ்ணனுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் இன்று ராயப்பேட்டையில் இருந்து மந்தைவெளி சென்று கொண்டிருந்தார்.

    காலை 11 மணியளவில் மந்தைவெளி எல்லோ பேஜஸ் அருகில் சென்ற போது மாநகர பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் மாணவர் மகேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். பால கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 21 பேர் உயிர் தப்பினார்கள்
    மாமல்லபுரம்:

    நங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கல்பாக்கம் அடுத்த முதலியார் குப்பம் படகுத்துறைக்கு 2 வேன்களில் சுற்றுலா புறப்பட்டனர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தொழிலாளர் நலவாரிய விடுதி அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்த போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதாமல் இருக்க டிரைவர் வண்டியை திருப்பினார்.

    இதில் தடுமாறியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. வேனின் கதவுப் பகுதி தரைப்பகுதியில் இருந்த தால் உள்ளே இருந்த பயணி களால் வெளியே வர முடியவில்லை. சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீட்டனர். வேனின் முன் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டனர். இதில் டிரைவர் சிவப்பிரகாசம் உள்பட 21 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

    கிழக்கு கடற்கரை சாலை 4 வழிபாதையாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக வாகனங்கள் ஒரே வழியில் செல்கின்றன. இதனால் விபத்து நடந்ததாக தெரிகிறது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காவிரி நீர் பிரச்சனையை கர்நாடக அரசு அரசியலாக்கி வன்முறையை தூண்டுகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. இது வருத்தம் அளிக்கிறது. அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீர்தான் கிடைத்து இருக்கிறது. இதனை அரசியல் ஆக்கி வன்முறையை தூண்டுகின்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு கூட்ட வேண்டும். இதில் பா.ஜனதா கலந்து கொள்ள தயாராக இருக்கிறது.

    மேலும் தனிப்பட்ட முறையில் தமிழக பா.ஜனதா, நீர்வளத்துறை அமைச்சகத்திடமும், மத்திய தலைமைக்கும் காவிரி பிரச்சனையில் தமிழகம் - கர்நாடக நிலவரம் குறித்து தகவல் அளித்து உள்ளது.

    காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் தீர்வாக அமையாது. சரியான அணுகுமுறைதான் தீர்வை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.
    காஞ்சீபுரம்:

    கர்நாடகாவில் காவிரி நீர் தொடர்பாக தமிழர்கள் மீது தாக்குதல் தொடர்வதை கண்டித்து காஞ்சீபுரம் காந்தி சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தீனன் தலைமையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையில் ஏராளமான போலீசார் காந்திசாலையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.

    காஞ்சீபுரம் நகரத்தில் கோயில்களுக்கும் பிரசித்தி பெற்ற பட்டு சேலை வாங்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    காவிரி நதி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் தொடரும் நிலையில் காஞ்சீபுரம் நகரத்திற்கும் கோயிலுக்கும் பட்டு சேலை வாங்கவும் வருகைதரும் கர்நாடக மக்கள் மற்றும் வாகனங்கள் பாதுகாப்பு காரணமாக நகரின் முக்கிய கோயில்கள் உள்ள பகுதிகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்களை ஒன்று சேர்த்து போலீஸ் காவலுடன் நகர எல்லை வரை பாதுகாப்பு அளித்து தேசிய நெடுஞ்சாலை வரை உடன் சென்று அனுப்பி வைக்கின்றனர்.
    கர்நாடகாவில் வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க பொருளாருமான மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் 4-ந்தேதி தனிப்பட்ட பயணமாக லண்டன் சென்றிருந்தார்.

    1 வாரத்திற்கு பிறகு இன்று காலை 8.30 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடகா மாநிலத்தில் நடந்து வரும் போராட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. இது மாதிரியான பிரச்சனை வரும் என்று அறிந்து ஏற்கனவே தலைவர் கலைஞர் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியதன் அடிப்படையில் இரு மாநில முதல்-அமைச்சர்களும் கலந்து பேச வேண்டும் என்று கூறி இருந்தார்.

    எனவே இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசும், பிரதமர் மோடியும் உடனே தலையிட்டு சுமூக நிலையை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

    தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 2 மாநில முதலமைச்சர்களையும் அழைத்து பேசி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகா அரசுக்கு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

    இந்த தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு செயல்பட வேண்டும். அதை செயல்படுத்துவதற்கான பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது.

    வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்டவேண்டும். ராணுவத்தை துணையாக வைத்து தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இதற்கான பொறுப்பு உண்டு.

    உச்சநீதிமன்ற தீர்ப்பை இரு மாநில அரசும் நிறைவேற்றும் பொறுப்பு உண்டு. எனவே இரு மாநில முதலமைச்சர்களையும் அழைத்து மத்திய அரசு பேச வேண்டும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    மது குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு புகுந்து திருடியது தெரிந்தது. அவரிடம் இருந்த 45 பவுன் நகை, கார், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே கீழம்பி பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்(வயது 58). எலக்ட்ரீஷியன். இவருடைய மனைவி ஜெயந்தி(45). இவர்களுக்கு வினோத்குமார்(31), குமரன்(28) என 2 மகன்கள் உள்ளனர். திருவாரூரைச் சேர்ந்த கோவிந்தராஜன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் குடும்பத்துடன் காஞ்சீபுரத்தில் குடியேறினார்.

    கடந்த 5-ந்தேதி இரவு கோவிந்தராஜன், வினோத்குமார் இருவரும் மதுபோதையில் இருந்தனர். அப்போது மேலும் மது அருந்த பணம் தரும்படி தந்தையிடம் வினோத்குமார் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், தந்தை என்றும் பாராமல் கோவிந்தராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்தார். இதுபற்றி பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வினோத்குமாரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை காஞ்சீபுரம் அருகே வெள்ளக்கேட் என்ற இடத்தில் காரில் சென்ற வினோத்குமாரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர், தனது தந்தை கோவிந்தராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வினோத்குமார் சென்னை, காஞ்சீபுரம், திருவாரூர், கோவை, திருச்சி உள்பட தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வீடு புகுந்து திருடியதும், இந்த திருட்டு வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர், திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் திருடிய 45 பவுன் நகையை திருவாரூரில் உள்ள தங்கள் வீட்டில் மறைத்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கோவில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து திருவாரூரில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 45 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைதான வினோத்குமாரை போலீசார் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×