என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுராந்தகம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளை
    X

    மதுராந்தகம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சம் கொள்ளை

    மதுராந்தகம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.4 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த ஜானகிபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. சூப்பர் வைசராக காஞ்சீபுரத்தை அடுத்த களக்காடி கிராமத்தை சேர்ந்த நரசிம்மனும், விற்பனையாளராக செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கத்தை சேர்ந்த தங்கராஜும் உள்ளனர்.

    நேற்று இரவு விற்பனை முடிந்து மதுக்கடையை பூட்டினர். பின்னர் விற்பனை பணம் ரூ.4 லட்சத்தை பையில் வைத்து 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறிய நரசிம்மனும், தங்கராஜும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது காரில் இருந்து முகமூடி அணிந்த மர்ம கும்பல் கீழே இறங்கினர்.

    அவர்கள் நரசிம்மனையும், தங்கராஜையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் கத்தி முனையில் அவர்களை மிரட்டி ரூ.4 லட்சத்தை பறித்து காரில் தப்பி சென்று விட்டனர்.

    கீழே விழுந்ததிலும், முகமூடி கும்பல் தாக்கியதிலும் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மதுராந்தகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள மதுக்கடைகளிலும், டாஸ்மாக் ஊழியர்களிடமும் கொள்ளை நடக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் 5-க்கும் மேற்பட்ட கொள்ளை நடந்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு எலப்பாக்கத்தில் மதுக்கடையை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம கும்பல் அள்ளிச் சென்றனர்.

    இந்த கொள்ளை சம்பவங்களில் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை.

    இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும்போது, “மதுக்கடை மற்றும் மதுக்கடை ஊழியர்களிடம் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் முறையாக வழக்குபதிவு செய்வதில்லை. பல ஊழியர்கள் இழந்த பணத்தை தாங்களே கட்டும் நிலை உள்ளது.

    குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால் மதுராந்தகம், அச்சரப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. எனவே, கொள்ளையர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
    Next Story
    ×