என் மலர்
காஞ்சிபுரம்
வண்டலூர் பூங்காவில் 2 ஒநாய்கள் உள்ளன. ஒநாய்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த பூங்கா நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
விலங்குகள் பரிமாற்ற முறையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள சரணாலயத்தில் இருந்து 2 பெண் ஓநாய்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 24-ந் தேதி வண்டலூர் பூங்காவிற்கு 2 ஓநாய்கள் கொண்டு வரப்பட்டன. அதனை ஊழியர்கள் ஏற்கனவே உள்ள ஓநாய்களுடன் அடைத்தனர். இதனால் பூங்காவில் ஒநாய்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல் பூங்காவில் இருந்த ‘ராமா’ என்கிற 5 வயதான ஆண் வெள்ளைப் புலியை விலங்குகள் பரிமாற்ற முறையில் உதய்பூர் பூங்காவிற்கு கடந்த திங்கட்கிழமை ஊழியர்கள் அனுப்பி வைத்தனர். அதனுடன் பராமரிப்பாளர் செல்வன் மற்றும் டாக்டர்கள் குழுவினரும் சென்று இருந்தனர்.
வண்டலூர் பூங்காவிற்கு புதிய வரவாக வந்துள்ள ஓநாய்களை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்:
கிண்டி பாரதியார் நகரை சேர்ந்த பிரசாத். இவரது மனைவி வைலட். இவர் நேற்று இரவு நரசிங்கபுரத்தில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வைலட் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து கிண்டி போலீசார் விசாரித்துவருகின்றனர்.
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வடகிழக்கு பருவ மழைக்கு பின்னர் அக்டோபர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து 32 வகையான பறவைகள் தங்கி குஞ்சு பொறித்து மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்வது வழக்கம்.
தற்போது பெய்து வரும் மழையால் உத்திரமேரூர், கிளியாற்று ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயப் பகுதி பச்சைபசேல் என்று பறவைகள் தங்கும் சீதோஷன நிலைக்கு மாறி உள்ளது.
இதையடுத்து இலங்கை, பாகிஸ்தான், பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்துள்ளன.
மரத்தின், உச்சியில் பறவைகள் அமர்ந்து இருப்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதில் நத்தை கொத்தி நாரை, சாம்பல் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன், வக்கா, நீர் காகம், பாம்பு தாரா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாட்பல் நாரை ஆகிய பறவைகள் முக்கியமானவை. மொத்தம் 2500 பறவைகள் தற்போது சரணாலயத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் மாத இறுதியில் பறவைகள் சரணாலயத்தை பார்க்க அனுமதி வழங்கப்படும். இப்போது முன்கூட்டியே பறவைகள் வந்துள்ளதால் ஏராளமானோர் அவற்றை பார்வையிட வந்து செல்கின்றனர். ஆனால் அனுமதி வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வனச்சரக கோட்ட அலுவலர் சுப்பையாவிடம் கேட்ட போது வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு முன் கூட்டியே பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். சுற்றுலா பயணிகள் பார்வையிட விரைவில் அனுமதி வழங்கப்படும் என்றார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 9 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள், 27 மாவட்ட கவுன்சிலர்கள், 252 ஒன்றிய கவுன்சிலர்கள், 633 ஊராட்சி பதவிகள் என 6,788 பதவிகளுக்கான தேர்தல் அக்-17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினரால் தேர்தல் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.
காஞ்சீபுரம் நகராட்சி கவுன்சிலர்களுக்கான வேட்புமனுவை இதுவரை யாரும் தாக்கல் செய்யவராததால் நகராட்சி அலுவலகம் எந்தவித பரபரப்பும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
நகராட்சிக்குட்பட்ட 55 வாக்குசாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரியான காஞ்சீபுரம் கமிஷனர் (பொறுப்பு) சேகர் பார்வையிட்டார். அங்கு வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்ட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர்களுக்கான தேர்தலில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நர்மதா (வாலாஜாபாத் 3 மற்றும் 4-வது மாவட்ட கவுன்சிலர் வார்டுகள், காஞ்சிபுரம் 1 மற்றும் 2-வது வார்டுகள், உத்திரமேரூர் 20 மற்றும் 21-வது வார்டுகள்- செல்போன் எண்.95855 48311)
சரஸ்வதி (அச்சிறுபாக்கம் 22 மற்றும் 23-வது வார்டுகள், சித்தாமூர் 24 மற்றும் 25- வது வார்டுகள், லத்தூர் 26 மற்றும் 27-வது வார்டுகள், மதுராந்தகம் 18 மற்றும் 19 வது வார்டுகள் செல்: 94450 34132)
சக்திவேல் (திருப்போரூர் 13 மற்றும் 14-வது வார்டுகள், திருக்கழுக்குன்றம் 15, 16 மற்றும் 17-வது வார்டுகள், காட்டாங்கொளத்தூர் 11 மற்றும் 12வது வார்டுகள் செல்: 94445 31758)
கருணாகரன் (ஸ்ரீபெரும்புதூர் 5 மற்றும் 6-வது வார்டுகள், குன்றத்தூர் 7 மற்றும் 8-வது வார்டுகள், செயிண்ட் தாமஸ் மவுண்ட் 9 மற்றும் 10-வது வார்டுகள் செல்: 94436 19739)
டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், நியாயத்தின் அடிப்படையிலும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணித்தவர் இல.கணேசன். அவருக்கு எம்.பி. பதவி கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக முதல்வர் குணமடைந்து மீண்டும் பணியை தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில் ஆலந்தூர் தொகுதியில் 158-வது வார்ட்டில் வேட்பாளராக கவிதா சந்திரசேகர் அறிவிக்கப்பட்டார். இவரது கணவர் சந்திரசேகர்தான் தற்போது 158-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். காஞ்சி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
158-வது வார்டு பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டதால் சந்திரசேகர் தனது மனைவி கவிதாவுக்கு சீட் கேட்டு விண்ணப்பித்தார்.
இதே போல் 158-வது பகுதி அ.தி.மு.க. வட்ட செயலாளர் பர்மா கண்ணனும் தனது மனைவி அவ்வை நாச்சியாருக்கு சீட் கேட்டு இருந்தார்.
இதில் கவிதாவுக்கு சீட்டு கிடைத்தது. இதனால் பர்மா கண்ணன் தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று 7.30 மணிக்கு நந்தம்பாக்கம் வர்த்தகம் மையம் எதிரே உள்ள 100 அடி உயர செல்போன் டவரில் பர்மா கண்ணனின் தம்பி மணிகண்டன் பாபு, உறவினர்கள் தினகரன், தேவகுமரன் ஆகியோர் 3 பேர் ஏறி 158-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கவிதாவை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
உடனே உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
3 பேரையும் கீழே இறங்கி வரும்படி போலீசார் கூறினார்கள். ஆனால் கீழே இறங்க மறுத்து அவர்கள் தங்களை பிடிக்க செல்போன் டவரில் யாராவது ஏறினால் கீழே குதிப்போம் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
மாவட்ட செயலாளர் வந்து வேட்பாளர் மாற்றப்படுவார் என்று உறுதி அளித்தால்தான் கீழே இறங்கி வருவோம் என்று கூறினார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே 162-வது வட்ட செயலாளர் பெரிய நாயகம், 163-வது வட்ட ஆலந்தூர் தொகுதி துணைத் தலைவர் லோகேஷ் ஆகியோரும் தங்கள் வார்டுகளில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றக்கோரி செல்போன் டவரில் ஏறப்போவதாக கோஷம் போட்டனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
கடலோர பாதுகாப்பு கூட்டுப்பயிற்சி ஷசாகர் கவாக்ஷ என்ற பெயரில் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.
இதை நடத்துவதற்கான முன்னோட்டமாக இன்று காலை இந்திய கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காட் ஆகிய பகுதிகளின் கடல் வழிகளை ஆய்வு செய்தனர்.
மேலும் மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம் பகுதிகளில் உள்ள கடற்கரை கிராமங்கள், கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடற்கரையோர விடுதிகள், ரிசார்ட்கள் போன்ற விபரங்களை போலீசாரிடம் சேகரித்துள்ளனர். நாளை காலை 6 மணிக்கு துவங்கும் இந்த பயிற்சி நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் முடிகிறது.
கிழக்கு தாம்பரம் அண்ணாத்துரை தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். ரெயில்வேயில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குமாரி. பால் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர்களது மகள் விஜயலட்சுமி (17) பிளஸ்-2 மாணவி.
நேற்று பள்ளிக்கு விஜயலட்சுமி 3 பவுன் தங்க செயினை அணிந்து சென்றார். மாலை வீடு திரும்பும் போது தங்க செயினை தொலைத்து விட்டார்.
நகை தொலைந்தது பற்றி தாயிடம் விஜயலட்சுமி கூறிய போது அவர் மகளை திட்டினார். இதனால் விஜயலட்சுமி மிகவும் வருத்தத்தில் இருந்தார்.
இன்று காலை குமாரி பால் வியாபாரத்துக்கு சென்று விட்டார். தந்தை நந்தகுமாரும் வேலைக்கு சென்று இருந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாய் குமாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்து மகள் உடலை பார்த்து கதறி அழுதார். நகையை தொலைத்தாலும், தாய் திட்டியதாலும் விஜய லட்சுமி தற்கொலை செய்து உள்ளார்.
இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவி உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு திமாவரம் அம்பத்தூர் நகர் பகுதியில் 2 செங்கல் சூளைகள் உள்ளன.
இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா, தேவி, செல்வம், அனிதா என 12 சிறுவர்கள் உள்பட 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், தாசில்தார் பரிமளாதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது 12 சிறுவர்கள், 9 பெண்கள், 8 ஆண்கள் என 29 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. உடனே அவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களுக்கு ரூ.1000, வேட்டி, சேலை, விடுதலை பத்திரத்தை கொடுத்து அனுப்பினர்.கொத்தடிமைகள் மீட்பு சம்பவம் குறித்து அறிந்ததும் செங்கல் சூளையின் உரிமையாளர்கள் பரந்தாமன், காளிமுத்து தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6788 உள்ளாட்சி பதவிகளுக்கு அடுத்த மாதம் 17, 19-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக அடுத்த மாதம் 17-ந் தேதி 8 ஒன்றியங்கள், 6 பேரூராட்சி மற்றும் 2 நகராட்சிகளில் தேர்தல் நடைபெறும்.
2-ம் கட்டமாக 5 ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள் மற்றும் 7 நகராட்சிகளில் 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 29 லட்சத்து 37 ஆயிரத்து 577 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்களிக்க 4394 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 1070 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 283 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகளுக்காக முதல்கட்டமாக 15 ஆயிரத்து 154 பணியாளர்களும், 2-ம் கட்டமாக 15 ஆயிரத்து 325 பணியாளர்களும் தேர்தல் பணியாற்றுவர். இவர்களுக்கு அக்டோபர் 2-ந் தேதி முதல் 14- ந்தேதி வரை தேர்தல் பணி பயிற்சி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த சாகுல் அமீத்வின் பையை சோதனை செய்தபோது அமெரிக்க டாலர், யூரோ பணம் இருந்தது. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை.
இதையடுத்து வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18 லட்சம் ஆகும். விசாரணையில் சாகுல் அமீத் சுற்றுலா விசாவில் இலங்கை வழியாக சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரிந்தது. அவருக்கு வெளிநாட்டு பணம் கிடைத்தது எப்படி? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.






