என் மலர்
காஞ்சிபுரம்
தமிழக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன், சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பிரதேச மாநிலத்தின் சார்பாக டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு கடந்த 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்து உள்ளேன். வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து நான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்.
காவிரி பிரச்சினையில் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைவிட பா.ஜனதா கட்சிக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து பா.ஜனதா கட்சி போராட்டங்களை நடத்தி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறோம். காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜனதா கட்சி ஆதரிக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப்போவதில்லை என மத்திய அரசு எப்போதும் சொல்லவில்லை. வாரியத்தை அமைக்கக்கூடாது என்ற கர்நாடக மாநிலத்தின் வாதத்தையும் ஏற்கவில்லை.
காவிரி பிரச்சினையில் உள்ள சட்ட சிக்கல் பற்றி யாரோ சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் 8 வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்றம் சொல்லி வாரியங்கள் அமைக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் சட்டமாக கொண்டு அமைக்கப்பட்டால்தான் அந்த வாரியங்கள் அதிகாரபூர்வமாக இருக்கும். நீதிமன்றம் சொல்லி மேலாண்மை வாரியம் அமைத்தால் பிறகு கர்நாடகத்தில் இருந்து நீதிமன்றம் சென்றால் அந்த வாரியம் செல்லாததாக மாறிவிடும். இதனால்தான் மத்திய அரசு நீதிமன்றத்தில் விவரமாக கூறி உள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்று உள்ளது.
எதிர்காலத்தில் எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி கவனமாக செயல்படக்கூடியவர். நிச்சயமாக மேலாண்மை வாரியம் முறையாக, பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி சட்டபூர்வமாக அமையும்.
தமிழகத்தில் இருந்து பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் வருகிற 9 மற்றும் 10-ந் தேதி டெல்லி சென்று காவிரியில் கர்நாடகத்தின் பொய்யான தகவல்களை பற்றிய விவரங்களை மத்திய அரசிடம் சொல்வோம்.
தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி பிரதமரிடம் சென்று பேச முயன்றால் அவர் அந்த பிரச்சினைகளை அதிகமாக தெரிந்து வைத்து இருக்கி்றார். காவிரி உள்பட அனைத்து பிரச்சினைகளையும் அறிந்து அவற்றை தீர்க்க பிரதமர் செயல்படுவார்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சட்ட முடிவு எடுத்து இட ஒதுக்கீடுகளை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்காமல், 24 மணி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்கின்ற நிலையை அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தியது.
ஆனால் தி.மு.க., நீதிமன்றத்திற்கு சென்று, இப்போது உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜனதா கட்சி இப்போது முதல் பணிகளை தொடங்கி செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார்நகரில் வசித்து வந்தவர் தனசேகரன். படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞர் அணி செயலாளராகவும் இருந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை டேவிட் நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். அப்போது மர்மகும்பல் தனசேகரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்ததால் தனசேகரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கரசங்காலை சேர்ந்த ரவுடி அருண்குமார் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். தனசேகரனிடம் மாமூல் கேட்டு அருண்குமார் மிரட்டி இருக்கிறார். ஆனால் தனசேகரன் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அருண்குமாரை மர்ம கும்பல் கொலை செய்ய விரட்டி உள்ளது. இதில் தனசேகரனுக்கு தொடர்பு இருக்கலாம் என நினைத்து தீர்த்து கட்டிவிட்டதாக கைதானவர் தெரிவித்து உள்ளனர்.
சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்தில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கிருஷ்ண வேணி என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவரை விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர்.
அப்போது அவர் தனது உள்ளாடையில் தங்க பிஸ்கட்டுகள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.27 லட்சம். எடை 900 கிராம்.
இதே போல் நள்ளிரவு 12.30 மணிக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவரை சோதனை செய்த போது அவர் சூட்கேசில் 3 தங்க பிஸ்கட்டுகளை மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் எடை 800 கிராம். மதிப்பு ரூ. 24 லட்சம்.
சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் அமெரிக்கா டாலர், யுரோ வெளிநாட்டு பணம் கட்டுகட்டாக இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூர் செல்வது தெரிய வந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.23 லட்சம்.
இந்த 3 சம்பவங்கள் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ தங்கமும், வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது, மாவட்டம் முழுவதும் உள்ள 6075 உள்ளாட்சிப் பதவிகளுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 494 பேர் வேட்பு மனுக்கள்தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 4,394 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி ஆய்வு செய்து வருகிறார்.
மாவட்டத்தில் முதல் கட்டமாக 17-ந்தேதி 8 ஒன்றியங்கள், 6 பேரூராட்சிகள் மற்றும் 2 நகராட்சிகளிலும், 2-ம் கட்டமாக 5 ஒன்றியங்கள், 11 பேரூராட்சிகள் மற்றும் 7 நகராட்சிகளிலும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 29 லட்சத்து 37 ஆயிரத்து 577 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
40 வார்டுகளை கொண்டிருந்த காஞ்சீபுரம் நகராட்சி தொகுதி சீரமைப்பிற்கு பின்னால் 51 வார்டுகளாக விரிவுபடுத்தப்பட்டது. நேற்று வேட்புமனு தாக்கலின் இறுதிநாளில் அனைத்து வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இந்திராகாந்தி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நகராட்சி வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சீபுரம் நகராட்சியில் 51 வார்டுகளுக்கு 1-ந்தேதி வரை 46 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர்.
நேற்று ஒரே நாளில் 287 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் காஞ்சீபுரம் நகராட்சியில் வேட்பாளர்கள் எண்ணிக்கை 333 பேராக உள்ளது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு வாபஸ் பெற 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். இதன் பின்னரே இறுதி வேட்பாளர் நிலை தெரியவரும்.
திருவான்மியூர்:
பள்ளிக்கரணை அடுத்த கோவிலம்பாக்கம், துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் மதுக்கடை உள்ளது.
மதுக்கடையின் அருகே உள்ள மரத்தில் 40 வயது மதிக்கதக்க ஆண் பிணமாக தூக்கில் தொங்கினார்.
அவரது முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் ரத்த காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை. மது போதையில் அவரை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது வேறு எங்காவது கொன்று விட்டு இங்கு தூக்கில் தொங்கவிட்டனரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.45 மணிக்கு பிரான்ஸ் நாட்டுக்கு செல்லும் ஏர்-இந்தியா விமானத்துக்காக 146 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரவேண்டிய இணைப்பு விமானம் எந்திர கோளாறு காரணமாக வராததால் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஏர்-இந்தியா விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் 87 பயணிகள் அவதி அடைந்தனர். தங்களுக்கு சரியான தகவல் கொடுக்கவில்லை என்று கூறி அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவான்மியூர்:
நீலாங்கரை அடுத்த பாலவாக்கம் பல்கலைநகர் பீச் பகுதியைச் சேர்ந்தவர் தேவி.
இவர் காலை வாக்கிங் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் இருந்த நகையை பறித்தனர்.
அதிர்ச்சி அடைந்த தேவி நகையை பறித்த வாலிபர் கையை கடித்தார். இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர்.
இதை பார்த்த பொதுமக்கள் 2 வாலிபர்களை பிடிக்க முயன்றனர். உடனே 2 பேரும் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓடினார்கள்.
பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் பனையூர் ராஜீவ்காந்தி தெருவைச் சேர்ந்த யோகஷ்வரன், வெட்டு வாங்கேணி கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பதும் இருவரும் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிப்பதும் தெரியவந்தது.
இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப் பறியில் ஈடுபட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலக வளாகத்தில் தேர்தல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த தேர்தல் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குப்பட்டவர்களின் வாக்காளர் பட்டியல் மற்றும் புதிதாக வாக்காளர்களாக சேர விண்ணப்பிக்கப்பட்ட வாக்காளர் படிவங்கள் உள்ளன.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை பார்த்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றனர். இரவு 12 மணியளவில் திடீர் என இந்த அலுவலகம் தீ பிடித்து எரிந்தது.
தகவல் அறிந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் அங்கு இருந்த வாக்காளர் பட்டியல்கள், 6 கம்ப்யூட்டர்கள், 1 டேப்லாப், 3 பிரிண்டர்கள் ஆகியவை எரிந்து நாசம் ஆனது.
மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா? அல்லது வேறு காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தேர்தல் அலுவலகம் அருகில்தான் நில அளவை பிரிவு தாலுகா அலுவலகம் உள்ளது. இதில் தீ பரவுவதற்குள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் இருந்து மு.க. அழகிரி இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. இதில் குறுக்கிட மாட்டேன் என்றார்.
அப்போது நிருபர்கள், உங்களுடைய ஆதரவு தி.மு.க.வுக்கு இல்லையென்றால் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? என்று கேட்டனர். அதற்கு மு.க.அழகிரி, ‘நல்லோர் பக்கம் நான் இருப்பேன்’ என்று கூறி விட்டு காரில் புறப்பட்டு சென்றார்.
முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 2,600 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை சவுதி அரேபியாவில் இருந்து 162 பெண்கள் உள்பட 341 பேருடன் முதல் விமானம் சென்னை வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். உறவினர்கள் அவர்களை கட்டித்தழுவி வரவேற்றனர்.
திருவான்மியூர்:
பெசன்ட்நகர் ஓடை குப்பத்தை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (38). மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல்காரராக பணி புரிந்து வந்தார்.
இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தன்னுடன் பணிபுரியும் 10 ஊழியர்களுக்கு விருந்து கொடுக்க நினைத்தார்.
இதை தொடர்ந்து நேற்று இரவு மைக்கேல் 10 பேருடன் நீலாங்கரை அக்கரையில் தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பண்ணை வீட்டிற்கு வந்தனர்.
பின்னர் அனைவரும் மது அருந்தினர். போதையில் மைக்கேல் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தார். அப்போது மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
நீலாங்கரை போலீசார் விரைந்து சென்று மைக்கேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்:
பழவந்தாங்கலில் நங்கநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் பாபு. பில்டிங் காண்டிராக்டர், அதே பகுதியை இந்து காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50). இவரும் பில்டிங் காண்டிராக்டர்.
இந்நிலையில் தனது தொழில் தேவைக்காக ஸ்ரீதர் சுரேஷ்பாபுவிடம் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார்.
ஆனால் வாங்கி கடனை திருப்பி செலுத்தவில்லை. சுரேஷ்பாபு கடனை திருப்பி கேட்ட போது ஸ்ரீதர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து சுரேஷ்பாபு பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பண மோசடி செய்த ஸ்ரீதரை கைது செய்தனர்.






